Published : 23 Jul 2022 05:19 AM
Last Updated : 23 Jul 2022 05:19 AM
சென்னை: அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் ஜூலை 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக்கல்வி இயக்குநர கம் மூலம் ஆக.16 முதல் அக்.14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு தாமதம் காரணமாக பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளின் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப் பட்டு வந்தது.
இந்நிலையில் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஜூலை 27-ம் தேதி வரை சமர்ப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப் பட்டுள்ளது.
இதற்கிடையே, பொறியியல் சேர்க்கையில் விளையாட்டுப் பிரிவுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை. வளாகத்தில் ஆக.1 முதல் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT