Published : 14 Jul 2022 08:12 PM
Last Updated : 14 Jul 2022 08:12 PM

தாய்மொழிப் பாடம் வெற்றுப் பெருமைக்காக அல்ல... பாடவேளைகள் குறைப்பு சரியா?

புதிய கல்வியாண்டு பிறந்ததும், பாடவேளைகளில் மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மொழிப்பாடத்துக்கான பாடவேளைகள் வாரத்துக்கு ஏழாக இருந்ததை மாற்றி, ஆறு பாடவேளைகள் போதும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கல்வியாளர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியிலும் குழப்பத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேவை நேரடிப் பயிற்சி: பொதுவாக, 10 ஆம் வகுப்பு முடித்து வெளிவரும் மாணவர்கள், தமிழ்ப் பெருங்கவிகளாக வந்துவிடுவார்கள் எனும் எதிர்பார்ப்பு யாருக்கும் இருப்பதில்லை. பிழையின்றி எழுதும் திறனும், தெளிவான உச்சரிப்புடன் பேசும் திறனும் இருந்தாலே போதும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு மொழிப்பாடத்தில் கூடுதலான எழுத்துப் பயிற்சியும், பேச்சு – உச்சரிப்புப் பயிற்சியும் தேவைப்படும். இதற்கு, நான் படித்த காலத்திலும் தமிழாசிரியராகப் பணியாற்றிய காலத்திலும், வகுப்பில் நடத்தி முடித்த பாடத்தை ஒவ்வொருவராகச் சத்தம் போட்டு வாய்விட்டுப் படிக்கவைத்துப் பயிற்சி எடுக்கச் சொல்வது வழக்கம்.

ஊக்கமாத்திரை தந்தால் போதும்: தமிழைப் பிழையின்றியும் அழகாகவும் எழுதிவரும் மாணவர் ஏடுகளில் ‘நன்று’ என்று எழுதிக் கையொப்பமிட்டால் போதும். அது மாணவர் படிப்பில் மிகப்பெரிய உற்சாகத்தை நிகழ்த்துவதைக் கண்கூடாகக் காணலாம். அதன் பிறகு, அந்த ஒன்றை - நன்றைக் காப்பாற்றிக்கொள்ள, தேவையான பயிற்சியை மாணவர்களே மேற்கொள்வார்கள்.

அவர்களே இன்னும் சிறப்பாக எழுதிவரும்போது ‘மிக நன்று’ எனும் ஊக்கமாத்திரை போதும். அது வாழ்நாள் முழுவதும் தமிழைப் பிழையின்றி எழுத வைத்துவிடும் என்பது எனது 34 ஆண்டுத் தமிழாசிரியர் பணி அனுபவம்.

இப்படிப் பாடம் நடத்தி, கேள்வி-பதில் உரையும் தந்து, மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சியும் தருவதற்கு ஆசிரியர்களுக்கு ஆர்வம் மட்டுமல்ல, நேரமும் அதிகம் தேவைப்படும். கட்டுரை ஏடுகள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் சுமையன்று, அவைதான் எழுத்துக் களம்! மாணவரின் சொல், பொருள் ஆற்றல் வளரவும் சிந்தனைக்கு வித்திடும் மொழிக் களமாக இருப்பதும் அதுதான்.

ஏராளமான எழுத்தாளர்கள், தலைவர்களின் வளர்ச்சியை இதற்கு உதாரணம் காட்ட முடியும். இதற்கு மொழிப் பாடவேளைகள் சற்றுக் கூடுதலாகத் தேவைப்படும்போது, கட்டுரைகளைக் குறைப்பதும் பாடவேளையைக் குறைப்பதும் எதிர்விளைவுகளையே ஏற்படுத்தும்.

ஆசிரியர்க்குத் தேவை பயிற்சி: இலக்கணத்தைக் கற்பிக்க ஆசிரியர்க்கே புதிய பயிற்சி தேவைப்படும்போது, மாணவர்க்கு அறிமுகப்படுத்த எவ்வளவு உழைப்பும் மாணவரோடு செலவிடும் நேரமும் தேவைப்படும் எனச் சொல்ல வேண்டியதில்லை.

வழிகாட்டும் மொழி: மற்ற பாடங்கள் எல்லாம் வேலைவாய்ப்புக்கானவை என்று சொன்னால், தமிழ்மொழிப் பாட வகுப்பு அதையும் தாண்டி வாழ்நாள் முழுவதும் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதும், பிழைப்பைத் தாண்டிய சமூக உணர்வோடு இருக்க வழிகாட்டுவதும் பண்பாட்டுப் படிப்புதான் என்பதைப் புரிந்துகொண்டால் மொழிப் பாடத்தின் அருமை புரியும்.

எழுத்துப் பிழை மட்டுமல்ல, அதைக்கூடச் சரிசெய்துவிடலாம். அதையும் தாண்டிய வாழ்க்கை பற்றிய கருத்துப் பிழைகளோடு மாணவர்கள் வெளிவந்தால், அது படிப்பு சார்ந்த பண்பாட்டில் நேர்ந்த பிழையன்றி வேறென்ன? சொல் வளமும் சிந்தனை வளமும் தாய்மொழிப் பாடத்தின் வழியாக மட்டுமே சாத்தியமாகும் என்பதே நிதர்சனம்.

இதனை நன்கு புரிந்துகொண்டால், தாய்மொழிப் பாடம் வெற்றுப் பெருமைக்காக அல்ல, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு அவசியமானது என்பது புரியும். அதற்குத் திட்டமிடுவதே இப்போதைய பள்ளிக் கல்விக்கு முதன்மைத் தேவை.

> இது, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் நா.முத்துநிலவன் எழுதிய இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x