Published : 05 Sep 2022 09:55 AM
Last Updated : 05 Sep 2022 09:55 AM
மறைந்த குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த திருநங்கை சஹானாவும் இந்த கல்விச் சேவையில் இணைந்துள்ளார்.
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் உள்ள செயின்ட் வின்சென்ட் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் சஹானா. அவரை சந்தித்தபோது அவர் நம்மிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கடவனூர் கிராமம் எனது சொந்த ஊர். எம்.எஸ்சி., எம்.எட்., படித்துவிட்டு ஆசிரியராகும் விருப்பத்தால் ஏராளமான பள்ளிகளில் விண்ணப்பித்தேன். ஆனால், திருநங்கை என்பதால் வாய்ப்பு மறுக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்குபின் இந்த பள்ளியில் பணிவாய்ப்பு கிடைத்தது.
முதலில் அலுவலகப் பணியாளராக பணியாற்றிவிட்டு, வாரத்துக்கு 2 வகுப்புகள் மட்டும் எடுக்க அனுமதிக்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்டதால் 9, 10-ம் வகுப்புக்கு அறிவியல் ஆசிரியையாக நியமிக்கப்பட்டுள்ளேன்.
முதலில் பாடம் எடுக்கும்போது மாணவர்களிடம் சில தயக்கங்கள் இருந்தன. அதன்பின் நான் கடந்து வந்த பாதையை எடுத்துக் கூறி அவர்களிடம் இயல்பாக பழக ஆரம்பித்தேன். தற்போது மாணவர்கள் மட்டுமில்லாது சக ஆசிரியர்கள் உட்பட பள்ளியில் அனைவரும் எனக்கு உரிய மரியாதை வழங்கி சமமாக பழகுகின்றனர்.
இதுவே எனக்கு பணியாற்றுவதில் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. என்னை பொருத்தவரை ஒரு அறிவியல் ஆசிரியராக ஆண், பெண் என இருபாலரின் பிரச்னையையும் புரிந்துகொள்ள முடியும். இது மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த உதவியாக உள்ளது.
அதேநேரம் பொது சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பற்றிய முழுமையான புரிதல் இருப்பதில்லை. அதுவே, திருநங்கைகள் மேம்பாட்டுக்கு தடையாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும்.
அதற்கு தாழ்வு மனப்பான்மையை விடுத்து, சமூக அழுத்தத்தை புறந்தள்ளி முன்னேற வேண்டும். கல்வி, தொழில் சார்ந்தவைகளில் அரசால் வழங்கப்படும் உதவிகளை பயன்படுத்திக் கொள்வது அவசியம்.
அதேபோல் பெற்றோர், நண்பர்கள் ஆதரவும் முக்கியம். மூன்றாம் பாலினத்தில் பலர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர். அவர்களின் திறமை, அறிவை நிச்சயம் அங்கீகரிக்க வேண்டும். வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். எங்களை போன்றவர்களை முன்மாதிரியாக வைத்து பலரும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல வேண்டும்.
மேலும், ஒரு ஆசிரியராக எனது மாணவர்களின் முன்னேற்றத்துக்கும் வழிகாட்டுதலாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். முன்னேறி வரும் மூன்றாம் பாலினம் என்பதற்கான அடையாளங்களாக சஹானாக்கள் திகழ்கின்றனர். பொதுச் சமூகத்தின் அக்கறை அவர்களின்பால் திரும்புவதும் அவர்களை இன்னும் உயர்த்துவதும் காலத்தின் கட்டாயம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT