Published : 06 Oct 2022 04:05 AM
Last Updated : 06 Oct 2022 04:05 AM

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு 500 கவுரவ விரிவுரையாளர் - உயர்கல்வித் துறை திட்டம்

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 500 கவுரவ விரிவுரையாளர்களை மீண்டும் பணியமர்த்த உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 58 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஆசிரியர் காலிபணியிடங்கள் அதிகளவில் இருந்ததால் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளே தொகுப்பூதியத்தில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை பணியமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி மாநிலம் முழுவதும் 1,311 கவுரவ விரிவுரையாளர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரிந்தனர். இதற்கிடையே அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தகுதியான 1,024 பட்டதாரிகள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்.28-ம் தேதி அவர்களுக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதால், 1,311 கவுரவ விரிவுரையாளர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும், ஏதேனும் கவுரவ விரிவுரையாளர் பணியிடம் தேவைப்பட்டால், அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து புதிய படிப்புகள் அறிமுகம், பணி ஓய்வு உள்ளிட்டவற்றால் 600-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர் தேவைப்படுவதாக கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 500 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் பணியமர்த்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட இருப்பதாகவும், தற்போது பணி விடுவிப்பு பெற்ற 1,311 பேருக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x