Last Updated : 25 Sep, 2018 11:36 AM

 

Published : 25 Sep 2018 11:36 AM
Last Updated : 25 Sep 2018 11:36 AM

பிளஸ் 1 தேர்வு விவகாரம்: பொதுத் தேர்வை நீக்கினால் சிக்கல் தீருமா?

மாணவர்கள் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாவதால் பிளஸ் 1 தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விக்குக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தமிழகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வாரம் அறிவித்தார்.

அடுத்தடுத்து மூன்றாண்டுகள் பொதுத் தேர்வை எதிர்கொள்வது மாணவர்களுக்குக் கடினம் என்பதாலும் பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டாண்டுகளின் மதிப்பெண்களைப் பதிவுசெய்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்கினால் உயர்கல்வி தொடங்கி வேலைவாய்ப்புவரை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. இதைக் கேட்ட மாத்திரத்தில் பல மாணவர்களும் சில ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மறுபுறம், கல்வியாளர்கள், கல்விச் செயற்பாட்டாளர்கள், புதிய பாடத்திட்டம் வகுப்பதில் பங்காற்றியவர்கள் உள்ளிட்டவர்கள் கவலை அடைந்துள்ளனர். இந்த முடிவு மாணவச் சமூகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிடும் என்ற விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் இவர்கள் முன்வைக்கின்றனர்.

தேர்வுச் சுமையை நீக்குவது எப்படி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்னும் கேள்வி எழலாம். 22 மே 2017 அன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணை எண்.100-ல் இந்தக் கேள்விக்கான பதில் உள்ளது.

அன்றுதான் பிளஸ் 1 தேர்வை இனிப் பொதுத் தேர்வாக நடத்த வேண்டும் என்ற முடிவு தமிழ்நாடு பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முறையாக எடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் செய்தி அறிக்கையைப் போலன்றி ஓர் ஆய்வுக் கட்டுரை போல மிக நுட்பமாகவும் தெளிவாகவும் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியின் நிலை இதில் அன்றைய பள்ளிக் கல்விச் செயலாளர் உதயச்சந்திரன் தலைமையில் சுட்டிக்காட்டப்பட்டது.

தனியார் உண்டாக்கிய தாக்கம்

ஒரு முழுப் பாடத்தின் இரு சமமான தனித்தனிப் பகுதிகளாகவே பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவை 1980-ல் வகுக்கப்பட்டன என்பது இந்த அரசாணையில் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிளஸ் 2-வுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்பட்டுவந்ததையும் இது சுட்டிக்காட்டுகிறது. இதனால், பிளஸ் 2 மதிப்பெண்களே மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்விப் படிப்புகளுக்கான அடிப்படைகளாக அமைந்தன.

மருத்துவம், பொறியியல் படிப்புகள் அதிமுக்கியத்துவம் பெற்றதால் பிளஸ் 2 தேர்வின் மதிப்பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படும் போக்கு தொடங்கியது. அதிலும் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் பெருக்கத்தால் பொதுத் தேர்வு மதிப்பெண்களுக்கான போட்டி சூழல் மூண்டது. இதன் நீட்சியாக பிளஸ் 1 பாடங்களைப் புறக்கணித்துவிட்டு பிளஸ் 2 பாடப் பகுதிகளை மட்டுமே பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புக்கான இரண்டாண்டு கால அவகாசத்திலும் கற்பிக்கும் நிலை தனியார் பள்ளிகளில் வேர்விட்டது. இது அரசின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதையும் இந்த அரசாணை சுட்டிக்காட்டுகிறது.

போட்டித் தேர்வுக்குத் தயாராக

இதன் விளைவாக, பிளஸ் 2-வில் உட்சபட்ச மதிப்பெண் குவித்த மாணவர்கள்கூட பிளஸ் 1 பாடம் தெரியாமலேயே கல்லூரிக்குள் நுழைந்தனர். அதனால் கல்லூரித் தேர்வுகளில் தோல்வியுறும் நிலை உருவானது என்று அண்ணா பல்கலைக்கழகம் உட்பட முக்கியக் கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் சுட்டிக்காட்டினர். இதன் காரணமாகவே நீட், ஜெ.இ.இ. கிளாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் திறன் தேர்வுகளிலும் தமிழக மாணவர்கள் பின்தங்கியுள்ளனர் என்பதும் பல மட்டங்களில் விவாதிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை பிளஸ் 1-ஐப் பொதுத் தேர்வாக நடத்தும் முடிவுக்குக் கடந்த ஆண்டு வந்தது.  ஆனால், இத்தனை நிதர்சனங்களையும் புறந்தள்ளிவிட்டு பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மீண்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என்று தீர்மானிக்கக் காரணம் என்ன என்ற கேள்வியை எழுப்பும் அதேவேளையில் அதற்குப் பின்னால் உள்ள அபாயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள் கல்வி மீது அக்கறை கொண்டவர்கள்.

ஆசிரியர் போதாமை

“தனியார் பள்ளிகளைத் தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டுதான் பிளஸ் 1-க்கு போதுத் தேர்வு நடத்தத் தொடங்கியது தமிழ்நாடு அரசு. அப்போதே நிர்வாகம் செய்யும் தவறுக்கு அவர்களைக் கண்டிக்காமல் மாணவர்களைத் தண்டிப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பினோம். அதற்குப் பாடத்தை மாணவர்களுக்கு முழுவதுமாக கற்பிக்க வேறு வழி இல்லையே என்றார்கள். இப்போது அந்த வாதம் எங்கே போனது? உண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று ஆசிரியர் போதாமை.

3,000 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தால் பாடம் நடத்துவதும் மாணவர்களைத் தேர்வில் ஒளிரவைப்பதும் எப்படிச் சாத்தியம்? எல்லாவற்றுக்கும் மேலாக இந்த முடிவை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் மதிப்பெண்கள் பற்றிய ஆய்வறிக்கை உள்ளதா? தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற கல்வியில் ஆய்வுபூர்வமாகச் செயல்படும் இயக்கங்கள், ஆசிரியர்-பெற்றோர் அமைப்புகள், மாணவத் தரப்பு ஆகியோரது கருத்து பெறப்பட்டதா?” என்று சரமாரியாகக் கேள்விகளை எழுப்புகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

இது சமமான போட்டியா?

“பிளஸ் 2 பாடப் புத்தகத்தைத்தான் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரண்டாண்டு கால அவகாசத்தின்போதும் இங்கே பெரும்பாலான தனியார் பள்ளிகள் பயிற்றுவிக்கின்றன. இந்த ஏமாற்று வேலையை ஒருபோதும் அரசுப் பள்ளிகளில் செய்ய முடியாது. ஆக, பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் ஒரு தரப்பினர் ஒரே பாடத்தை இரண்டாண்டுகள் படித்தவர்கள் மற்றொரு தரப்பினர் ஓராண்டு மட்டுமே அந்தப் பாடத்தைப் படித்தவர்கள்.

இப்படி இருந்தால் அது எப்படிச் சமமான போட்டியாகும்? ஆக,  தனியார் பள்ளிகளும் அரசுப் பள்ளிகளைப் போல முறையாக பிளஸ் 1 பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்தான் இங்கே துருத்திக்கொண்டிருக்கும் சிக்கல்.  இருவருக்கும் ஒரே கால அவகாசம் என்றால் தேர்வு முடிவுகளில் பெரிய வித்தியாசம் காட்ட முடியாது. அதன்பின் தனியார் பள்ளிகளுக்கான மவுசு குறைந்துவிடும்.

exams 3jpgகண.குறிஞ்சி

ஆகையால், இது தனியார் பள்ளிகள் அரசுக்குத் தரும் அழுத்தத்தின் வெளிப்பாடு. இதை மறைக்கத்தான் பிளஸ் 1 பொதுத் தேர்வாக நடத்தப்படுவது மாணவர்களுக்கு மன அழுத்தம் தருகிறது என்ற கண்துடைப்பு வாதத்தை அரசு முன்வைக்கிறது.  சரி, அவர்களுடைய வாதத்துக்கே வருவோம். தேர்வு அழுத்தம்தான் சிக்கல் என்றால், ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தப் பாடப் பகுதிகளையும் எழுதாமல்  ‘செமஸ்டர்’ முறையை அறிமுகப்படுத்தலாம்.

இதுபோன்று பல மாற்றுத் தீர்வுகளை முன்வைத்து தமிழ்நாட்டின் முக்கியக் கல்வியாளர்களின் கையெழுத்துடன்கூடிய கோரிக்கை கடிதத்தைத் தமிழகப் பள்ளிக் கல்வித் துறையிடம் சமர்ப்பித்துள்ளோம்” என்கிறார் கண.குறிஞ்சி, மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

தனியார் மையங்களுக்காகவா உழைத்தோம்?

“மேல்நிலைக் கல்வியில் பிளஸ் 1-வும் பிளஸ் 2-வும் பிரித்துப் பார்க்க முடியாதவை. உயர்கல்விக்கான அடித்தளம் இவ்விரு ஆண்டுகளில்தான் இடப்படுகிறது.  இதை மனத்தில் கொண்டே புதிய பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் பல ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் உழைத்தோம். கிராமப்புறப் அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் இந்தப் புதிய பாடங்களுக்குத் தங்களைத் தகவமைத்துக்கொண்டு சிறப்பாகக் கற்பித்துவருகிறார்கள்.

நாம் தயாரித்த புதிய பாடப் புத்தகங்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிடவும் சிறப்பாக உள்ளதாக நிபுணர்கள் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். சொல்லப்போனால், நீட் தேர்வு பயிற்சி மையங்கள் நம் மாநிலப் பாடப் புத்தகங்களைப் பிரதி எடுத்து அவர்களுடைய உரைகளைத் தயார்செய்துகொண்டுவிட்டன.

இந்நிலையில், பிளஸ் 1 மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படப் போவதில்லை என்ற செய்தி, இவ்வளவு உழைப்பையும் நாம் தனியார் பயிற்சி மையங்களுக்காகத்தான் செலுத்தினோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. கிராமப்புற, பின்தங்கிய சூழலில் இருந்து வரும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி யாருக்குமே கவலை இல்லையா என்ற ஆதங்கமே மேலோங்குகிறது” என்கிறார் ஓய்வுபெற்ற பேராசிரியர் நரசிம்மன்.

இன்றைய உலகளாவிய கல்விச் சூழலில் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலக் கல்வி, கல்வி வளர்ச்சி, வேலைவாய்ப்பு இவற்றையெல்லாம் அரசு கருத்தில்கொள்ள வேண்டியது அதன் கடமை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x