Published : 30 Jun 2022 04:53 AM
Last Updated : 30 Jun 2022 04:53 AM

திருச்சியில் ஜூலை 3-ம் தேதி ‘உயர்வுக்கு உயர்கல்வி’ நிகழ்ச்சி - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

சென்னை: பிளஸ்-2 படித்துவிட்டு, அடுத்த என்ன படிப்பது, எங்கே படிப்பது, எந்தப் படிப்புக்கு வேலைவாய்ப்பு அதிகம் என பல கேள்விகள் மாணவர்களுக்கு எழும்.

அத்தகைய மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்கும் வகையில் அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’உடன் இணைந்து `உயர்வுக்கு உயர்கல்வி’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சியை வரும் ஜூலை 3-ம் தேதி திருச்சியில் நடத்த உள்ளது.

இந்த நிகழ்ச்சி திருச்சி வயலூர் சாலையில், ரெட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள அமிர்தா வித்யாலயாவில் காலை 9 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இதில், தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவரும், விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவன (என்.ஐ.டி.) இயக்குநர் முனைவர் ஜி.அகிலா, என்.ஐ.டி. வாரங்கல் முன்னாள் மாணவரும், தொழில் வழிகாட்டல் நிபுணருமான பொறியாளர் ஆர்.அஸ்வின் ஆகியோர் பங்கேற்று, ஆலோசனைகளையும், வழிகாட்டுதலையும் வழங்குகின்றனர்.

இந்த நிகழ்வில், பிளஸ் 2 முடித்தபிறகு படிக்க வேண்டிய படிப்புகளான இன்ஜினீயரிங், பிசிக்கல் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேஷன், ஃபுட் சயின்ஸ், ஆங்கில மொழி, இலக்கியம் உள்ளிட்ட பாடங்கள் குறித்தும், இவ்வகை பாடங்களைப் படிப்பதால் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

வருங்காலத்தில் தொழில் மற்றும் தொழில்நுட்பம் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் அறிந்துகொள்ளலாம். அமிர்தாவின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வாய்ப்புடன், ரோபோக்கள் உட்பட மாணவர் திட்டக் கண்காட்சியையும் காணலாம்.

மேலும், தமிழ்நாடு இன்ஜினீயரிங் சேர்க்கை நடைமுறைகள் குறித்தும், AIEESE, JEE, BITSAT நுழைவுத்தேர்வுகளில் பங்கேற்கும் முறைகள் குறித்தும் அறியலாம். ஏரோ மாடலிங் மற்றும் ட்ரோன் செயல்பாடுகள் பற்றிய நேரடியான விளக்கக் காட்சிகளும் இடம்பெறுகின்றன.

இந்த நிகழ்வில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை. பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00743 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x