Published : 25 Jun 2019 11:42 AM
Last Updated : 25 Jun 2019 11:42 AM
சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.உணவு விடுதிகள் தண்ணீர் இல்லாமல் மூடப்படும் நிலை. 20,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டிலேயே இருந்து பணி செய்யுமாறு ஐ.டி. நிறுவனங்கள் வலியுறுத்தல்.
- என்று காலை வழிபாட்டுக் கூட்டத்தில் செய்தி வாசிக்கப்பட்டது.
“இன்றைய செய்தியில் சொன்னதை நினைச்சுப் பாருங்க. உணவு விடுதி, பள்ளிக்கூடம், அலுவலகம் என்று எல்லா இடங்களிலும் கஷ்டப்படுறாங்க. மழை பெய்து பல மாதங்கள் ஆச்சு. ஐந்நூறு, ஆயிரம்னு எத்தனை அடி போர் போட்டாலும் தண்ணீர் இல்லை. மழை நீரைச் சேமிச்சா போதும்னு சொல்றாங்க. சரி. நம்ம ஊரெப்படி இருக்கு, உங்க வீட்ல தண்ணீர் இருக்கா?” என்று கேட்டேன்.
- நிலத்தடி நீர் இல்ல. மாநகராட்சித் தண்ணிதான். அடி பைப்பில் அடிக்குற வேலை எனக்கு.
- எங்க கிராமத்தில தண்ணியைக் காசுக்கு வாங்க மாட்டோம்னு சொன்னாங்க. இப்போ ஒரு குடம் பத்து ரூபாய்ன்னு ஒரு வண்டி வந்து வித்துட்டுப் போகுது.
- எங்க வீட்டில் போர் தண்ணிதான். ஆனா, வீட்டுச் சொந்தக்காரர் கொஞ்ச நேரம்தான் திறந்துவிடுவாரு. நாங்க பிடிச்சு வச்சுக்குவோம்.
“இப்போ Start a little good என்கிற குறும்படத்தைப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டு ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் தண்ணீரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பது குறித்த குறும்படத்தைத் திரையிட்டேன். அது மாணவர்களின் மனத்தைக் கிளறியிருக்கும். உரையாடலைத் தொடர்ந்தேன்.
என்ன செய்யப்போகிறோம்!
“‘மரம் வளர்க்கணும், சூழலைப் பாதுகாக்கணும் - இப்படி எல்லோருமே சொல்றோம். யார் செய்வது, நாம என்ன செய்யப்போறோம், வீட்டிலும் பள்ளியிலும் எங்கே தண்ணீர் செலவாகுது? ”
குடிக்க, பாத்திரம், கை கழுவ, வீட்டில் துணி துவைக்க, கழிப்பறையில்…
“மகிழ்ச்சி. எல்லாமே நமக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. இப்போ திரும்பவும் பழைய கேள்விக்கே வர்றேன். நாம என்ன செய்யப்போறோம், என்ன செய்யலாம்?” என்றேன்.
அங்காங்கே முணுமுணுப்புகள். தம்பிகளா, பள்ளியில் எங்கெங்கே தண்ணீர் செலவாகுது, எப்படிச் செலவாகுது என்று ஒரு பட்டியல் தயார் பண்ணுங்க. தண்ணீரை எங்கே அதிகமா செலவு செய்றோம் என்பதைக் கண்டுபிடிங்க. தனியாகவும் நண்பர்களாகச் சேர்ந்து குழுவாகவும் செயல்படலாம். உங்களது முடிவுகள் வந்தபின்பு அதைக் குறைக்க என்ன செய்யலாம் என்று கலந்துரையாடிச் செயல்படுவோம் என்றேன்.
வருங்காலம் அல்ல, நம் காலத்திலேயே இதுவரை அழித்ததன் விளைவுகளை அனுபவிக்கப்போகிறோம். விழிப்புணர்வுப் பேச்சுகள், ஊர்வலங்கள் என்ற சடங்குகளை நடத்திக்கொண்டே இயற்கை வளங்களைப் பேரளவில் அழித்துக்கொண்டே இருக்கிறோம். இப்போதைய உடனடித் தேவை செயல்பாடுகளே.
‘Start a little good’ காண இணையச் சுட்டி:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT