Last Updated : 13 Mar, 2018 10:50 AM

 

Published : 13 Mar 2018 10:50 AM
Last Updated : 13 Mar 2018 10:50 AM

200 குழந்தைகள் 200 வழிகாட்டிகள்!

என்ன படிப்பது, எப்படிப் படிப்பது, அடுத்து என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்வதிலிருந்து நட்பில், உறவில், உணர்ச்சிபூர்வமான தருணங்களில் சில தவறான முடிவுகளை எடுத்தவர்கள் பெரும்பாலும் சொல்வது… “யாராவது எனக்கு அந்த நேரத்துல சரியா வழிகாட்டியிருந்தா இப்படி நடந்திருக்காது” என்பதாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் கிராமப்புறங்களில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களில் வாழும் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் வழிகாட்டுதல்கள் அவசியமாகவே உள்ளது. இதை உணர்ந்து தொடங்கப்பட்ட தன்னார்வ அமைப்புதான் ‘வாழை’.

தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு வழிகாட்டி அமர்த்தப்படுகிறார். அந்தக் குழந்தையின் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை அந்தக் குழந்தைக்கு உடன்பிறவா சகோதர சகோதரியாக மாறும் அந்த வழிகாட்டி, அந்தக் குழந்தையோடு தொலைபேசி, கடிதம் மூலமாகத் தொடர்பில் இருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்துக் குழந்தையின் தனித்திறமைகளை வளர்ப்பதிலும் அவர்களோடு உணர்வுபூர்வமாகப் பேசுவதிலும் தனது நேரத்தைச் செலவழிக்கிறார்.

கற்பிக்கும் முறை

‘வாழை’யின் கற்பிக்கும் முறை செயல்வழிக் கற்றல், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் உத்திகளை அடிப்படையாகக் கொண்டது. எவ்வளவு கடினமான கருத்துகளையும் எளிதில் குழந்தைகள் புரிந்துகொள்ள இவர்கள் முறை உதவுகிறது. இங்குக் கல்வியல் திறன்களுக்குச் (academic skills) சமமாக வாழ்க்கை (அல்லது) வாழ்வியல் திறன்களுக்கும் (life skills) முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகளை முற்றிலும் முழுமையான மனிதனாக மாற்றும் வாழ்வியல் திறன்களை மட்டுமே மையமாகக்கொண்ட பிரத்யேகப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

12 ஆண்டுகால வருத்தம்

2005-ல் மாநிலக் கல்லூரியில் படித்த அன்புசிவம், அமுதரசன், ஞானவேல் உள்ளிட்ட ஐவரின் முயற்சியில் தொடங்கப்பட்ட அமைப்பு வாழை. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டிகளை அளிக்கலாம் என்ற முடிவை இந்த இளைஞர்கள் எடுத்தனர். பேராசிரியர் பிரபா கல்விமணி, கல்வியாளர் பத்மாவதி ஆகியோரை ஆலோசகராகக்கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.

“20 குழந்தைகளுக்கு 20 வழிகாட்டிகள் என்ற அளவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து தற்போது விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களில் 200 குழந்தைகளுக்கு 200 வழிகாட்டிகள் என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறது. சென்னையில் ஏறக்குறைய பத்து மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும், இழுத்துப் பிடித்துப் படிக்கவைத்தாலும், பத்தாவது, பிளஸ் டூ முடித்ததுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைத்துவிடும் சூழல்தான் இன்றுவரை கிராமங்களில் நிலவுகிறது. இரண்டு மூன்று பெண்கள் பி.எஸ்சி. நர்சிங் போன்ற படிப்புகளை விழுப்புரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் படித்திருக்கின்றனர். ஆனால் ஒரே வருத்தம், ஒரு பெண்ணைக்கூட உயர்கல்வி அளவுக்குப் படிக்கவைக்க முடியவில்லை. இதற்கு அந்தப் பகுதிகளில் இருக்கும் சமூகச் சூழலே காரணம்” என்கிறார் வழிகாட்டிகளில் ஒருவரான அருண்குமார்.

‘வாழை’ அமைப்பில் வழிகாட்டியாக இணைய முன்வருபவர்களிடம் இவர்கள் எதிர்பார்ப்பது நேரத்தைத்தான். அவ்வாறு முன்வருபவர்களுக்கு மாணவர்களுக்கு வழிகாட்டத் தேவையான பயிற்சியும் இதே அமைப்பு அளித்துவருகிறது. தன்னார்வலர்களின் நன்கொடை, குழந்தைகளின் பெற்றோர்கள் அளிக்கும் ஊக்கம் போன்றவற்றால்தான் இது நடக்கிறது.

“தினக்கூலிகள், வெளியூரில் சென்று வேலைக்குச் செல்பவர்களின் குழந்தைகள் தாத்தா, பாட்டி போன்றவர்களின் அரவணைப்பில் வளர்வார்கள். அந்தக் குழந்தைகளுக்கு அவர்களின் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பாலினச் சமத்துவம், பொதுச் சமூகத்தில் எப்படிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பயிற்சிகளை அளிப்போம்.

விழுப்புரம் சுற்றியுள்ள 8 கிராமங்களில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் இருந்து ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்போம். குடும்பத்தில் முதல் குழந்தை, தாய், தந்தை இருவரில் ஒருவர் மட்டுமே இருக்கும் குழந்தை இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஒரு பள்ளியில் 20 குழந்தைகளைத் தேர்ந்தெடுப்போம்.

அவர்களுக்கு எங்களுடைய பயிலரங்கத்தில் கல்வியைத் தவிர்த்து இசை, நடனம் போன்ற துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்டு சில பயிற்சிகளும் அளிக்கிறோம். எங்களின் குழந்தைகள் கூகுள் டிராயிங் போன்றவற்றில் தங்களின் படைப்புகளை இடம்பெறச் செய்திருக்கின்றனர். தேசிய அறிவியல் மாநாடுகளில் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு மாணவர்கள் மாவட்ட அளவில் தேர்வாகிறார்கள். கடந்த ஆண்டு தேசிய அளவில் ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்கிறார் அருண்குமார்.

குழந்தைகளிடம் கருத்தைத் திணிப்பதில்லை

பத்தாம் வகுப்பு படிக்கும் மோனிகாவுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக வழிகாட்டிவரும் மாலினி கூறுகையில், “குழந்தைகளிடம் முதலில் எங்களை நெருக்கமாக்கிக்கொள்வோம். முதல் ஆண்டிலேயே அவர்களின் கல்வி விஷயத்தில் நேரடியாக ஈடுபட மாட்டோம். அவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்போம்.

Malini 3 மாலினி

மற்றபடி சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் பெண்களைப் பற்றிய புரிதல், மாதவிடாய் குறித்த புரிதல், ‘நல்ல தொடுதல்-கெட்ட தொடுதல்’ என்பது என்ன என்பதை எல்லாம் அவர்களுக்குப் புரியவைப்போம். பதின்பருவத் தடுமாற்றங்களை எதிர்கொள்ளுதல், மேடைப் பேச்சு, ஆங்கிலப் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற தனித்திறன் பயிற்சிகளை அளிக்கிறோம்.

யோசிக்கவைத்தால்போதும் முடிவை அவர்கள் எடுத்துக்கொள்வார்கள். அந்தத் தெளிவை அவர்களுக்குக் கொடுப்பது முக்கியம். அதைத்தான் ஒரு வழிகாட்டியாக நாங்கள் தருகிறோம். சில விஷயங்களைக் குழந்தைகளிடமிருந்து தெரிந்துகொண்டும் இருக்கிறேன்” என்கிறார்.

வாழை போலத் தன்னைத் தந்து தியாகி ஆக வேண்டாம்; வாழையோடு வழிகாட்டியாக இணைந்து நாமும் ஒரு குழந்தைக்கு அண்ணனாகவோ அக்காவாகவோ ஆகலாம்!

தொடர்புக்கு: http://www.vazhai.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x