Published : 28 May 2022 07:06 PM
Last Updated : 28 May 2022 07:06 PM

கரோனா காலம்: 40% வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் வசதி இல்லை - NAS தகவல்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி: கரோனா பொது முடக்க காலத்தில், வடகிழக்கு மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்கான செல்போன் முதலான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை நேஷனல் அச்சீவ்மென்ட் சர்வே 2021 (National Achievement Survey) அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின்படி, வடகிழக்கு மாநிலங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கரோனா பொதுமுடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்த கல்வி வாய்ப்பு குறித்து அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 3, 5, 8, 10-ம் வகுப்பு குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்டது.

உபகரணங்கள் இல்லை: இந்த ஆய்வின்படி அஸ்ஸாம், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் 48 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்களிடம் வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது.

அருணாசலப் பிரதேசத்தில் 43 சதவீதம் மாணவர்களிடம் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லை. மிசோரம் மாநிலத்தில் 39 சதவீதமாகவும், நாகாலாந்து மாநிலத்தில் 37 சதவீதமாகவும் இருந்த இந்த எண்ணிக்கை, திரிபுரா மாநிலத்தில் 46 சதவீதமாக அதிகரித்திருந்தது.

பயமும் பதற்றமும்: ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாணவர்களில் அஸ்ஸாமில் 58 சதவீத மாணவர்கள் கரோனா கால பொதுமுடக்க காலத்தை பயம், பதற்றத்துடன் இருந்ததாக தொரிவித்துள்ளனர். இதேபோன்ற உணர்வை அனுபவித்ததாக 61 சதவீத அருணாச்சலப் பிரதேச மாணவர்கள் மணிப்பூர், மேகாலயாவில் 59 சதவீத மாணவர்களும் தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை மிசோகத்தில் 54 சதவீதமாகவும், நாகலாந்தில் 62 சதவீதமாகவும், திரிபுராவில் 59 சதவீதமாகவும் இருந்தது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிரியர்களுக்கான வசதிகள்: இந்த ஆய்வின் மூலமாக, பாடம் நடத்துவதற்கான உபகரணங்களை பயன்படுத்தும் வசதிகள், ஆசிரியர்களிடம் எந்த அளவிற்கு இருந்தது என்று தெரியவந்துள்ளது. அதன்படி, அஸ்ஸாமில் 16 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்துவதற்கான உபகரணங்களைப் பயன்படுத்த முடிந்தவர்களாக இருந்துள்ளனர். அதேபோல 16 சதவீத பள்ளிகளில் மட்டும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி இருக்கிறது. ஆசிரியர்களுக்கான உபகரணப் பயன்பாடு, ஸ்மார்ட் கிளாஸ் வசதி மணிப்பூரில் 16 சதவீதமாக இருந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களான மேகாலயாவில் ஆசிரியர்களின் பயன்பாடு 10 சதவீதமாகவும், வகுப்பறை வசதி 12 சதவீதமாகவும், மிசோரமில் இவை முறையே 14, 11 சதவீதங்களாகவும், நாகாலாந்தில் முறையே 13, 15 சதவீதங்களாகவும், திரிபுராவில் அவை 19, 28 சதவீதங்களாகவும் இருந்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தில், 17 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே கல்வி உபகரணங்களை பயன்படுத்தும் வசதி பெற்றவர்களாகவும், 23 சதவீத பள்ளிகள் மட்டுமே ஸ்மார்ட் கிளாஸ் வசதி பெற்றதாகவும் இருந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x