Published : 02 Oct 2022 04:25 AM
Last Updated : 02 Oct 2022 04:25 AM

குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு பயிற்சி: இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

சென்னை

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோவை, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில், தமிழகத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கு அடுத்த ஆண்டு மே 28-ம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள அகில இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சி மையம் இலவச தங்கும் வசதி, உணவு, தரமான நூலகம், காற்றோட்டமுள்ள வகுப்பறைகள் ஆகியவற்றை வழங்குகிறது.

இப்பயிற்சி மையம் 225 முழு நேரத் தேர்வர்களையும், 100 பகுதி நேரத் தேர்வர்களையும் முதல்நிலைப் பயிற்சிக்காக அனுமதிக்கிறது.

அதே போன்று, அண்ணா நூற்றாண்டு குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையங்கள், கோவை, மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தலா 100 முழு நேரத் தேர்வர்களை முதல்நிலை தேர்வு பயிற்சிக்காக அனுமதிக்கின்றன.

2023-ம் ஆண்டில் மத்திய தேர்வாணையக் குழு (UPSC) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற விரும்பும் தமிழக மாணவர்கள் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுப் பயிற்சிமைய இணையதளம் www.civilservicecoaching.com வாயிலாக அக்.7 முதல் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையவர்கள் நவ.13-ம் தேதி நடைபெறும் நுழைவுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x