Published : 26 Jun 2022 07:20 AM
Last Updated : 26 Jun 2022 07:20 AM

போட்டித்தேர்வு தொடர் 24: அரசியலமைப்பு ஆணையங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள்

அரசியலமைப்பு ஆணையங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் தொடர்பான கேள்விகள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கேட்கப்படுகின்றன. அரசுப் பணிக்கு ஆசைப்படுபவர் மட்டுமல்ல, இந்தியாவின் ஒரு குடிமகனாகவும் அரசியலமைப்பு ஆணையங்கள், அமைப்புகளின் அதிகாரங்கள் பற்றி அறிந்துகொள்வது அவசியம்.

இந்த அமைப்புகள், அதிகாரிகள் குறித்து தெரிந்துகொள்வோம்

* இந்திய அரசியலமைப்பின்148-வது பிரிவின் கீழ் இந்தியாவின் பொதுக் கட்டுப்பாட்டாளர்.

* 324-வது பிரிவின் கீழ் இந்திய தேர்தல் ஆணையம்,

* 315-வது பிரிவின் கீழ் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC)/ தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (TNPSC).

* 280-வது பிரிவின் கீழ் இந்திய நிதி ஆணையம்.

* 338-வது பிரிவின் கீழ் அட்டவணை சாதிக்கான தேசிய ஆணையம்.

* 338A பிரிவின் கீழ் பட்டியலின, பழங்குடியினருக்கான தேசிய ஆணையம்.

* 338B பிரிவின் கீழ் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம்.

அரசியலமைப்பின் 338-2வது பிரிவின் திருத்தம் மற்றும் அரசியலமைப்பு (89-வது திருத்தம்) சட்டம் 2003-ன்படி புதிய பிரிவு 338A சேர்க்கையின் விளைவாக, பட்டியலின, பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் கடந்த 2004 பிப்.19-ம் தேதி உருவாக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 338A பிரிவு, பட்டியலின, பழங்குடியினருக்கான அரசியலமைப்பு பாதுகாப்பின் செயல்பாடுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், உரிய பரிந்துரைகள் வழங்குவதற்கும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் அளிக்கிறது.

தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம் -2005, ஒவ்வொரு பொது அதிகாரத்தின் செயல்பாட்டிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில், பொது அதிகாரிகளின் கட்டுப்பாட்டின்கீழ் தகவல் அணுகலைப் பாதுகாப்பதற்காக குடிமக்களுக்கு தகவல் பெறும் உரிமையை நிலைநாட்டுவதற்காக இயற்றப்பட்டது.

இச்சட்டத்தின் 13-வது பிரிவு, தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் பதவிக்காலம் மற்றும் சேவை நிபந்தனைகளை விளக்குகிறது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களின் சம்பளம், படிகள், பிற சேவை விதிமுறைகள், நிபந்தனைகள் முறையே தலைமை தேர்தல் ஆணையர். தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு சமமாக இருக்க வேண்டும்.

இதேபோல, இச்சட்டத்தின் 16-வது பிரிவு, மாநில தலைமை தகவல் ஆணையர், மாநில தகவல் ஆணையர்களின் பதவிக்காலம், சேவை நிபந்தனைகளை விளக்குகிறது. மாநில தலைமை தகவல் ஆணையர் மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் சம்பளம், படிகள், பிற சேவை விதிமுறைகள், நிபந்தனைகள் முறையே தேர்தல் ஆணையர் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலருக்கு சமமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைமை தகவல் ஆணையர் மற்றும் ஒவ்வொரு தகவல் ஆணையரும் 5 ஆண்டுகாலம் அல்லது அவர்களது 65 வயது - இந்த இரண்டில் எது முந்தையதோ, அதுவரை இப்பதவியில் இருப்பார்கள்.

மத்திய தகவல் ஆணையம்

தகவல் அறியும் உரிமை சட்டம் -2005ன் கீழ் மத்திய தகவல் ஆணையம் கடந்த 2005 அக்.12-ம் தேதி உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் அனைத்து பொது அதிகாரிகளும் இந்த ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டவர்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டம் -2005 பிரிவுகள் 18, 19, 20, 25-ல்குறிப்பிடப்பட்டுள்ள சில அதிகாரங்கள், செயல்பாடுகள் ஆகியவை ஆணையத்துக்கு உள்ளன. பதிவுகளை வைத்திருப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்குதல், தானாக முன்வந்து வெளிப்படுத்துதல், புகார் பெறுதல், விசாரணை செய்தல், அபராதம் விதித்தல், ஆண்டு அறிக்கை தயாரித்தல் ஆகியவை இதன் செயல்பாடுகள் ஆகும். ஆணையக் குழுவின் முடிவுகளே இறுதியானது.

எல்லை நிர்ணய ஆணையம்

மத்திய அரசால் உருவாக்கப்பட்டது எல்லை நிர்ணய ஆணையம் (Delimitation Commission). ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகளை எல்லை நிர்ணயம் செய்யும் நோக்கத்துக்காக, சட்டப்பிரிவு 3 வழங்கியுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019, எல்லை நிர்ணய சட்டம் 2002 ஆகியவை எல்லை நிர்ணய பணி மேற்கொள்ள வேண்டிய வரைமுறைகளை வகுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x