Published : 21 Jun 2022 05:21 AM
Last Updated : 21 Jun 2022 05:21 AM
திருவள்ளூர்/ தூத்துக்குடி: பிளஸ் 2 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாணவி கீர்த்தனாவும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் திருச்செந்தூர் மாணவி துர்காவும் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவி மு.கா. கீர்த்தனா மாநில அளவில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
கணினி அறிவியல் - கணிதப் பாடப் பிரிவை எடுத்து படித்த கீர்த்தனா, திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியை சேர்ந்தவர். கீர்த்தனாவின் தந்தை முனிவரதன், திருவள்ளூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிகிறார்.
‘‘பேச்சுப் போட்டிகளில் நான் வெற்றி பெறுவதால், தமிழ் பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்று என் தமிழாசிரியர் தரணி தொடர்ந்து ஊக்குவித்தார். இந்த சாதனையை நிகழ்த்த ஆதரவாக இருந்த பெற்றோர், தமிழ் ஆசிரியர்கள், பள்ளி முதல்வர், துணைமுதல்வருக்கு நன்றி’’ என்று கீர்த்தனா கூறினார்.
திருச்செந்தூர் மாணவி
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி செ.துர்கா தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளார்.
துர்காவுக்கு, பள்ளி மூத்த முதல்வர் செல்வ வைஷ்ணவி பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். பள்ளி முதல்வர் ஜீனத், தமிழ் ஆசிரியை செல்வி மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.
‘‘தமிழ் ஆசிரியை செல்வி அடிக்கடி வகுப்பு தேர்வு நடத்துவார். பொதுத் தேர்வு எழுத இது உதவியாக இருந்தது’’ என்று துர்கா கூறினார். இவரது தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரியில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். தாயார் பெயர் ஹேமா. பிளஸ் 2-வில் கீர்த்தனாவும், 10-ம் வகுப்பில் துர்காவும் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு பெற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT