Published : 09 Jul 2019 11:51 AM
Last Updated : 09 Jul 2019 11:51 AM

கரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்?

பத்தாம் வகுப்பில் காற்று குறித்த பாடம். இலக்கியத்தில் தொடங்கி இன்றுவரை காற்று குறித்த சில பாடல்களுடன் காற்று மாசு பற்றியும் நிறைய செய்திகள் உள்ளன. புத்தகத்துக்குள் புகுமுன் என்ன செய்வது?

“தம்பிகளா, நாட்குறிப்பு நோட்டை எடுத்துக்கோங்க. உங்க வீட்டு வாசலில் நிக்குறீங்க. அப்போ நல்லா காத்து வருது. அது உன்னோடு பேசுது. அந்த உரையாடலை எழுதுங்க” என்றேன்.

காற்றோடு உரையாடல்

ஓரிரு வரிகள் தொடங்கிச் சில பக்கங்கள் வரை பல்வேறு உரையாடல்கள்.

“காற்றே, தூய்மையாக இருந்த நீ இப்போது குழந்தைகளுக்குக்கூட நல்ல காற்றாக இல்லை. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என்று எல்லோருக்கும் ஏன் நோயையே தருகிறாய்?”

“அதற்கு நான் காரணம் இல்லை. நீங்கள்தான் சுற்றுச்சூழலைக் கெடுக்குறீங்க”…என்று தொடங்கி நீளும் உரையாடல்.

“வணக்கம். நான் காற்று பேசுகிறேன்.”

“காற்றா! உன்னால் பேச முடியுமா?”

“என்னை நேசிப்பவரின் காதுகளுக்கு நான் பேசுவது கேட்கும்”

என்று தொடங்கும் உரையாடலின் இடையே, “எனக்கும் மரத்துக்கும் நல்ல உறவு உண்டு. மனிதனுக்குத் தெரியாது, இன்று மரத்தின் வாழ்வுதான் நாளைய மனிதரின் வாழ்வு”என்று காற்று சொல்கிறது.

இப்படிக் காற்று சொல்லும் அறிவுரைகள், என்று பல்வேறு வகையான உரையாடல்கள்.

அடுத்த பாடவேளையில் ‘காற்று என்ன வெல சார்?’ என்ற குறும்படத்தைப் பார்த்தோம்.

காற்றைப் புட்டியில் விற்கும்போது சிரிக்குறீங்க. ஒரு காலத்தில் தண்ணீரைப் பாட்டிலில் அடைத்து விற்கும்போது எல்லோரும் சிரிச்சோம். இப்போ எல்லோரும் பாட்டிலோடு திரியிறோம் என்று தொடங்கி மரம் வளர்த்தல் குறித்த செய்திகளைச் சொல்லும் படம்.

சட்டம் வேண்டுமா என்ன?

“இந்தப் படம் பார்க்கும்போது என்ன தோன்றியது?” என்று கேட்டபோது,

மரங்களை வளர்க்கணும்.

ஏரி குளத்தை எல்லாம் ஆக்கிரமிச்சுக்கிறாங்க. அதனால தண்ணி இல்லாம மரங்கள் வளரல.

சட்டம் போட்டாதான் பயந்துட்டு செய்வாங்க என்று இந்தப் படத்தில் வருது. சட்டம் போடாமலே செய்தால் என்ன?

இப்பவே நிறைய மரம் வளர்த்துட்டா அடுத்த தலைமுறை நல்லா இருக்கும்.

இயற்கை வளங்கள் அடையும் சீர்கேடுகள் குறித்த நிறைய செய்திகளை மாணவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் செயல்படுவதற்கான வாய்ப்புகளையே உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியும் சுற்றுப்புறத்தில் செயல்படத் தொடங்கினாலே போதும். அற்புதமான மாற்றங்களை இளம் தலைமுறையினர் உருவாக்குவார்கள்.

சமூகத்தின் மாதிரியான பள்ளிகளுக்குள் அடைபட்டிருக்கும் இளம் தலைமுறையினர் அவர்களுக்கான சமூகத்தைக் கட்டமைக்கும் வழிமுறைகளையும் அதற்கான செயல்பாடுகளையும் உருவாக்குவதுதானே கல்வி!

பள்ளிகளின் கதவுகள் சமூகத்தை நோக்கித் திறக்க வேண்டிய காலம் இது.

காற்று என்ன வெல சார்? காண:

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x