Published : 14 Jul 2022 06:18 AM
Last Updated : 14 Jul 2022 06:18 AM

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா: 2,084 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்

சென்னை: சென்னை ஐஐடியின் 59-வது பட்டமளிப்பு விழா கிண்டியில் உள்ள அதன் மைய வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஐஐடி நிர்வாகக் குழு தலைவர் பவன் கோயங்கா தலைமை தாங்கினார். இயக்குநர் வி.காமகோடி முன்னிலை வகித்து, ஐஐடியின் ஆண்டறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.

பின்னர் இளநிலை, முதுநிலை, ஆய்வுப் படிப்புகளை முடித்த 2,084மாணவர்களுக்கு பட்டங்களை இயக்குநர் காமகோடி வழங்கினார்.இதுதவிர இந்திய குடியரசுத் தலைவர் விருது - மாணவர் மொகித் குமார், வி.னிவாசன் நினைவுவிருது - சி.கவுதம், டாக்டர் சங்கர்தயாள் சர்மா விருது - பிரஜ்வால் பிரகாஷ், கவர்னர் விருது - சாத்விக் ஆகிய மாணவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் பேசியதாவது.

நம்நாடு சுதந்திரம் பெற்றபின் கடந்த 75 ஆண்டுகளில் பொருளாதாரம் 100 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. தொழில்நுட்பத் துறையில் இந்தியா இந்த அளவுக்கு முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை யாரும் கணித்திருக்க மாட்டார்கள். இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இனிவரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும்.

மிகப்பெரிய மாற்றம் வரும்: நமது எதிர்கால வாழ்வில் டிஜிட்டல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற உள்ளது. குறிப்பாக அடுத்த 20 ஆண்டுகளில் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற தொழில்நுட்பங்கள் உதவியின்றி எந்த துறையிலும் வளர்ச்சி சாத்தியமில்லை.

இந்தியாவில் 23 சதவீத பெண்கள் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். வேலைவாய்ப்பின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, தண்ணீர் பற்றாக்குறை, தரமான கல்வி உட்படபல்வேறு பிரச்சினைகள் இந்தியாவில் இருப்பதை நாம் ஏற்க வேண்டும். எனினும், அந்த பிரச்சினைகளை சரிசெய்வதற்கான பல்வேறுவாய்ப்புகளும் நம்நாட்டில் உள்ளன. இந்திய நிறுவனங்களுக்கு உலகளவில் பெரும் மதிப்புள்ளது. அத்தகைய வாய்ப்புகளை இளம் தலைமுறையினர் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x