Published : 06 Mar 2018 11:10 AM
Last Updated : 06 Mar 2018 11:10 AM
பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூவிலும் மாநிலத்திலேயே முதலாகப் பெண்கள் வருவது தொடர்ந்து நிகழ்ந்து வரும் சாதனை. ஆனால், அதே பெண்கள் உயர்கல்வியில் ஏன் சாதிக்கவில்லை? கல்வி, வேலை, உயர் பதவிகளில் சில பெண்கள் உச்சம் தொடும் அதே வேளையில், கல்வியும் வேலைவாய்ப்பும் மறுக்கப்படும் நிலையில் இன்னமும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.
கருவிலேயே சிதைக்கப்படாமல், கள்ளிப்பால் கொடுத்துச் சிசுக்கொலைக்கு ஆளாக்கப்படாமல், விருப்பப்படும் கல்வியைக் கற்று, ஆசைப்பட்ட வேலையில் சேர்ந்து, சாதி-மதப் பாகுபாடுகளைக் கடந்து விரும்பிய துணையைத் தேர்ந்தெடுத்து, வரதட்சிணைக் கொடுமைக்கு ஆளாகாமல் பெண் ஒருவர் நாற்பது வயதைக் கடந்துவிட்டால் அதுவே சாதனை. இவை அத்தனைக்கும் மேலாக சுயசிந்தனை, சுதந்திரம், பகுத்தறிவு, லட்சியம், சுய முன்னேற்றம் போன்றவை பெண்களைப் பொறுத்தவரையில் எட்டாக்கனியாகவே நீடிக்கின்றன.
இயக்கம் வழிவகுத்தக் கல்வி
கல்வி, வேலை, சுதந்திரம் ஆகியவை தனிமனித உரிமை என்பதைத் தாண்டி அதுகுறித்து விசாலமான, அதேநேரம் ஆழமான பார்வை அவசியமாகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை பெண் விடுதலை என்ற கொள்கை 19-ம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட சமூகச் சீர்த்திருத்த இயக்கங்களைச் சார்ந்தே அமைந்தது. பெண்களின் நிலைப்பாடுகளையும் எதிர்பார்ப்புகளையும் முன்னிறுத்துவதன் மூலம் பாலினச் சமத்துவத்தைக் கோரும் உத்திகளாகவே பெண்ணியக் கோட்பாடுகள் அமைந்துள்ளன. இந்த இயக்கங்கள், பெண்ணியச் சிந்தனைகளின் இயற்கை பரிணாம வளர்ச்சியில் உருவான துறைதான் மகளிரியல்.
இன்று பட்டப் படிப்பு, ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஒரு துறையாக மகளிரியல் உருவாகியுள்ளது. இத்துறை அமைய முன்னோடியாக இருந்தது 1994-ல் சமர்ப்பிக்கப்பட்ட ‘சமத்துவத்தை நோக்கி’ (‘Towards Equality’) என்ற அறிக்கை. இந்திய அரசால் அமைக்கப்பட்ட ‘Status of Women in India’ குழுவின் ஆராய்ச்சியால் இது முன்னெடுக்கப்பட்டது. பெண் கல்வி என்பதைக் கடந்து பெண்களின் நிலையைப் பாரபட்சமில்லாமலும் அறிவார்ந்தும் திட்டமிட வேண்டிய அவசியத்தை இவ்வறிக்கை வலியுறுத்தியது.
துறை வளர்ந்த கதை
இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மகளிரியலை மேம்படுத்துவதற்கான செயல்திட்டத்தை 1986-ல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது. இதன்படி ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மகளிரியல் மையங்கள் நிறுவப்பட்டன.
1974-ல் மும்பையின் எஸ்.என்.டி.டி. மகளிர் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் ஆராய்ச்சி மையம் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழகத்தைப் பொறுத்தவரை அழகப்பா பல்கலைக்கழகம், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம், மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, மதுரை லேடி டோக் கல்லூரி, திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி ஆகியவை முன்னோடிகள். 1985-ல் நிறுவப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் இந்தப் பாதையில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2013-ல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான துறையாக மகளிரியல் நிறுவப்பட்டது.
அகில இந்திய அளவில் இன்று 159 மகளிரியல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் மூடப்படும் அபாயத்திலிருந்து தற்காலிகமாக அவை மீண்டுவந்துள்ளன.
பாகுபாடுகள் அநேகம்
பாலினம் பற்றிய கல்வி ஆண், பெண் இருவருக்கும் அவசியம். அதைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம், வழி செய்ய வேண்டும். ஏன்? மகளிரியல் துறை என்பது பல துறைகளின் கோட்பாடுகளைப் பாலினம் சார்ந்து ஆராய்கிறது. உதாரணமாக, பெண்ணிய நோக்கில் இலக்கியங்களை ஆராய்ந்தால் அவற்றில் பாலினம் சார்ந்த கெட்டித்தட்டிப்போன கருத்துகள் (stereotypes), பாரபட்சமான வெளிப்பாடுகள் புலப்படும். இதேபோல, ஒரே மாதிரியான வேலைக்கு ஆணுக்கும் பெண்ணுக்கும் தரப்படும் சம்பளத்திலுள்ள ஏற்றத்தாழ்வுக்கான காரணத்தை Wage gap முன்னிறுத்தும். இது போன்ற பாகுபாடுகள் நிரம்பிய அநேக சமூக-அரசியல்-கலாச்சார விழுமியங்களை மகளிரியல் கேள்விக்குள்ளாக்குகிறது.
அவற்றை அலசி ஆராய்ந்து மகளிரியலில் முன்மொழியப்படும் கோட்பாடுகள் சமூகத்தை நாம் நோக்கும் பார்வையை மாற்றி அமைக்க முயல்கின்றன. அத்தோடு பல்வேறு துறைகளின் அடிப்படை சித்தாந்தங்களையும் வேறு கோணத்தில் அணுக உதவுகின்றன.
ஆடவரியல் வேண்டாமா?
மகளிரியல் பேராசிரியரான என்னிடம், ஆண்களில் பலரும் பெண்களில் சிலரும் அடிக்கடி கேட்கும் கேள்வி: “மகளிரியல் என்ற துறை அவசியமா? அடுத்து ஆடவரியல் என்ற துறை அமைக்கப்படுமா?” இதற்கான பதில் ஒன்றுதான். இவ்வுலகில் அனைத்துச் செயல்பாடுகளும் ஆண்களைச் சார்ந்தே அமைந்திருப்பதால், மாற்றுக் கருத்தை உருவாக்க மகளிரியல் புலம் அவசியமாகிறது.
தனித் துறை என்ற அளவில் இத்துறைக்கான அடித்தளமும் கோட்பாடுகளும் அமையப்பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில் சமூகவியல், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம், இலக்கியம், வரலாறு, ஊடகவியல் போன்ற பல புலங்களின் கருத்துகள், செயற்பாடுகள், ஆராய்ச்சி முறைகள், ஆய்வுத் தளங்கள் ஆகியவற்றைப் பகுத்தறிய இத்துறை அடித்தளம் அமைக்கிறது. அதுமட்டுமின்றிச் சாதி, மதம், இனம், மொழி, பாலினம் இவற்றின் காரணமாகப் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இத்துறை எடுத்துக்காட்டுகிறது. சமூக ஆர்வலர்களின் செயற்பாடுகளும் அறிஞர்களின் ஆராய்ச்சிகளும் இணைந்த துறையாக விளங்குகிறது.
மொத்தத்தில், பெண்கள் சார்ந்த பார்வையும் பாலின சமத்துவம் பற்றிய கல்வியறிவும் கலாசாரத்தின் வழித்தடத்தையே நிர்ணயிக்கவும் மாற்றியமைக்கவும் அத்தியாவசியமானது.
படிப்பும் வேலையும் எம்.ஏ. முதுநிலைப் பட்டம், ஆராய்ச்சிப் படிப்புகள் (எம்.ஃபில், பி.எச்டி.) மகளிரியல் துறைகளில் வழங்கப்படுகின்றன. பல்துறை நோக்குடையதால், மகளிரியல் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி-ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், அரசாங்க தாய்-சேய் நலம்; சமூக நலம் போன்ற துறைகளிலும் பணிவாய்ப்பு பெறலாம். பல்கலைக்கழக மானியக் குழு அமைத்துள்ள பல்கலைக்கழக / கல்லூரி அரசியர்களுக்கான தகுதி தேர்வு (NET), ஆராய்ச்சி உதவித் தொகைக்கான தேர்வு (JRF) – இவற்றிலும் மகளிரியல் படிப்பு சேர்க்கப்பட்டுள்ளது. |
கட்டுரையாளர், மகளிரியல் துறைத் தலைவர்,
சென்னை பல்கலைக்கழகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT