Published : 11 Jun 2019 12:55 PM
Last Updated : 11 Jun 2019 12:55 PM
மனம்.
அது அற்புதமானது; அற்பமானது; புனிதமானது; கேவலமானது; பாதுகாப்பானது; ஆபத்தானது; உறுதியானது; நிலையில்லாதது.
எது சரி? எல்லாமும்தான். நொடிப்பொழுதில் ஒன்றிலிருந்து வேறொன்றாக மாறும் இம்மனத்தை அறிய ஓர் எளிய கையேடு இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்? ஒரு பொருள் வாங்கினால், அதனுடன் அளிக்கப்படும் User’s manual போல!
அப்படி ஒரு முயற்சிதான் ‘மனசு போல வாழ்க்கை’. தொடராகத் தொடங்கியபோது ‘அஃபர்மேஷன்ஸ்’ போன்றவை வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. புத்தகமாக வந்தபோது ‘சூடாக வந்திறங்கிய பக்கோடாவாகத்’ தீர்ந்துபோவதாக விற்பனையாளர் ஒருவர் குறிப்பிட்டார். முதுகுவலி முதல் மண முறிவு, தற்கொலை முயற்சி, வியாபாரச் சரிவு எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டதாக மின்னஞ்சல்கள் வந்தன.
இது என்ன 2.0?
பெங்களூரு நிம்ஹான்சில் படித்த ஒரு உளவியல் சிகிச்சையாளனாக மேற்கத்திய முறைகளை அதிகம் பயன்படுத்தினாலும், கிழக்கத்திய முறைகள் மீது கொண்ட மாறாத ஈர்ப்பு காரணமாக யோகா, ரெய்கி போன்றவற்றைப் படித்தேன். பிறகு லூயி ஹேயின் புத்தகங்கள், மலர் மருத்துவம், EFT எனப்படும் ‘எமோஷனல் ஃபிரீடம் டெக்னிக்ஸ்’ போன்றவை என்னைப் பெரிதும் பக்குவப்படுத்தின. உணவும் வாழ்வுமுறையும் மட்டுமின்றி மனத்தைச் செழுமைப்படுத்தத் தீர்க்கமான வழிமுறைகள் உள்ளன என நம்பினேன். அவை அனைத்தையும் என் மீது பரிசோதித்துப் பார்த்தேன். பல வாழ்க்கைமுறை அனுபவங்கள் என்னை மெலும் செதுக்கின. அந்தப் பயணத்தின் எழுத்து வடிவம்தான் ‘மனசு போல வாழ்க்கை’.
சரி, இது என்ன 2.0? ரஜினியும் மோடியும் ஆளுக்கொரு 2.0 செய்துவிட்டார்கள் என்றா, நிச்சயம் இல்லை.
இன்றைய இளைஞர்கள் ரொம்பவே கவனம் சிதறிப்போயிருக்கிறார்கள். எதுவும் சுலபமாக உடனடியாகக் கிடைக்கச் செய்யும் ‘ஸ்விக்கி’ யுகம், அவர்களை அச்சில் வார்த்துள்ளது. எதற்கும் தாமதிக்க இயலாத இந்தத் தலைமுறை, உறவுகளில் சறுக்குவதில் ஆச்சரியமில்லை. முடி உதிர்தலும் பாலியல் குறைபாடுகளும் உடல் எடை பருமன் பிரச்சினைகளும் முப்பதுகளில் சகஜமாகிவிட்டன. வீடும் வாகனமும் வாங்குகிற வேகத்தில் வலிகளையும் வியாதிகளையும் வாங்கிவிடுகிறார்கள்.
எல்லா வியாதிகளுக்கும் மன அழுத்தம் பெரும் காரணம் என அலோபதி நம்பும் அறிவியல் ஆராய்ச்சிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டன. கூகுளில் உலாவிவிட்டு அனைவரும் அறிஞர்கள்போலப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்: “குவாண்டம் மெடிசன் என்ன சொல்லுதுன்னா..!” சைக்காலஜியைக் கொஞ்சமாகவாவது தொட்டுக்கொள்ளாமல் யாருமே பேசுவதில்லை. பிரச்சினை ‘என்ன’ என்று எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் ‘எப்படி’ சரி செய்வது என்று அறிவதில்தான் நிபுணத்துவம் உள்ளது. அந்த நோக்கில்தான் இளைஞர்களுக்கான ஒரு பிரத்யேகமான தொடராக இதை எழுதத் திட்டம்.
என்னை நோக்கிப் பாயும் சிக்கல்கள்
கடந்த சில மாதங்களாக என்னைச் சந்தித்த மனிதர்களும் அவர்கள் என்னிடம் குவித்த விஷயங்களும்தான் மீண்டும் என்னை எழுத இழுத்து வந்துள்ளது என்றும் சொல்லலாம். அப்படி என்ன பிரச்சினைகள்?
ஐநூறு கோடி டர்ன்ஓவர் எடுக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்தும் முதலாளிக்குத் தினசரி இரவுத் தூக்கம் மூன்று மணி நேரம்கூட வருவதில்லை. எந்த மாத்திரையும் இல்லாமல் ஆறு மணி நேரம் தூங்க ஆலோசனை கேட்டு வந்துள்ளார்.
மாபெரும் செஸ் விளையாட்டு வீரர் அவர். ஆனால், இறுதிச் சுற்றில் மட்டும் பதற்றம் அடைந்து தோல்வி அடைகிறார். தன் நிலையை முழுமையாக உணர்ந்தும், எப்படி உச்சக்கட்டப் போட்டியில் இயல்பாக விளையாடுவது என்பதே இவர் பிரச்சினை.
எல்லா டாக்டரையும் பாத்தாச்சு. எல்லா டெஸ்ட்டும் எடுத்தாச்சு. எந்த நோயும் இல்லை என்றுதான் ரிசல்ட் வருகிறது. ரூபாய் பத்து லட்சம்வரை செலவு செய்தாயிற்று. இருந்தும் எழுந்து நடக்க முடியவில்லை என்று சொல்லும் பெண். இதனால் திருமணம், வேலை என எல்லாவற்றையும் ஒத்தி வைத்துள்ளார். என்ன காரணம் என்று அறிய ‘சைக்கோமெட்ரிக் டெஸ்ட்’ எடுக்க வந்தார், அந்த நவநாகரிக யுவதி.
தனக்கு வேலை கிடைக்காததற்குக் காரணங்கள் இரண்டு என்கிறார் அந்தக் கிராமத்து இன்ஜினீயர். அவை கறுத்த சருமமும் ஆங்கிலக் குறைபாடும்தானாம். எல்லாத் திறமைகளும் இருந்தும் இன்னமும் தன்னால் ஒரு வேலையைப் பெற முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மையுடன் திரிந்தவர், ஒரு முறை விரக்தியில் தற்கொலை முயற்சித்துள்ளார். எப்படித் தன்னம்பிக்கையை வளர்த்து ஒரு பணிவாய்ப்பைப் பெறுவது என்று கேட்டு வந்திருந்தார்.
இவை அனைத்தும் வெவ்வேறு பிரச்சினைகள்தாம். ஆனால், அடிநாதமாக தங்கள் மனத்தை மாற்றினால் தங்கள் பிரச்சினை மாறும் என்று அனைவருக்கும் தெரிகிறது. எப்படிச் செய்வது என்பதுதான் புரியவில்லை. அதற்குத்தான் உதவி கேட்டு வருகிறார்கள்.
மனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மனதையே பயன்படுத்த வேண்டும். எப்படி என்ற குழப்பம் இருக்கும். பேசுவோம்.
தன் இளைய வயதில் இருக்க இடம் இல்லாமல் காரில் படுத்துத் தூங்கியவர் டோனி ராபின்ஸ். இன்று அவர் நிகழ்ச்சி நடத்தினால் கார்களின் அணிவகுப்பால் ஸ்தம்பிக்கிறது போக்குவரத்து. உலகின் பிரபல ஆளுமைகளின் வாழ்க்கை வழிகாட்டி. பயங்களுடன் வருபவர்களை நெருப்பின் மீது வெறுங்காலுடன் நடக்க வைத்துக் காட்டுகிறார்.
பிரச்சினைகளைத் தீர்க்கச் சிறந்த வழி ஒன்றே ஒன்றுதான்: எதிர்கொள்வது.
வாழ்க்கையில் என்ன பிரச்சினை சொல்லுங்க. தட்டித் தூக்கிடலாம்!
(தொடரும்)
கட்டுரையாளர், மனிதவளப் பயிற்றுநர்,
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
‘மனசு போல வாழ்க்கை-2.0’ பகுதியில் நீங்கள் எதிர்கொண்டுவரும் மனச் சிக்கலுக்கு பதில் அளிக்கத் தயாராக இருக்கிறார் டாக்டர். ஆர். கார்த்திகேயன். உங்களுடைய கேள்விகளை அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, தி இந்து-தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.மின்னஞ்சல்: vetrikodi@thehindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT