Published : 28 Aug 2022 04:09 AM
Last Updated : 28 Aug 2022 04:09 AM
சென்னை: தமிழகத்தில் பொறியியல் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத் தின்கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கியது.
முதல்கட்டமாக, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், 668 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் நடைபெறவிருந்த பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு, நீட் தேர்வுகள் முடிவுகள் தாமதம் காரணமாக தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், நீட் தகுதித் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது.
இதையடுத்து, பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி முதல் நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 10 முதல் நவம்பர் 13-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடத்தப்படும்.
ஒவ்வொரு பிரிவிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும். முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தபின், காலி பணியிடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெறும். எஸ்.சி., எஸ்.சி.ஏ வகுப்புக்கான கலந்தாய்வு நவ. 19, 20-ம் தேதிகளில் நடைபெறும்.
`நான் முதல்வன்' திட்டத்தின் அடிப்படையில் பொறியியல் மாணவர்களுக்கான பாடத் திட்டம் மாற்றப்பட்டு, தமிழ் மொழிப் பாடமும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆக. 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்கலை. துணைவேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதில், அரசுக் கல்லூரிகளில் இடங்களை அதிகரிப்பது, கலை, அறிவியல் படிப்புக்கான பாடத் திட்டம் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்து, முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், அனைத்துவித பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத் திட்டத்தைக் கொண்ட தமிழ், ஆங்கிலப் பாடங்களும் அமல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT