Published : 22 Sep 2022 04:10 AM
Last Updated : 22 Sep 2022 04:10 AM
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆக.20-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக நடைபெற்ற சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 668 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
இதையடுத்து பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்.10-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 12,294 மாணவர்கள் பங்கேற்றதில், 9,502 பேருக்கு மட்டுமே இடங்கள் உறுதி செய்யப்பட்டன. இதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 252 பேருக்கும், தொழிற்கல்வி பிரிவில் 953 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை கடிதம் செப்.15-ம் தேதி இணையவழியில் வழங்கப்பட்டது.
அக்கடிதம் பெற்றவர்கள் 7 நாட்களில் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில் மாணவரின் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு, அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்று கலந்தாய்வில் சேர்க்கப்படும்.
அதன்படி முதல் சுற்றில் சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேருவதற்கான காலஅவகாசம் இன்றுடன் (செப்.22) நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்கள் கல்லூரிகளிலோ அல்லது அரசு உதவி மையங்களிலோ கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT