Published : 08 Sep 2022 04:45 PM
Last Updated : 08 Sep 2022 04:45 PM
எழுத்தறிவில்லாத பாமர மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் சரியாக சென்றடைய, நலத்திட்டங்களின் விழிப்புணர்வு மக்களிடம் வளரவும், வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் வாழ்வாதாரம் அறிவு சார்ந்து உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் எழுத்தறிவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.
2011-ஆம் ஆண்டு இந்தியப் புள்ளி விவரம், ஆண்களில் 80%, பெண்களில் 65.5% கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள் என்று கூறுகின்றது. இந்தியாவில் தற்போதைய எழுத்தறிவு 77. 7% ஆக இருந்து வருகிறது.
நாட்டில் நாளுக்கு நாள் எழுத்தறிவு பெறுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆரோக்கியமான சூழல்தான். ஆனால், கிராமப்புறங்களில் இன்னமும் எழுத்தறிவு பெறாத வயது வந்தோரை பார்க்க முடிகிறது. குறிப்பாக, கிராமபுறங்களில் 40%வரை பெண்கள் எழுத்தறிவு இல்லாதவர்களாக இருக்கின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டே தேசிய எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசும் - மாநில அரசும் கூர்செய்து வருகின்றன.
கொண்டாட்ட காரணம்: 1965-ல் செப்டம்பர் 8-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உலகம் நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் எழுத்தறிவின்மையால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், அவற்றை சரிசெய்வதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில், செப்டம்பர் 8-ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்ற தீர்மானமும் ஒன்று. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ செப்டம்பர் 8-ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது. அதனைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 8 ஆம் தேதி சர்வதேச எழுத்தறிவுத் தினமாக கொண்டாடப்படுகிறது.
புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம்: ‘புதிய இந்தியா எழுத்தறிவு திட்டம்’ என்ற வயது வந்தோருக்கான புதிய கல்வித் திட்டம் 2022-27-க்கு மத்திய அரசு அனுமதி அளித்து செயல்படுத்தி வருகிறது. இதில் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பட்ஜெட் அறிவிப்புகள் 2021-22-க்கு ஏற்றபடி வயதுவந்தோர் கல்விக்கான அனைத்து அம்சங்களும் அடங்கியிருக்கும். இந்த வயது வந்தோர் கல்வி மற்றும் வாழ்நாள் கல்வித் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரை செய்துள்ளது.
2021-22 நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, ஆன்லைன் கல்வி முறை உட்பட அதிகமான வசதிகளுடன் வயது வந்தோர் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அடிப்படைக் கல்வியறிவை மட்டும் அளிக்காமல், 21-ம் நூற்றாண்டு மக்களுக்குத் தேவையான வாழ்க்கைத் திறமைகள், தொழில் திறமைகள் மேம்பாடு, வேலைவாய்ப்பைப் பெறுதல் ஆகிய அம்சங்களைக் கற்பிப்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் ஆன்லைன் மூலம் அமல்படுத்தப்படுகிறது. பயிற்சி மற்றும் பயிலரங்குகள் நேரடியாக நடத்தப்படுகிறது. இதற்கான பாடங்கள் டிவி, ரேடியோ, செல்போன், செயலி, இணையளம் ஆகியவற்றில் டிஜிட்டல் முறையில் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். இந்த 5 ஆண்டு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திட்டத்தில் ஆண்டுக்கு 1 கோடி அளவில் 5 கோடி பேருக்கு ஆன்லைன் மூலம் தேசியத் தகவல் மையம், தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில், மற்றும் திறந்தவெளிப் பள்ளி தேசிய மையம் ஆகியவற்றுடன் இணைந்து கல்வி கற்பிக்கப்படும்.
புதிய இந்தியா எழுத்தறிவு திட்டத்துக்கான செலவு ரூ.1,037.90 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2022 முதல் 2027ம் ஆண்டு வரை ரூ.700 கோடி மத்திய அரசின் பங்கு. ரூ.337.90 கோடி மாநில அரசுகளின் பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் செயல்பாடு: வயது வந்தோர் கல்வியின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையிலும், மாநிலத்தின் எழுத்தறிவின்மையை முற்றிலும் அகற்றிடவும் தமிழக அரசு பல்வேறு வயது வந்தோர் கல்வி திட்டங்களை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 1976-ம் ஆண்டுமுதலே செயல்படுத்தி வருகிறது.
15 வயதுக்கு மேல் உள்ள, பள்ளி செல்ல முடியாத நபர்களுக்காக பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டத்தை சிறப்பான முறையில் தமிழக அரசு செயல்படுத்தி வருவதை கடந்த ஆண்டுகளில் கண்டிருப்போம். இதன்படி அடிப்படை எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அதற்கான சான்றுகள் வழங்கப்பட்டு, தொழில்முறை பயிற்சிகளும் வழக்கப்பட்டு வருகின்றன.
மேலும், வயதுவந்தோர் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 3 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 3 லட்சத்து 19 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த ஆண்டு 4 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு கல்வி பயிற்றுவிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.9 கோடியே 83 லட்சத்தை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் டிஜிட்டல் முறையில் பயிற்றுவிக்கவும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
எழுத்தாளரும், கல்வியாளருமான இரா. நடராஜன் கூறும்போது, “ஒரு காலக்கட்டத்தில் தமிழகத்தில் எழுத்தறிவு ஏற்படுத்துவதற்காக அறிவொளி இயக்கத்தை தமிழக அரசு மிக அற்புதமாக நடத்திக் காட்டியது. இந்த அறிவொளி இயக்கத்தின் மூலம் 59% சதவீதமாக இருந்த எழுத்தறிவை நாம் 99% மாற்றி காட்டினோம். தற்போது நமது கல்வியறிவு சதவீதம் 84%-ல் நிற்கிறது. அகில இந்திய சராசரியைவிட நாம் கூடுதலாகவே உள்ளோம். எனினும், நமது முழுமையான ஈடுபாட்டோடு மீண்டும் ஓர் அறிவொளி இயக்கம் நமது சமூகத்துக்கு தேவைப்படுகிறது.
கரோனாவினால் மாணவர்களிடம் கற்றல் சிக்கல் ஏற்பட காரணம், பெரும்பாலான பெற்றோர்களும் அதே நிலையில் இருப்பதால்தான். ஆகவே நாம் அறிவொளி இயக்கம் போன்ற திட்டத்தை மீண்டும் ஏற்படுத்தி, தமிழகத்தில் எழுத்தறிவை 100% ஆக காட்ட இதுதான் சரியான தருணம்” என்றார்.
அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தனஞ்செழியன் கூறும்போது, “முழுமையான கல்வியறிவு இல்லாவிட்டாலும் குறிப்பிட்ட எழுத்தறிவை நாம் பெற்றிருக்க வேண்டும் என்பது இந்தக் காலக்கட்டத்தில் அவசியமாகிறது. அந்த வகையில் கல்வியறிவையும், எழுத்தறிவையும் வளர்ப்பதில் தமிழகம் எப்போதும் இதில் முன்னோடியாகவே இருந்துள்ளது.
தமிழகம் அறிமுகப்படுத்திய எழுத்தறிவுத் திட்டங்கள் ஆக்கபூர்வமான மாற்றங்களை தமிழகத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. மாணவ தகவல் மையம் தொகுப்பு வந்த பிறகு மாணவர்கள் தொடர் விடுமுறை எடுத்தால்கூட அதற்கான காரணம் கேட்டு அரசு கூர்ந்து செயல்படுகிறது.
இல்லம் தேடி கல்வி திட்டமானது தமிழக கல்வி முறையில் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய தலைமுறைகளுக்கு எழுத்தறிவு முழுமையாக கிடைக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. 50 வயதை கடந்தவர்களுக்கு எளிய வாசிப்பு முறை உட்பட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவை எல்லாம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
எனது பள்ளிக்கு வரும் எந்த பெற்றோரும் கைநாட்டு இடுவதில்லை, கையெழுத்துத்தான் போடுகிறார்கள். இதுவே மிகப் பெரிய வெற்றியாகதான் நான் பார்க்கிறேன்” என்றார்.
இவ்வாறு எழுத்தறிவை வளர்த்தெடுப்பதில் ஆரோக்கியமான சூழல் காணப்பட்டாலும், அதனை தொடர்ச்சியாக எந்த இடைவெளியும் ஏற்படுத்தாமல் மக்களிடம் கொண்டு செல்ல அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் எழுத்தறிவு சதவீதத்தில் இந்தியா அதன் இலக்கை விரைவில் அடைந்து, கல்விசார் சமூகமாக உருமாறும்.
செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT