Published : 15 Jul 2022 05:01 PM
Last Updated : 15 Jul 2022 05:01 PM
“பாடப்பகுதி எதனையும் படிக்காமல், அதனது அடிப்படை புரியாமல், தேர்வுகள் எதனையும் எழுதாமல், ஆசிரியர்களை இரண்டு ஆண்டுகளாகச் சந்திக்காமல் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதன் விளைவு, இன்றைக்கு கற்றல் ஆர்வமின்மையும், நடத்தையில் மாறுதல்களையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றது” என்கிறார் கல்வியாளரும், ஆசிரியருமான சிகரம் சதீஷ். கற்றல், கற்பித்தல் குறித்து அவர் பகிர்ந்தவை:
“கற்றலின் தரம் என்பது பெரும்பாலும் கற்பிப்பவர்களின் கைகளில் இருக்கிறது. அது தனியார் பள்ளிகளில் மட்டுமே இருப்பதில்லை. கட்டிடங்களிலும், கணினிகளில் மட்டுமே அது கிடைப்பதுமில்லை.
பொதுவாக மாணவர்களின் கற்றல் தரம் என்பது அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் இவற்றுக்கிடையே நிறைய வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். அதனால் தனியார் பள்ளிகள் கற்பித்தலில் சிறந்து விளங்குகின்றன என அர்த்தமில்லை. அங்கு பயில்கின்ற மாணவர்களது குடும்பச் சூழலும், பெற்றோர்களது கல்விச் சூழலும் காரணமாய் அமைகின்றது.
அரசுப் பள்ளிகள் இல்லாதவர்களுக்கான பள்ளி மட்டுமல்ல, அது எல்லோருக்குமான ஜனநாயகப் பள்ளியாகச் செயல்படுகின்றது. இங்கு பயில்பவர்களில் பலருக்கு ஒருவேளை உணவுகூட பிரச்சினைதான். அப்படியானவர்களுக்கும் சேர்த்தே கற்பிக்கும்பொழுது, இங்கு சவால்கள் அதிகமிருக்கின்றன.
இயல்பான சூழலே இப்படி இருக்கும்பொழுது, உலகையே முடக்கிப்போட்ட கரோனா என்னும் பெருந்தொற்றுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மிக முக்கிய அம்சங்களில் ஒன்று கல்வி. அது தொடக்கநிலையில் தொடங்கி, மருத்துவக் கல்வி வரை மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முறையான நேரடிக் கல்விக்கு வாய்ப்பில்லாமல், இணைய வழியிலும், அதிலும் இணைய வழியில்லாமலும் மாணவர்களுடைய கற்றலில் மிகப்பெரும் தாக்கத்தை கரோனா நிகழ்த்தியிருக்கின்றது. தொடர்ச்சியான கற்றல் நிகழும்பொழுது அங்கு எதிர்பாராமல் ஏற்படும் இடைவெளி தொடர் கற்றலை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அது அடுத்தடுத்த நிலைகளிலும் வெளிப்படுகின்றது.
உதாரணமாக, 9ம் வகுப்பு படிக்கின்ற ஒரு மாணவன் 7 மற்றும் 8ம் வகுப்பை படிக்காமலே நேரடியாக 9ம் வகுப்பில் வந்து சேர்ந்தால் எப்படியிருக்குமோ அத்தகைய நிலையில் கற்றலானது காணப்படுகின்றது.
கற்றலோடு சேர்த்து மாணவர்களது கற்றுக்கொள்ளும் மனநிலையும் மாறுதலுக்கு உள்ளாகி இருக்கின்றது. பாடப்பகுதி எதனையும் படிக்காமல், அதனது அடிப்படை புரியாமல், தேர்வுகள் எதனையும் எழுதாமல், ஆசிரியர்களை இரண்டு ஆண்டுகளாகச் சந்திக்காமல் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதன் விளைவு, இன்றைக்கு கற்றல் ஆர்வமின்மையும், நடத்தையில் மாறுதல்களையும் மாணவர்களிடம் ஏற்படுத்தி இருக்கின்றது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நேரடித் தேர்வுகள் வைக்க அரசு தயாரான நேரத்தில், எங்களுக்கு நேரடித் தேர்வுகள் வைக்கக் கூடாது. இணையவழியில்தான் தேர்வு வைக்க வேண்டும் எனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துமளவிற்கு மாணவர்களது மனநிலையில் மாற்றம் பெற்றதை நாம் இங்கு கவனிக்க வேண்டியதாகி இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்களைக் கையாளுதல் என்பதும் ஆசிரியர்களுக்குப் பெருத்த சவாலானதாக இன்றைக்கு மாற்றம் பெற்றிருக்கின்றது.
கரோனா கால இடைவெளியை நிரப்ப வந்த தொழில்நுட்பங்களை, இன்றைக்கு ஆசிரியருக்கு முந்தைய நிலையில் வைத்துப் பார்க்கப்படத் தொடங்கப்பட்டுவிட்டதாலும், ஆசிரியர்கள் அத்தனை பேருக்கும் கற்பித்தலுக்கு நேரடியாகப் பயனளிக்காத பல்வேறு தொழில்நுட்பச் செயல்பாடுகளோடு, அரசின் புள்ளிவிபரங்களுக்காக ஆசிரியர்கள் முடங்கிக் கிடப்பதாலும் கற்பித்தலும் முழுதாக நடக்கவில்லை. கற்றலும் பெரிதாகச் சிறக்கவில்லை.
இதனைச் சரிசெய்ய என்ன செய்ய முடியும்? வழி இருக்கின்றதா? எனக் கேட்டால், வாய்ப்பிருக்கிறது என்றே சொல்லுவேன். பட்டனைத் தட்டினால் பல்பு எரிவதைப்போல, இதனை உடனே சரிசெய்துவிட முடியாது.
அரசாங்கத்திற்கு கூடுதல் அக்கறையும், ஆசிரியர்களுக்குப் பொறுமையும், கொஞ்சம் காத்திருப்பும் தேவை என்பதே உண்மை.
முதலில் உடனடிதேவை ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் சுதந்திரம். கற்பித்தல் பணியைத் தவிர, குறிப்பிட்ட காலத்திற்கு வேறு எந்தப் பணிகளிலும் ஆசிரியர்களைத் திணிக்கக்கூடாது.
மாணவர்களுக்கு தான் விரும்பிய வகையில் கற்பிக்க ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகால கரோனா இடைவெளியில், மாணவர்களுக்கு கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளதைக் கவனிக்கும் அதேவேளையில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிக அதிகரித்திருக்கின்றது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏற்கெனவே இருக்கின்ற மாணவர்களின் கற்றல் இழப்புகளையே சரிசெய்யப் போராடிக்கொண்டிருக்கும் பொழுது, கூடுதலாகச் சேர்ந்திருக்கின்ற மாணவர்களுக்கு உரிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்காமல் நாம் இன்னும் நிதிநிலையைக் காரணம் சொல்லிக் கொண்டிருப்போமேயானால், கற்றல் பாதிப்பு இன்னும் அதிகமாகுமே தவிர, சிறிதும் குறையாது.
இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களை நேரடியாக பள்ளிகளுக்கே வரவழைத்து, பள்ளி நேரம் முடிந்தபிறகு, குறைதீர் கற்றலைச் சரிசெய்யப் பயன்படுத்தலாம். அது சரியான பலனைக் கொடுக்கும். ஆசிரியர்கள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலை நேரத்தை நடப்பு ஆண்டுக் கல்விக்கும், மாலை நேரத்தை கடந்த ஆண்டில் விடுபட்ட பாடப்பகுதிகளையும் கற்பிக்கும் வண்ணம் கற்பித்தலை மாற்றியமைப்பது பலனளிக்கும்.
அதுவரை பாடத்திட்டம் எழுதுதல், இணையவழிப் புள்ளி விபரங்கள் அளித்தல் என எல்லாவற்றுக்கும் பை-பை சொல்லி, மாணவர்களுக்கு மகிழ்வான கற்றலை மகிழ்ச்சியுடன் கற்பிக்கும் சுதந்திரமான கற்பித்தலுக்கு வெல்கம் சொல்லலாம்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT