Published : 01 Jun 2022 05:11 AM
Last Updated : 01 Jun 2022 05:11 AM
சென்னை: இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர்களுக்கான வாசிப்பு மராத்தான் பயிற்சி இயக்கம் இன்று (ஜூன் 1) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் அனைத்து மாவட்டங்களிலும் இல்லம் தேடி கல்வி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 33 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்த கல்வியாண்டுக்கான (2022 - 23) வகுப்புகள் ஜூன் 13-ம் தேதி தொடங்கப்படவுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்த ‘ரீடிங் மராத்தான்’ என்ற தலைப்பிலான வாசிப்பு இயக்கம் இன்று (ஜூன் 1) தொடங்கி 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இல்லம் தேடிகல்வித் திட்ட சிறப்பு அலுவலர் க.இளம் பகவத் கூறியதாவது:
கூகுள் நிறுவனத்துடன், தமிழக பள்ளிக்கல்வித் துறை செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக இந்த ‘வாசிப்பு மராத்தான்’ நடத்தப்படுகிறது. அதன்படி அனைத்து இல்லம் தேடி கல்வி மையங்களிலும் தன்னார்வலர்களின் செல்போன் வழியாக ‘கூகுள் ரீட் அலாங்’ செயலியைப் பயன்படுத்தி மாணவர்கள் படிக்கும் வகையில் இந்த வாசிப்பு மராத்தான் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயலியில் 100 வார்த்தைகளைக் கொண்ட குறுங்கதைகளில் தொடங்கி, 400 வார்த்தைகள் வரையான கதைகள் வரை 4 நிலைகளில் வாசிப்புக்கான பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாசிப்பின்மீது குழந்தைகளுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் கதையோடு ஓவியங்களும் இந்த பக்கங்களில் இடம்பெற்றிருக்கும். வாசிப்பு இயக்கம் முடிந்ததும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் குழந்தைகளின் வாசிப்பு திறன் குறித்த தகவல்களை கூகுள் நிறுவனம் சேகரித்து வழங்கவுள்ளது.
இந்த தகவல்கள் குழந்தைகளின் வாசிப்புத் திறன்களை மதிப்பிடவும் அதற்கேற்ப இனிவரும் காலத்தில் கற்பித்தல் உத்திகளை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும். இதில் வட்டார அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு வெற்றிகோப்பையுடன் கூடிய பரிசுகள் வழங்கப்படவுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில வார்த்தைகளை குழந்தைகள் சரியாக உச்சரிக்கவும், வாசிப்பு பிழைகளைச் சரிசெய்து கொள்ளவும் இந்த இயக்கம் நிச்சயம் உதவும்.
ஏற்கெனவே மற்ற சில மொழிகளில் சோதனை முயற்சியாக நடத்தப்பட்ட போட்டிகளில் குழந்தைகளின் வாசிப்புத் திறன் அதிகரித்துள்ளது. அதேபோல், வாசிப்பு மராத்தானும் வெற்றிகரமாக அமையும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT