Published : 09 Jun 2022 07:01 AM
Last Updated : 09 Jun 2022 07:01 AM
சென்னை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் கோடை கொண்டாட்ட சிறப்புப் பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்.
பள்ளிப்பாடம் தவிர்த்து தலைமைத்துவம், சூழலியல், மனித உரிமை, சமூகநீதி, பெண்ணுரிமை மற்றும் எதிர்காலவியல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதை செயல்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 5 நாள் கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் நடத்த முடிவாகியுள்ளது. இந்த முகாமுக்கு அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு முடித்துள்ள மாணவர்களில் கல்வி, இலக்கியம், அறிவியல், விநாடி-வினா போட்டிகளில் சிறந்து விளங்கிய 1,250 பேர்களை தேர்வு செய்து அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 5 மையங்களுக்கு சேர்த்து ரூ.72 லட்சத்து 18,750 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார். அதையேற்று நீலகிரியில் 5 நாள் கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் நடத்த அனுமதி வழங்கி அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்து ஆணையிடப்படுகிறது. மேலும், இந்த முகாமில் தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாறு ஆகிய தலைப்புகளில் குறைந்தபட்சம் ஒரு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி முகாமில் உடற்பயிற்சி, செய்தித்தாள் வாசிப்பு, குறும்படம், உடல்மொழி, நடனம், இசை, கவிதை, கதை எழுதுதல், இளம் அதிகாரிகள் சந்திப்பு உட்பட பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT