Published : 25 Jul 2022 10:37 PM
Last Updated : 25 Jul 2022 10:37 PM
அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிஎஸ்சி-ஐடி முதலான பாடப் பிரிவுகளுக்கு போட்டி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 1ம் தேதிக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டாகவே பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பிட்ட ஒரு பாடத்தில் பட்டம் பெற்று, போட்டித்தேர்வு எழுதி அரசு பணிக்கு முயற்சிப்பது. பிஎட், கணினி போன்ற கூடுதல் தகுதியை வளர்த்துக்கொண்டு தனியார் நிறுவனங்களில் வேலைக்கு போகலாம் என, திட்டமிடுகின்றனர். இதன் காரணமாக ஆண்டுதோறும் பிகாம், பிஏ, ஆங்கிலம், பிஎஸ்சி ஐடி, இயற்பியல், வேதியியல், மைக்ரோ பயலாஜி உட்பட கலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.
இவ்வாண்டுக்கான பிளஸ்-2 தேர்வு முடிவு ஜூன் 20-ம் தேதி வெளியான நிலையில், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 90 சதவீதம் முடிந்து, வகுப்புகளை திறக்க தயராகி விட்டன. இருப்பினும், சிபிஎஸ்இ தேர்வு முடிவு தாமதத்தால் ஒவ்வொரு பாடப்பிரிவிலும், 5 முதல் 10 சதவீதம் இடங்களை தனியார் கல்லூரிகள் நிரப்பாமல் நிறுத்தி வைத்திருந்தன.
கடந்த வாரம் தேர்வு முடிவு வெளிவந்ததால் அரசு உதவி பெறும், தனியார் கல்லூரிகளில் ஓரவுக்கு மாணவர் சேர்க்கை முடிந்தாகி விட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் சுய நிதி பிரிவு பாடங்களுக்கான சேர்க்கையும் நிறைவு பெற்றுதாக கூறப்படுகிறது. விரைவில் முதலாமாண்டு வகுப்புகளை திறக்கும் நடவடிக்கையில் முதல்வர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 27ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. இதற்கு பிறகு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி வெளியாகும் சூழல் உள்ளது.
அரசுக் கல்லூரிகளை நம்பிய ஏழை, நடுத்தர மாணவர்கள் பிற அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2வது சுழற்சி மற்றும் தனியார் கல்லூரிகளில் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர வாய்ப்பு கிடைத்தாலும், கட்டணத்தை கருத்தில் கொண்டு சேர முடியாமல் காத்திருக்கின்றனர். அரசு கல்லூரிகளில் விரைவில் கலந்தாய்வு நடத்தவேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து அரசு கல்லூரி முதல்வர்களிடம் கேட்டபோது, ‘‘அரசு கலை, அறிவியல் கல்லூரிக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை குறித்த ஆன்லைன் விண்ணப்ப விவரம் மொத்தமும் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் சேகரிக்கப்படுகிறது. இன சுழற்சி இடஒதுக்கீடு முறை குறித்த ரேங்க் பட்டியல் வெளியீடு தொடர்பாக உயர் கல்வித் துறை வழிகாட்டுதலின்படி, ஆகஸ்டு 1ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் முன்னுரிமை ஒதுக்கீடு மாணவர் சேர்க்கை முடிந்தபின், 3ம் தேதிக்கு மேல் பிற ஒதுக்கீடுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் எப்போதும் போன்று இவ்வாண்டும் அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம், பிபிஏ, பிஎஸ்சி ஐடி, கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனர். குறிப்பிட்ட சில பாடத்தை படிக்க விரும்பியவர்கள் கட்டணத்தை பொருட்படுத்தாமல் 2-வது சுழற்சிக்கும் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT