Published : 25 Apr 2017 10:19 AM
Last Updated : 25 Apr 2017 10:19 AM
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தது கொல்லிமலை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் கல்லூரிக்கு வந்து சேர்வார்கள். ஒரு விழுக்காடுதான் இடஒதுக்கீடு இருப்பதால் பெரும்பாலான மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. நாமக்கல், ராசிபுரத்தில் இடம் கிடைத்தால் படிப்பார்கள். இல்லாவிட்டால் வேறெதாவது வேலைக்குப் போய்விடுவார்கள். வெளியூர்களுக்குச் சென்று படிக்க வசதியில்லை. மேலும் வெகு தொலைவுக்குச் சென்று பழக்கமுமில்லை. படிக்க விருப்பம் இருந்தும் வாய்ப்பு கிடைக்காத பழங்குடியின மாணவர்கள் பலர்.
உங்க மலைக்கு வரப் போறேன்
இப்படி இருக்க நாமக்கல் மாவட்டத்துக்குச் சிறிதும் தொடர்பில்லாத திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையிலிருந்து மாணவர் சுரேஷ் வந்து சேர்ந்திருந்தார். விசாரித்தபோது விவரம் சொன்னார். அவருடைய அண்ணனுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக நாமக்கல் பகுதியில் வேலை. அண்ணன் வீட்டில் தங்கிக் கல்லூரி செல்வது வசதி.
எனக்கு மலைப் பகுதிகளின் மேல் தீராத ஆர்வம். சுரேஷிடம் “உங்க மலைக்கு ஒரு முற வரப் போறம்பா” என்று சொன்னேன். ஆசிரியர் தங்கள் வீட்டுக்கு வருவதைப் பெருமையாகக் கருதினாலும் வந்தால் அவரை எப்படிப் பராமரிப்பது என்று தயங்குவார்கள். பலர் “வாங்கய்யா” என்று தைரியமாக அழைப்பார்கள். அதில் “இவரெல்லாம் நம் வீட்டுக்கு எங்கே வரப் போகிறார்” என்னும் நம்பிக்கை தென்படும். நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் ஏதாவது சந்தர்ப்பத்தில் சென்றுவிடுவேன்.
இன்னொரு முகம்
கோரிக்கையை சுரேஷ் உடனடியாக ஏற்றுக்கொண்டார். அவர் மூன்றாமாண்டு வரும் வரைக்கும் என்னால் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. அதற்குள் வீட்டுக்கு வரவும் ஆலோசனை கேட்கவும் பேசவும் என அவர் நெருக்கமானார். பொது விஷயங்களிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். நிறையப் பேசுவார். விவாதிப்பார். அவர் மூன்றாமாண்டு படிக்கும்போது பத்துப் பேர் குழுவாக ஜவ்வாது மலைக்குச் சென்றுவிட்டோம். மூன்று நாள் அங்கு தங்கினோம். அது பேரனுபவம்.
அங்கு தங்கியிருந்தபோது சுரேஷின் இன்னொரு முகத்தைத் தெரிந்துகொண்டோம். உள்ளடங்கிய மலைக் கிராமம். ஐம்பது அறுபது குடும்பங்கள். கூரை வீடுகளும் தொகுப்பு வீடுகளுமாக வசிப்பிடம். விவசாயமே தொழில். அம்மக்களுக்கு அடிப்படைத் தேவைகள் பல. அவற்றைப் பெற்றுத்தருவதற்குத் தன்னாலான முயற்சிகளைச் செய்து உதவுபவர் சுரேஷ்.
ஈடுபாடும் நம்பிக்கையும்
கோரிக்கை மனுக்கள் எழுதுவது, நலத்திட்ட உதவிகளைப் பெற்றுத் தருவது, அரசு அலுவலகங்களை எளிதில் அணுகுவது என்பவற்றால் ஊரில் பிரபலமானவராக இருந்தார். திராவிடக் கட்சி ஒன்றின் பிரமுகர் அவர். குடும்பமே அக்கட்சியின் மீது மிகவும் ஈடுபாட்டுடன் இருந்தது. அடிமட்டத்து மக்களிடமிருந்து பெரிதும் விலகிவிட்ட கட்சி என்று நான் கொண்டிருந்த கருத்துக்கு மாறாக ஒரு குடும்பம். சுரேஷை நாங்கள் கேலி செய்யத் தொடங்கினோம்.
அவர் எப்படியாவது எம்.எல்.ஏ. சீட் வாங்கிவிட்டால் போதும். பெரும் மாணவர் படையே வந்திறங்கி அவருக்காகப் பிரச்சாரம் செய்யத் தயார் என்று சொன்னோம். நாங்கள் கேலி செய்கிறோம் என்பதை அவர் உணரவில்லை. அந்த அளவுக்கு அரசியலில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்று தீவிரமாக நம்பினார். அவர் பகுதியின் எம்.எல்.ஏ. தொகுதி எதுவரைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் தெளிவான சித்திரம் மனத்தில் இருந்தது.
கல்வி அமைச்சர்
அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்து அவரிடம் நண்பர்கள் கோரிக்கைகளை வைத்தார்கள். அமைச்சர் பதவியையே பெற்றுவிட்ட பாவனையில் அவரும் அவற்றை எல்லாம் செய்துதருவதாகப் பெருமிதத்துடன் ஒத்துக்கொண்டார். எல்லாருடைய எதிர்பார்ப்பும் நிரந்தர ஊதியம் வரக்கூடிய அரசு வேலை பெறுவதைப் பற்றித்தான் இருந்தது. சுரேஷ் என் பக்கம் பார்வையை வீசினார். அதில், “உனக்கு எதுவும் கோரிக்கை இல்லையா?” என்னும் கேள்வி தெரிந்தது.
நானும் பவ்வியத்துடன் “ஓய்வூதியப் பலன்கள் சீக்கிரமாகக் கிடைக்க உங்கள் உதவியை நாட வேண்டி வரலாம் சுரேஷ். அமைச்சராகும்போது எதற்கும் கல்வித் துறையைக் கேட்டு வாங்கிக்கொள்ளப்பா” என்றேன். சுரேஷ் வெட்கத்துடன் சரி என்று ஆமோதித்தார். ஒரு நாள் முழுக்கவும் சுரேஷ் அமைச்சராகவும் நாங்கள் எல்லாம் அமைச்சரைத் தெரிந்தவர்களாகவும் அவருக்கு நெருக்கமானவர்களாகவும் கற்பனை செய்து சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.
பழங்குடி மக்களுக்கும் மலை கிராமங்களுக்கும் என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் எனப் பல திட்டங்கள் சுரேஷிடம் இருந்தன. அவருடைய கிராமத்தைச் சுற்றிக் காட்டியபடி அவரின் திட்டங்களை எல்லாம் எங்களுடன் பகிர்ந்துகொண்டார். உண்மையில் பழங்குடி மக்களின் பிரதிநிதியாகச் சுரேஷ் அமைச்சராவதுதான் பொருத்தம், தர்மம் என்றெல்லாம் எனக்குத் தோன்றிற்று. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு “இப்போதைய அரசியலில் பொருளாதாரப் பின்புலம் இல்லாத ஒருவருக்கு எதிர்காலமில்லை” என்னும் என் எண்ணத்தை அவரிடம் வெளிப்படுத்தி யதார்த்த நிலையை உணர்த்த முயன்றேன்.
விரைவில் வருவார்!
ஊராட்சித் தேர்தலில் உறுப்பினர், ஊராட்சித் தலைவர் எனப் படிப்படியாக முயன்று பார்க்கும்படியும் சொன்னேன். ஆனால், காலம் அவரைப் படிப்பை நோக்கியே தள்ளிற்று. முதுகலை, கல்வியியல் எல்லாம் படித்து முடித்தார். கல்வியியல் பயில அவருக்குக் கொஞ்சம் பண உதவி செய்தேன். “எப்பங்கய்யா திருப்பிக் கொடுக்கணும்” என்று கேட்டார். “அரசு வேலைக்குப் போனவுடனே திருப்பிக் குடுத்துருப்பா” என்றேன். மிகுந்த மகிழ்ச்சியோடு “சரி” என்றார்.
இந்த உரையாடலுக்குப் பிறகு அவராக ஒரு வைராக்கியம் வைத்துக்கொண்டார். “பணத்தோடதான் ஐயாவப் பார்க்க வருவேன்” என்பது வைராக்கியம். அவரைப் பார்த்து இரண்டு ஆண்டுகள் ஆயிற்று. அவர் விரைவில் எனக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வருவார் என்று எதிர்பார்த்திருக்கிறேன்.
பெருமாள்முருகன், எழுத்தாளர், தமிழ்ப் பேராசிரியர் தொடர்புக்கு: murugutcd@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT