Published : 11 Sep 2022 04:40 AM
Last Updated : 11 Sep 2022 04:40 AM

தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் 263 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி

தருமபுரி

தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து ‘நீட்’ தேர்வு எழுதிய 263 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் 107 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்தவர்களில் 1,468 மாணவ, மாணவியர் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வான, ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வித் துறை மூலம் தொடர்ந்து சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும், தேர்வுகளும் நடத்தப் பட்டு அவர்களின் திறன் பரிசோதிக்கப்பட்டு அதற்கேற்ப கூடுதல் பயிற்சிகளும் அளிக்கப் பட்டன.

நீட் தேர்வுக்கு 1,468 மாணவ, மாணவியர் தயாராகி வந்த நிலையில் தேர்வு நாளன்று 1,213 மாணவ, மாணவியர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவ, மாணவியரில் 263 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பண்டஅள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விஷ்ணுகுமார் 376 மதிப்பெண்கள் பெற்று, தருமபுரி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பிடித்துள்ளார்.

அதேபோல, களப்பம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் கவின் 369 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், பி.அக்ரஹாரம் அரசு மேல் நிலைப் பள்ளி மாணவர் சரண் 363 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

இவர்களில், 67 பேருக்கு, அரசுப் பள்ளிகளுக்கான 7.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்க்கை கிடைக்கும் என கல்வித்துறை அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் 36 பேர் மட்டுமே நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்த நிலையில் நடப்பு ஆண்டில் 263 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x