Published : 13 Aug 2022 06:52 AM
Last Updated : 13 Aug 2022 06:52 AM
புதுடெல்லி: நீட், ஜே.இ.இ. தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்று பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர தேசிய அளவில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல என்.ஐ.டி., ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய தொழிற்கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர கியூட் என்றழைக்கப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு.இ.டி.) நடத்தப்படுகிறது.
43 லட்சம் மாணவர்கள்
இந்த சூழலில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானிய குழு தலைவர் ஜெகதீஷ் குமார் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் நீட், ஜே.இ.இ., கியூட் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த 3 தேர்வுகளையும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) நடத்தி வருகிறது. மூன்று நுழைவுத் தேர்வுகளையும் ஆண்டுதோறும் சராசரியாக 43 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். மிக அதிகபட்சமாக நீட் நுழைவுத் தேர்வில் ஆண்டுதோறும் சுமார் 19 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். நீட் தேர்வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களும், ஜே.இ.இ. தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களும் இடம்பெறுகின்றன. கியூட் தேர்வில் இந்த பாடங்கள் அனைத்திலும் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
ஒரே பாடத்தை பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்காக படிக்க வேண்டியிருப்பதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தேர்வு தேதி மற்றும் தேர்வு மையங்கள் ஆகியவற்றாலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே மாணவர்களின் நலன் கருதி நீட், ஜே.இ.இ. தேர்வுகளை கியூட் தேர்வுடன் இணைக்க ஆலோசித்து வருகிறோம்.
ஆண்டுக்கு இருமுறை தேர்வு
மூன்று நுழைவுத் தேர்வுகளுக்கு மாற்றாக ஒரே நுழைவுத் தேர்வினை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர் விரும்பிய படிப்பில் சேர நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்டுக்கு இரு முறை பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிந்த உடன் முதல் நுழைவுத் தேர்வு நடைபெறும். இதன்பிறகு டிசம்பரில் 2-வது நுழைவுத் தேர்வு நடத்தப்படும். புதிய திட்டம் தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில் நிபுணர் குழு அமைக்கப்படும். இதில் அனைத்து துறைகளை சேர்ந்த நிபுணர்களும் இடம் பெறுவார்கள். அவர்கள் அளிக்கும் பரிந்துரைகளுக்குப் பிறகு கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்படும். நிபுணர்களின் பரிந்துரை, கருத்து கேட்பு கூட்டங்களில் பெறப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வு திட்டம் வரையறுக்கப்படும்.
நீட், ஜே.இ.இ., கியூட் நுழைவுத் தேர்வுகளில் என்சிஇஆர்டி பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்போதைய நிலையில் நீட் நுழைவுத் தேர்வு மட்டும் ஓ.எம்.ஆர். அடிப்படையில் நடத்தப் படுகிறது. மற்ற இரு நுழைவுத் தேர்வுகளும் கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது.
அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்
மூன்று நுழைவுத் தேர்வு களையும் ஒன்றிணைத்து நடத்தப் படும் பொது நுழைவுத் தேர்வு கணினி வழி தேர்வாக நடத்தப்படும்.இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் மருத்துவம் அல்லது பொறியியல் படிப்பில் சேரலாம். இரண்டும் கிடைக்கவில்லை என்றால் மத்திய பல்கலைக்கழகங்களில் சேரலாம். அடுத்த கல்வியாண்டே பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற் கொள் ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT