Published : 04 Apr 2022 07:11 AM
Last Updated : 04 Apr 2022 07:11 AM
குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், பாடம் நடத்தப்படாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
கரோனா பேரிடர் காரணமாகத் தனியார் பள்ளியில் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர்.
அந்த வகையில் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் மாணவர்கள் எண்ணிக்கை 660-லிருந்து 1,315 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 21 ஆசிரியர்கள் இங்கு உள்ளனர். மாநிலத்திலேயே தொடக்கக் கல்வியில் அதிக மாணவர்களைக் கொண்ட 2-வது பள்ளி இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தனியார் பள்ளிக்கு நிகரான கட்டிட வசதி உள்ளது. மேலும் கற்பித்தல் பணியில் தனியார் பள்ளியை விஞ்சும் அளவுக்குத் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.
வகுப்பில் 70 மாணவர்கள்
மாணவர்களின் எண்ணிக்கை இப்பள்ளியில் அதிகரித்ததால் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 12 கூடுதல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இதுவரை அந்த பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் 30-லிருந்து 40 மாணவர்கள் அமரும் வகையில்தான் வசதி உள்ளது. ஆனால், தற்போது 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமரும் நிலை உள்ளது.
இதனால் ஆசிரியர்கள் கற்பிக்க இயலாத, மாணவர்கள் கற்க இயலாத சூழ்நிலை உள்ளது. கழிப்பறைகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ளன.
இந்த சூழ்நிலையை உணர்ந்து அரசும் பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே ஒப்புக் கொண்டதுபோல் புதிய கட்டிடத்துக்கான பணிகளை விரைந்து தொடக்கவும், பற்றாக்குறையாக உள்ள ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவும்படியும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இப்பள்ளியைப் போலவே குன்றத்தூர் ஒன்றியத்தில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாடம்பாக்கம், மேல்படப்பை, மணிமங்கலம், சோமங்கலம், சிக்கராயபுரம், மாங்காடு, கோவூர், புது வட்டாரம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் இல்லாமல் மிகுந்த சிரமத்துக்கு மாணவர்கள் உள்ளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT