Published : 29 Jun 2022 01:19 AM
Last Updated : 29 Jun 2022 01:19 AM
சென்னையில் மிகவும் பெரிய பள்ளி, 2,400 குழந்தைகளுக்கு மேல் படிக்கக்கூடிய முஸ்லிம் மாணவிகள் பள்ளியொன்றில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமையாசிரியரே இல்லையாம். தலைமையாசிரியர் பணியிடமே இன்னும் உருவாக்கப்படாமல் இருக்கிறது. மிகப் பெரிய சவால் அது. அங்கு ஏராளமான ஆசிரியர் காலிப் பணியிடங்கள் இருந்தும் அரசு நியமிக்கவில்லை. அதைக் காட்டிலும், தலைமையாசிரியர் இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பள்ளி இயங்குகிறது என்றால், இதை எவ்வகையில் நோக்குவது? இது ஒரு உதாரணம்தான். நேர்மையான புள்ளிவிவரங்களைத் திரட்டினால், இதுபோன்ற ஏராளமான பள்ளிகளைக் கண்டறியலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில், ஒரு அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலவழி வகுப்பெடுக்க ஆசிரியர்கள் இல்லை என்று எட்டாம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படித்த பெரும்பாலான குழந்தைளைத் தமிழ் வழிக்கு மாற்றிவிட்டனராம். ஆசிரியர் நியமனம் இல்லை என்பதுதான் காரணம்.
எந்தப் பள்ளியை ஆய்வுசெய்தாலும் அங்கு பாட ஆசிரியர்கள் குறைவு, உடற்கல்வி, இசை, ஓவியம் இவற்றுக்குப் பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே இருப்பது, ஓராசிரியர் பள்ளிகள் என ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையாகவே இருப்பது பள்ளிக் கல்வியின் அவலமாகவே பார்க்கலாம்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றுவோரையும் நிரந்தர ஆசிரியர்களாக மாற்றுவதற்கு அரசு முன்வரவில்லை. இது மட்டுமல்ல, கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்த ஆறு லட்சம் குழந்தைகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இல்லை.
இப்படி ஆசிரியர்களே இல்லாத சூழல் தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் இருக்க, அங்கு ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்புவதுதான் கல்வி வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும். பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் வெளியே இருக்கும் நிலையில், தற்காலிகமாக அவர்களை நியமித்து, வெறும் 10 மாதங்களுக்கு ஊதியம் கொடுத்துக் கற்பித்தல் பணியில் ஈடுபடச் செய்வது ஏற்றுக்கொள்ளவே முடியாத செயல்.
ஏனெனில், புதிய அரசு அமைந்தவுடன் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று பெற்றோர்களும் ஆசிரியர்களும் வெகுவாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் அறவே இல்லை; முதுகலை ஆசிரியர் டிஆர்பி வழியாகத் தேர்வுகள் எழுதினாலும் எந்த ஆசிரியர் நியமனமும் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை.
ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாகிக்கொண்டு வந்தாலும் பணி நிரவலில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. இப்படியான சூழ்நிலையில், பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து முழு ஊதியம் அவர்களுக்குக் கொடுத்தால் தான் கற்பித்தலும் சிறப்பாக இருக்கும். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் அரசால் நியமிக்கப்பட்ட ஊதியத்திலும், மற்றொருவர் தொகுப்பு ஊதியமாக மிகக் குறைந்த அளவு ஊதியத்தையும் பெற்றுப் பணியாற்றுவது மோசமான ஏற்றத்தாழ்வு.
பள்ளி மேலாண்மைக் குழுக்கள் பள்ளிகளின் தேவைகளையும் பிரச்சினைகளையும் கண்டறிந்து சரிசெய்வதற்கு முக்கியக் காரணியாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவர்கள் கையிலேயே கல்விப் பொறுப்பையும் கொடுப்பது என்பது அரசு கல்விப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு கைகழுவும் வேலையைச் செய்கிறதாகத் தோன்றுகிறது. எதிர்காலத்தில், அரசுப் பள்ளியில் படிக்கக்கூடிய எந்தக் குழந்தைக்கும் கல்வி சார்ந்த எந்தப் பிரச்சினை வந்தாலும் அரசு இவர்களைத்தான் கைகாட்டும் என்பதில் ஐயம் இல்லை.
இப்போது நியமிக்கத் திட்டமிட்டிருக்கும் ஆசிரியர்களைத் தொகுப்பூதியத்தை வழங்கியும்கூட அரசு நிரந்தர ஆசிரியர்களாக அவர்களை நியமிக்கலாம். ஆரம்பத்தில் தொகுப்பூதியமாக வழங்கி, பின்னர் நிரந்தரமாக்கும் பணியை முன்னெடுக்க வேண்டும். அதுவே அறம்.
> இது,கல்விச் செயல்பாட்டாளர், சு.உமாமகேஸ்வரி, எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT