Published : 26 May 2022 07:10 AM
Last Updated : 26 May 2022 07:10 AM

தமிழக பள்ளிக் கல்வியில் வரும் கல்வியாண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி வெளியீடு: கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் ஜூன் 13-ல் திறப்பு

சென்னை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 13-ம் தேதி முதல் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வியில், வரும் கல்வியாண்டுக்கான (2022-23) பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறை தினங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாட்காட்டியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.

அந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு: கோடை விடுமுறை முடிந்து, ஒன்று முதல் 10-ம் வகுப்புகள் ஜூன் 13-ம் தேதி திறக்கப்படும். 12-ம் வகுப்பு ஜூன் 20-லும், 11-ம்வகுப்பு ஜூன் 27-லும் திறக்கப்படும். அதன்பின் அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 23 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 16 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிச.24-ல் தொடங்கி ஜனவரி 1-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும்.

பொதுத் தேர்வைப் பொறுத்தவரை, பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 13-ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 3-ம் தேதியும் பொதுத் தேர்வுகள் தொடங்கும். இதுகுறித்த விரிவான தேர்வுக்கால அட்டவணை அடுத்த மாதம் வெளியாகும்.

மேலும், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 முதல் 28-ம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 28-ம்தேதியுடன் நிறைவு பெறும். ஏப்.29-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்படும்.

முந்தைய ஆண்டுகளைப் போலவே பள்ளி வேலைநாட்கள் 210 ஆக இருக்கும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பள்ளிகள் செயல்படும். சனி, ஞாயிறு விடுமுறையாக இருக்கும். இவ்வாறு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறப்பதற்கு பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டிருந்தது. ஆனால், தனியார் பள்ளிகளின் தொடர் அழுத்தம் காரணமாக ஜூன் 13-ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x