Published : 23 Apr 2022 06:08 AM
Last Updated : 23 Apr 2022 06:08 AM
திருவள்ளூர்: கதைகள் வழியாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, பழவேற்காடு அருகே கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா மேஜிக் ஆய்வகத்தை நேற்று திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே உள்ளது கூனங்குப்பம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில், கதைகள் வழியாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கதா தன்னார்வலர் தொண்டு நிறுவனம் சார்பில் கதாமேஜிக் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வகம், தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள கதா மேஜிக் ஆய்வகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி, திறந்து வைத்து பேசியதாவது: கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளையும் சிறப்பாக ஒருங்கிணைத்து, அத்துறைகளின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்தால் கூட தன்னார்வலர் நிறுவனங்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. அதில் ஒரு படியாகத்தான் கதா தன்னார்வலர் தொண்டு நிறுவனம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொடக்கப்பள்ளி மாணவர்கள் எளிதில் புரிந்து கொண்டு கல்வி கற்பதற்கு ஏதுவாக இந்த கதா மேஜிக் ஆய்வகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சரியான முறையில் கல்வி
தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி சரியான முறையில் கிடைத்தால் மட்டும்தான் அவர்கள் நடுநிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப் பள்ளிக்கும், மேற்படிப்புக்கும் போகும்போது சரியான முறையில் கல்வி கற்க முடியும்.
ஆகவே, கதைகள் சொல்லிக் கொடுத்து, கதைகள் வழியாக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கூனங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதா மேஜிக் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வகத்தை பொதுமக்கள் சரியான முறையில் பயன்படுத்தி, தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை அளிக்கும் பெற்றோராகத் திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்வில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தர்மராஜ், கதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கீதா தர்மராஜன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆறுமுகம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT