Last Updated : 27 Mar, 2018 01:40 PM

 

Published : 27 Mar 2018 01:40 PM
Last Updated : 27 Mar 2018 01:40 PM

இணையவழிக் கல்வியின் சூப்பர் ஸ்டார்

 

மெரிக்கா தொடங்கி ஆப்கானிஸ்தானின் குக்கிராமத்துக் குழந்தைகள்வரை கணிதப் பாடங்கள் தொடர்பான சந்தேகங்களை வீட்டிலிருந்தபடியே தீர்த்துக்கொள்ளலாம். பள்ளிக் கணிதம் முதல் சாட் தேர்வுவரை இலவசமாக இணையத்தில் 5,000 வீடியோ பாடங்களைக் கொண்ட கான் அகாடமியைத் தொடங்கிய சல்மான் கானின் கல்வி மாதிரி இன்று உலகம் முழுவதும் கல்வியாளர்களால் வியக்கப்படுகிறது.

உலகக் கல்விச் சூழலையே மாற்றிய சல்மான் கான், கல்வியில் புரட்சி ஏற்படுத்தும் எண்ணத்தையெல்லாம் ஆரம்பத்தில் கொண்டிருக்கவில்லை. இன்னொரு நாட்டில் வசித்த அல்ஜீப்ரா கணிதப் பாடங்களில் சிரமப்பட்ட தன் உறவுக்காரச் சிறுமி நாடியாவுக்கு, யாஹூ மெசஞ்சர் வழியாகச் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார் நிதி ஆலோசகராக இருந்த சல்மான் கான். மைக்ரோசாப்ட் பெயிண்ட் மென்பொருளைக் கரும்பலகைபோல ஆரம்பத்தில் பயன்படுத்தினார்.

ஒரு நாள் சல்மானின் பாடங்களை வீடியோவாகப் பதிவுசெய்து அனுப்பச் சொன்னாள் நாடியா. சந்தேகம் வரும்போது திரும்ப ஓடவிட்டு, தெரிந்த விஷயங்களை மீண்டும் பார்த்துக்கொள்ள முடியும் என்று நினைத்தாள். கான், நாடியாவுக்காகப் பாடம் எடுத்த வீடியோவை யூட்யூபில் போட்டார். கானின் பாடங்கள் நாடியாவுக்கு மட்டுமல்ல; இன்னும் பலருக்கும் தேவையாக இருந்தது பின்னூட்ட நன்றிகளிலிருந்து தெரியவந்தது. இப்போது சல்மான் கானின் பாடங்களைப் பார்த்து லட்சக்கணக்கான மாணவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கின்றனர்.

பள்ளிக்குச் சென்று மற்றவர்களுடன் சேர்ந்து கற்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாடங்களைக் கற்பதில் வெவ்வேறு விதமான வேகத்தையும் திறன்களையும் கொண்டிருப்பார்கள். ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தில், பிரிவில் இடறும் சந்தேகம் இன்னொரு குழந்தைக்கு இருக்காது.

இச்சூழ்நிலையில் குழந்தைகள் அவரவர் வேகத்திலேயே கற்கவும் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் உதவும் 5,000-க்கும் மேற்பட்ட பாடங்கள் இந்த இணையத்தளத்தில் உள்ளன. பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, மாணவர்களின் திறன்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு உதவும் மதிப்பீட்டு முறைகளும் இந்த இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

பில்கேட்ஸின் குழந்தைகளை எட்டிய கான்

சல்மான் கான், 2009-ம் ஆண்டு தனது வீடியோ பாடப் பொழுதுபோக்கை முழுநேரத் தொழிலாக மாற்றினார். சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த முதலீட்டாளர்களில் ஒருவரான ஜான் டோயரின் மனைவி ஆன் டோயர் அளித்த சிறு நன்கொடையின் கீழ் பணியாற்ற ஆரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் அவரது வீடியோக்களை இணையத்தில் பார்க்கும் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது.

2010-ம் ஆண்டு, ஆஸ்பன் ஐடியாஸ் பெஸ்டிவல் நிகழ்வில் பங்குபெற்ற ஆன் டோயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி சல்மான் கானின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த நிகழ்வில் பேசிய பிரபல தொழிலதிபர் பில் கேட்ஸ், தன் குழந்தைகள் கான் அகாடமியின் வீடியோக்களைத் தங்கள் சந்தேகங்களைத் தீர்க்க பயன்படுத்துவதாகக் கூறி பாராட்டிய செய்திதான் அது. வெகு விரைவிலேயே பில் கேட்ஸை சல்மான் கான் சந்தித்தார்.

27chsrs_salman11

பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையிலிருந்து 1.5 மில்லியன் டாலர்களை நன்கொடையாகப் பெற்றார். கூகுள் நிறுவனம் 2 மில்லியன் டாலரை அளித்தது.

தன் உறவினர் பெண்ணுக்கு உதவுவதற்காகக் கணிதப் பாடங்களை எடுக்க ஆரம்பித்த சல்மான் கான், 2012-ம் ஆண்டு டைம்ஸ் இதழ் வெளியிட்ட 100 சாதனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றார். அவரைப் பற்றி பில் கேட்ஸ் வெளியிட்ட குறிப்பில், “ஒரு கணக்குப் பாடத்தை வீடியோவில் போஸ்ட் செய்யத் தொடங்கினார். ஆனால், அவர் கல்வியுலகில் ஏற்படுத்திய தாக்கம் அளவிட முடியாதது” என்று கூறியுள்ளார்.

இப்படித்தான் பாடம் நடக்கிறது

அல்ஜீப்ராவோ கால்குலசோ திரிகோணமிதியோ எதுவாக இருந்தாலும் சல்மானின் குரல் அதைச் சிறுகுழந்தைக்கும் புரிவதுபோல விளக்குகிறது. அதற்குப் பிறகு ஆன்லைன் சோதனைகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட நேரமும் கொடுக்கப்படுகிறது. ஒரு குழந்தை செய்யும் தவறுகளும் சுட்டிக்காட்டப்படும்.

ஏற்கெனவே செய்த தவறை குழந்தை செய்யாதபோது அதற்கு ஊக்கமும் கொடுக்கப்படும். ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட கணக்கில் அந்தக் குழந்தை நம்பிக்கை பெற்ற பிறகு அதற்கடுத்த நிலையில் உள்ள கணக்குக்கும் செல்ல வழிகாட்டும் வகையில் வீடியோ மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

cos-1(1) = ? என்று ஒரு நேர்மாறு திரிகோணமிதி சார்புக் கணக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரு மாணவர் அதற்கு 0 டிகிரி என்று பதிலளித்தால், கணிப்பொறி அவர் சொல்வது சரி என்று சொல்லும். அந்த மென்பொருள் இன்னொரு கணக்கையும் தரும். இப்படியாகப் பத்துக் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்களும் தரப்படும். ஒரு கட்டத்தில் மேல்நிலைப் பள்ளி மாணவருக்கே இன்னமும் சிரமத்தைத் தரும் திரிகோணமிதியை உயர்நிலைப் பள்ளி மாணவரும் கற்றுத் தேறும் அளவுக்கு எளிதாக இருக்கின்றன கான் அகாடமியின் பாடங்கள்.

கான் அகாடமி சார்பில் கலை, அறிவியல், கணிப்பொறி தொடர்பான பாடங்கள் வீடியோக்களாக இருந்தாலும் பள்ளிக் கணிதப் பாடங்களே உலகம் முழுவதும் அதிகமானவர்களால் பார்க்கப்படுகின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமின்றி தமது குழந்தைகளுக்குப் பாடங்கள் சார்ந்து உதவும் பெற்றோருக்கும் இந்த வீடியோக்கள் ஆதரவாக உள்ளன. அவர்கள் கணிதத்தில் புலிகளாக இருக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

10 கோடி பார்வைகள்

சல்மானின் கான் அகாடமி இணையதளம் பத்து கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 190 நாடுகளில் பார்க்கப்படுகிறது. தமிழ் உட்பட 18 மொழிகளில் மொழிபெயர்த்தும் காணப்படுகிறது.

கல்வியை எல்லாருக்குமானதாக மாற்றி ஜனநாயகப்படுத்தியவராக சல்மான் கான் கொண்டாடப்படுகிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தலிபான்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, கான் அகாடமி இணையதளத்தில் எஸ்ஏடி (Scholastic AssessmentTest) தேர்வுக்காகத் தயாராகி, பாகிஸ்தானுக்கு சென்று தேர்வெழுதினார். தற்போது அமெரிக்காவில் ஒரு கல்லூரியில் உயர்கல்வி படிக்கும் யுவதி அவர். இந்த வெற்றிக் கதையைச் சந்தோஷத்துடன் எல்லாரிடமும் பகிர்ந்துகொள்ளும் சல்மான் கானுக்குத் தற்போது 41 வயது.

சல்மான் கான் அமர்ந்திருக்கும் அவரது அலுவலக அறையில் அவரைச் சுற்றிலும் கரும்பலகைகள் அடுத்தடுத்த திட்டங்கள், பாடங்களால் நிரம்பியுள்ளன. “இந்த உலகம் நம்ப முடியாத அளவு ஒன்றுக்கொன்று தொடர்புடையது” என்று கூறிச் சிரிக்கிறார்.

ஆம், அந்தத் தொடர்பை வைத்தே கல்வியை எல்லாருக்குமானதாக மாற்றியவர் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x