Published : 03 Apr 2022 04:00 AM
Last Updated : 03 Apr 2022 04:00 AM

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு குறுகிய கால கல்வெட்டு பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்வெட்டு படியெடுத்து, பொருள்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சி யகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 3 நாட்கள் குறுகிய கால கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி இளங்கலை தமிழ் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் 40 பேருக்கு குறுகிய கால 3 நாள் கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், முதல் நாளில், மனிதகுல வரலாற்றை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என பிரிப்பதற்கு காரணியாக இருக்கும் எழுத்து குறித்து விளக்கி, தமிழகத்தின் முதல் எழுத்தான தமிழி சங்கக் காலத்தில் மதுரையைச் சுற்றியுள்ள சமணர் குகைத் தளங்களில் காணப்படுவதை குறிப்பிட்டு, அவ்வெழுத்துக்களை படிப்பது எப்படி என அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் விளக்கினார். 2-ம் நாளில், தமிழி எழுத்தானது காலந்தோறும் எப்படி மாற்றமுற்று இன்றைய தமிழ் எழுத்துக்களாக ஆனது என்பதை அவற்றின் வடிவ மாற்றங்களைக் கொண்டு விளக்கினார்.

அத்துடன் இடையில் தோன்றி மறைந்த வட்டெழுத்துக்கள் குறித்தும் எடுத்துரைத்தார். கல்வெட்டு பயிற்சியின் 3-வது நாளான நேற்று, கிரந்த எழுத்துக்கள் மற்றும் தமிழ் எண்கள் ஆகியவற்றை கற்றுத் தந்ததோடு, ஒய்சாளர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றை படியெடுத்து அதனை எவ்வாறு படித்து பொருள்கொள்வது என செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியினை அருங் காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஒருங்கிணைத்தனர். இறுதியில், பயிற்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆடவர் கல்லூரி தமிழ்துறை கவுரவ விரிவுரை யாளர் கணபதி வாழ்த்துரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x