Published : 24 Jul 2022 07:43 AM
Last Updated : 24 Jul 2022 07:43 AM

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்கலை. கல்லூரிகளில் சிறப்பு போட்டிகள் - பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பிய கடிதம்:

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி’ எனும்பெயரில், ஆக.13, 14, 15-ம் தேதிகளில் அனைவரது வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.

இதற்கு ஒரு வாரம் முன்னதாக, மாணவர்கள் மத்தியில் சுதந்திர தினம் குறித்த தாக்கம், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்கலை., கல்லூரிகளில் கட்டுரை, ஓவியம், பாட்டு போட்டிகள் நடத்த வேண்டும். அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் வீதி நாடகம், பஜனை நடத்தி, அந்த நிகழ்வுகளின்போது தேசியக் கொடியை பரிசளிக்க வேண்டும். இதற்கான தேசியக் கொடிகளை www.harghartiranga.com இணையதளத்தில் வாங்க வேண்டும்.

தேசியக் கொடிகளை பயன்படுத்துவதற்கான நடைமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். அனைத்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களும், ‘அனைவர் வீட்டிலும் தேசியக் கொடி’ பிரச்சாரம் குறித்த விவரத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் தெரிவித்து, அவர்களது வீடுகளில் தேசியக் கொடியைஏற்றச் செய்து, இப்பிரச்சாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் இந்த பிரச்சாரத்தில் பங்கெடுத்ததற்கான வீடியோ பதிவுகளை தங்களது ட்விட்டர், யூ-டியூப், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கங்களில் பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இதுதொடர்பான திட்ட அறிக்கையை பல்கலைக்கழக செயல்பாடு கண்காணிப்பு முகப்பில் (யுஏஎம்பி) ஜூலை 25-ம் தேதிக்குள் பதிவிட வேண்டும். இவ்வாறுஅதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x