Published : 07 May 2022 03:24 AM
Last Updated : 07 May 2022 03:24 AM
திருவண்ணாமலை: மாமண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வகுப்பறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் ஒழுங்கீன காட்சிகளால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு எதிரான கருத்துகள் பகிரப்படுகிறன. இது தொடர்பான விவாதங்கள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களும் கண்ணியத்துடன் செயல்படுபவர்கள் என திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உலகுக்கு உரக்க சொல்லி உள்ளனர். இந்தப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் ஒருங்கிணைந்து, தங்களது சொந்த செலவில் வகுப்பறையை சுத்தம் செய்து வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது, “எங்கள் பள்ளியில் உள்ள கழிப்பறையைச் சுத்தம் செய்து கொடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்த கொடுத்தவர் தமிழ் ஆசிரியர் அழகேசன். அவரது செயலை பார்த்த நாங்கள், வகுப்பறை சுத்தம் செய்து வர்ணம் பூச வேண்டும் என முடிவு செய்தோம். எங்கள் பள்ளியில் 25 வகுப்பறைகள் உள்ளன. முதற்கட்டமாக 8 வகுப்பறைகளை சுத்தம் செய்து வர்ணம் பூசி உள்ளோம். இதற்காக, மாணவர்களாகிய எங்களது சேமிப்பு பணத்தை கொண்டு வர்ணம் பூசி தூய்மைப்படுத்தி உள்ளோம்.
ஒரு சில அரசு பள்ளி மாணவர்களின் தவறான செயல்களால், ஒட்டு மொத்தமாக அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் என்றால், இப்படிதான் என்ற தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர். இத்தகைய பார்வையை மாற்றுவதற்கான புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். விடுமுறை நாட்களில் இப்பணிகளைச் செய்து வருகிறோம். இந்த பணி, எங்களுக்கு மன நிறைவை கொடுக்கிறது. இதேபோல் பொதுத்தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று, எங்கள் பள்ளிக்கு பெருமை சேர்ப்போம்” என்றனர்.
மாணவர்களின் முயற்சியை தலைமை ஆசிரியர் ஞானசம்பந்தம், ஆசிரியர்கள் அழகேசன், கன்னியப்பன், ஹரிக்குமார் உள்ளிட்டோர் பாராட்டி, ஊக்கமளித்தனர். மாணவர்களின் வழிகாட்டியாக உள்ள ஆசிரியர்களை பின்பற்றி சென்றால், வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம், பள்ளிக்கும் பெருமை சேர்க்கலாம் என்பது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது மாமண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் செயல். அவர்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT