Published : 08 Sep 2022 07:07 AM
Last Updated : 08 Sep 2022 07:07 AM
புதுடெல்லி: பள்ளிகளின் மேம்பாட்டுக்காக, ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்ட பி.எம்.ஸ்ரீ (வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள பள்ளிகள் மட்டுமே இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, பள்ளிகளின் மேம்பாட்டுக் காக, ‘முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்’ என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது சுருக்கமாக ‘பி.எம்.ஸ்ரீ திட்டம்’ என அழைக்கப்படுகிறது. வளரும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள் (பிஎம்ஸ்ரீ பள்ளிகள்), தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம் சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இத்திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 14,500 பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.27,360 கோடி செலவிடப்படும். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.18,128 கோடி. இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
பி.எம். ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் கீழ் மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த நடவடிக்கை தொடங்கப்படும்.
மேம்பாட்டுக்கான நிதி, பள்ளிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவீதத்தை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்பதை பள்ளி முதல்வர்கள் தலைமையிலான குழுக்கள் முடிவு செய்யலாம். இதற்காக வெளிப்படையான நடைமுறை ஏற்படுத்தப்படும். நாட்டில் முதல்முறையாக இந்த வசதி பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கூறியபடி, அதிக அளவிலான செய்முறை பயிற்சிகள் மற்றும் முழுமையான கல்வி முறையை பின்பற்றும். பொம்மைகள் மூலம் விளையாட்டு அடிப்படையிலான கல்வி, கேள்வி கேட்கும் முறை, கண்டுபிடிப்பு சார்ந்த முறை, ஜாலியாக கற்கும் முறைகள் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் சேர பள்ளிகள் ஆன்லைன் மூலம் தானாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி, முதல் 2 ஆண்டு காலத்துக்கு, ஆண்டுக்கு 4 முறை ஏற்படுத்தப்படும். இதற்கான தேர்வு முறை 3 கட்டங்களாக குறிப்பிட்ட காலவரம்புடன் மேற்கொள்ளப்படும்.
முதல் கட்டமாக, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். இரண்டாம் கட்டத்தில், பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல் அடிப்படையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு தகுதியான பள்ளிகள் தேர்வு செய்யப்படும். நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பள்ளிகளுக்கு, நேரடி ஆய்வுகள் மூலம் சான்று அளிக்கப்படும்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வார்டுக்கு அதிகபட்சம் 2 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இந்தப் பள்ளிகள், பசுமை பள்ளிகளாகவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், ஊட்டச்சத்து தோட்டங்கள், கழிவு மேலாண்மை வசதிகள் உள்ளதாகவும், மழை நீர் சேமிப்பு வசதியுடனும் மேம்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT