Published : 21 Jul 2022 04:09 PM
Last Updated : 21 Jul 2022 04:09 PM
கோவை: நடப்பு கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீட்டின்கீழ் சேர இஎஸ்ஐ காப்பீடுதாரர்களின் வாரிசு சான்று பெற வரும் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை இ.எஸ்.ஐ.சி சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) கே.ரகுராமன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இஎஸ்ஐ திட்டத்தின்கீழ் நாட்டின் பல்வேறு இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகளில், இஎஸ்ஐ காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் குழந்தைகள் காப்பீட்டு நபர் இடஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை, கோவை உட்பட்ட நாடு முழுவதும் 437 எம்பிபிஎஸ், 28 பிடிஎஸ் இடங்கள் இஎஸ்ஐ காப்பீட்டு நபர்களின் குழந்தைகளுக்காக இஎஸ்ஐசி- ஆல் நடத்தப்படும் கல்லூரிகள், இஎஸ்ஐசி சார்பாக உள்ள கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. நீட் தரவரிசைப்பட்டியல், இஎஸ்ஐசி வழங்கு தகுதி சான்று (காப்பீட்டு நபர் வாரிசு சான்று) அடிப்படையில் மாணவர்களின் சேர்க்கை அமையும்.
விண்ணப்பதாரர்கள் காப்பீட்டு நபர் வாரிசு சான்றிதழை பெற இஎஸ்ஐசி-ன் www.esic.nic.in என்ற இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம். காப்பீட்டு நபர் வாரிசு சான்று பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு வரும் 26-ம் தேதி வரை செயல்படும்.
சம்மந்தப்பட்ட இஎஸ்ஐசி கிளை அலுவலகத்தில் விண்ணப்பத்தை வரும் 27-ம் தேதி மாலை 5.45 மணி வரை நேரில் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை இஎஸ்ஐசி இணையதளம் அல்லது www.mcc.nic.in என்ற இணையதளத்திலோ, தங்களது இஎஸ்ஐசி-ன் கிளை அலுவலகத்தையோ அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT