Published : 10 Jul 2022 09:15 AM
Last Updated : 10 Jul 2022 09:15 AM

நாகை மீன்வளப் பல்கலை. கல்லூரிகளில் மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் மீன்வள படிப்புகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.குமார் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் 10 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இந்தக் கல்லூரிகளில் 6 மீன்வளம் சார்ந்த 4 ஆண்டு பட்டப் படிப்புகள், 3 தொழிற்சார் பட்டப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இவற்றில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைநேற்று முன்தினம் தொடங்கியது. பல்கலைக் கழகத் துணைவேந்தர் கோ.குமார், மாணவர் சேர்க்கையைத் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி, பொன்னேரி, தலைஞாயிறு ஆகிய கல்லூரிகளில் இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.

நாகையில் உள்ள மீன்வள பொறியியல் கல்லூரியில் மீன்வளப்பொறியியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் என 2 பிரிவுகளில் இளநிலை தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகத்தின் சென்னை வாணியன்சாவடி ஓஎம்ஆர் வளாகத்தில் உள்ள மீன்வள உயிர் தொழில்நுட்ப நிலையம் மற்றும் சென்னை மாதவரம் வளாகத்தில் உள்ள மீன் ஊட்டச்சத்து மற்றும் உணவு தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றில் இளநிலை தொழில்நுட்பியல் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீன் வளர்ப்பு காப்பகம் மற்றும் தொழில் பயிற்சி இயக்கக வளாகத்தில் உள்ள மீன்வள வணிக மேலாண்மைப் பள்ளியில், இளநிலை வணிக நிர்வாகவியல் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஆண்டுகள் இளநிலை தொழிற்சார் பட்டப் படிப்புகளான மீன் பதன நுட்பவியல், மீன்பிடி நுட்பவியல் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆகியவை முறையே சென்னை மாதவரம், முட்டுக்காடு, மண்டபம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள தொழிற்கல்வி நிலையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கல்வியாண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு 333 இடங்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 21 இடங்களும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 14 இடங்களும், வெளிநாட்டினருக்கு 5 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்பில் 6 இடங்கள் சுயசார்பு பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.மீன்வளப் படிப்புகளில் சேர www.tnjfu.ac.inஎன்ற பல்கலைக் கழக இணையதளமுகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஆக.8. இதுகுறித்த விவரங்களுக்கு 04365 256430, 94426 01908 மற்றும் ugadmission@tnjfu.ac.in என்ற இமெயில் மூலமாக அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x