Published : 07 Apr 2022 07:54 AM
Last Updated : 07 Apr 2022 07:54 AM
சென்னை: பொதுத்தேர்வுக்கான பாடங்களை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் 10,பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மே 5 முதல் 31-ம்தேதி வரை நடத்தப்படுவதாக தேர்வுத்துறை அறிவித்தது.
இதையடுத்து பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனாவால் ஏற்பட்ட காலதாமதத்தால் பாடஅளவு கணிசமாக குறைக்கப்பட்டது. அதன்படி 10-ம் வகுப்புக்கு 39 சதவீதம், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தலா 35 சதவீதம்என்ற விகிதத்தில் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே தேர்வுகள் நடத்தப்படும் எனவும் கல்வித்துறை ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதேநேரம் பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள சூழலில் கணிசமான அரசுப்பள்ளிகளில் பாடங்கள் இன்னும் முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிரமங்களை சந்தித்து வருவதாக பெற்றோர் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிருபர்களை சந்தித்தார். அப்போது பொதுத்தேர்வுக்கு நடத்தி முடிக்கப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'நடத்தப்படாத பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கக்கூடாது என்பதுதான் நியாயமானது. கண்டிப்பாக அதை கவனத்தில் கொள்வோம்’’என்று பதில் அளித்தார். இதையடுத்து ஏற்கெனவே வழங்கப்பட்ட பாடஅளவின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியசுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021-22-ம் கல்வியாண்டுக்கான குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிட்டது. அந்த பாடங்கள் அடிப்படையிலேயே பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வழங்கப்படும்.
எனவே, எஸ்சிஇஆர்டி வழங்கியுள்ள அனைத்து பாடங்களையும் விரைந்து முடிக்க பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பாடங்களின் விவரங்கள் பள்ளிகளின் பார்வைக்காக தற்போது மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT