Published : 04 Sep 2022 04:24 PM
Last Updated : 04 Sep 2022 04:24 PM

“மாணவர்களை சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான்” - வைகோ ஆசிரியர் தின வாழ்த்து

வைகோ | கோப்புப் படம்.

சென்னை: மாணவர்களை, சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"குலன் அருள் தெய்வம் கொள்கை மேன்மை
கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை
நிலம்மலை நிறைகோல் மலர்நிகர் மாட்சியும்
உலகியல் அறிவோடு உயர்குண மினையவும்
அமைபவன் நூலுரை ஆசிரியன்னே"

என்று நன்னூல் ஆசிரியர்க்கு இலக்கணம் வகுத்துள்ளது. நிலம், மலை, நிறைகோல், மலர் போன்றவை உணர்த்தும் பொறுமை, உயர்வு, நடுவுநிலைமை, அனைவராலும் மதிக்கக்கூடிய பண்பு ஆகியவை கைக்கூடியவராக ஆசிரியருக்கு மேன்மை தருவனவாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர்களை போற்றும் வகையில், ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது.

ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய இந்திய குடியரசு முன்னாள் தலைவர், டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம்.

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத் தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள்தான்.

மாணவர்களை பட்டைத் தீட்டி வைரமாக ஒளிர செய்ய ஒரு சிறந்த ஆசிரியரால்தான் முடியும். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு இதயமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x