Published : 23 Sep 2022 04:40 AM
Last Updated : 23 Sep 2022 04:40 AM

ரூ.3,852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை

தமிழகம் முழுவதும் ரூ.3852 கோடியில் அரசு பள்ளிகள் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்த செந்தில் முருகன், உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கட்டிடங்கள் அதிகமாக உள்ளன. இதில் பெரும் பாலான கட்டிடங்கள், மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. மதுரை கொடிமங்கலத்தில் அரசு உயர்நிலைப் பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை அண்மையில் இடிந்து விழுந்தது.

எனவே தமிழகத்தில் அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்கள் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிம் அமைக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் 5,583 பள்ளிக் கட்டிடங்கள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. 2021-2022 ஆண்டில் சேதமடைந்த 2,553 பள்ளிக் கட்டிடங்கள் அகற்றப்பட்டன. 2022-2023 ஆண்டில் சேதமடைந்த 3,030 பள்ளிக் கட்டிடங்களை அகற்ற ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நபார்டு கடன் திட்டத்தில் ரூ.3745.28 கோடி செலவில் 6,941 பள்ளிகளில் 40,043 வகுப்பறைகள், 3,146 ஆய்வகங்கள், 10,470 கழிப்பறைகள், 5,421 குடிநீர் வசதிகள், 8,28,387 மீட்டர் சுற்றுச் சுவர் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

ரூ.106.78 கோடி செலவில் 2,695 பள்ளிகளில் 32 வகுப்பறைகள், 2 ஆய்வகங்கள், 436 கழிவறைகள், 2,270 பள்ளிகளுக்கு குடிநீர் வசதி கள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டிருந்தது. இதைப் பதிவு செய்து கொண்டு மனுவை முடித்து வைத்து நீதி பதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x