Published : 20 Mar 2018 11:07 AM
Last Updated : 20 Mar 2018 11:07 AM
ல
ட்சங்களில் கட்டணம் வசூலிக்கும் பெருநகரப் பயிற்சி மையங்களில் சேர்ந்து படித்தால் மட்டும்தான் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியுமா? ‘ஆமாம்’ என்றுதான் பலரும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நினைப்புடனேயே ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ஆட்சி பணித் தேர்வு முதல் வங்கித் தேர்வுகள்வரை எழுதிவருகிறார்கள். அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே வெற்றியைத் தட்டிச்செல்கிறார்கள்.
சென்னை, புதுடெல்லி போன்ற பெரு நகரங்களில் உள்ள ‘வசூல் ராஜா’ பயிற்சி மையங்களில் படிக்கும் வசதி வாய்ப்பு இல்லாமல்போனதுதான் தோல்விக்கான காரணம் என நினைக்கும் பெரும்பாலோர் ஆடுகளத்தில் இருந்து விலகிவிடுகிறார்கள்.
ஆனால், இத்தகைய மூடநம்பிக்கையைப் புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது காஞ்சிபுரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செய்யாறில் செயல்பட்டுவரும் ‘சபர்மதி ஆஃப் சவுத்’ பயிற்சி மையம். இங்கு வழங்கப்படும் கட்டணம் இல்லா பயிற்சிகள் வழியாக இளைஞர்கள் பலர் வங்கித் துறை, குடிமைப் பணி ஆகியவற்றில் பணிவாய்ப்பைப் பெற்றுவருகிறார்கள்.
பொருளாதாரப் பின்னடைவோ பெருநகரங்களில் தங்கிப் படிக்கும் வாய்ப்பின்மையோ ஒருபோதும் இளைஞர்களின் லட்சியப் பாதையில் தடைக்கற்களாக முடியாது என்று நிரூபித்துவருகிறது இம்மையம். அதிலும் நாளைய இயற்கை விவசாயிகளையும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக உருவாக்கும் தளமாக இது உருவெடுத்துவருகிறது.
கம்பசூத்திரம் அல்ல
செய்யாற்றின் செம்மண் பூமியில் ஐந்து ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலத்தைக் குத்தகைக்கு எடுத்து ‘சபர்மதி ஆஃப் சவுத்’ மையத்தை நிறுவியிருக்கிறார் குணசேகரன். பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையின் பிரபல ஐ.ஏ.எஸ். அகாடமி ஒன்றில் பகுதி நேரப் பயிற்சியாளராகப் பணியாற்றிவருகிறார். 2004-ம் ஆண்டுமுதல் ‘ஸ்மைல் வெல்ஃபேர்’ அறக்கட்டளையின் வழியாகக் கல்வி தொடர்பாகப் பல சேவைகளைத் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் செய்துவருகிறார். மறுபுறம் இதுபோன்ற உயர்கட்டண வசூல் முறை இல்லாமலேயே போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முனைப்பில் ‘சபர்மதி ஆஃப் சவுத்’ மையத்தை நடத்திவருகிறார்.
“கல்விக்கு அடுத்தபடியாக வேலை பெறுவதற்கான வழிகளும் இன்று மிகப் பெரிய வியாபாரச் சந்தையாக மாற்றப்பட்டிருக்கிறது. உண்மையில் போட்டித் தேர்வுகளில் வெற்றி அடைவது ஒன்றும் கம்பசூத்திரம் அல்ல. அதற்கு ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரையிலான பாடங்களில் அத்துப்படியாக இருக்க வேண்டும், நாள்தோறும் நாளிதழ் வாசிப்பைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும், எளிய வழிகாட்டுதல் தேவை அவ்வளவுதான்.
சொல்லப்போனால், போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துகிறேன் என்ற பெயரில் மக்களைச் சுரண்டும் கோச்சிங் சென்டர்களை ஒழிக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில்தான் யூ.பி.எஸ்.சி. ஆண்டுதோறும் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திவருகிறது. ஆனாலும், மக்களின் கண்மூடித்தனமாக நம்பிக்கையால்தான் பல மையங்கள் பணத்தில் கொழித்துக்கொண்டிருக்கின்றன. இதை மாற்றுவதுதான் எங்களுடைய அமைப்பின் அடிப்படை நோக்கம்” என்கிறார் குணசேகரன்.
புதுமைத் திட்டம்
பின்தங்கிய சூழலில் இருந்து வரும் துடிப்புமிக்க இளைஞர்கள் ‘சபர்மதி ஆஃப் சவுத் மைய’த்தில் தங்கிப் படிக்கும் விதமாக அடிப்படை வசதிகள் இங்கே செய்யப்பட்டுள்ளன. யூ.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., வங்கித் தேர்வு, நீட் தேர்வு உட்படப் பலவகைத் தேர்வுகளுக்கான பயிற்சிகள் இங்கு இலவசமாக அதேநேரத்தில் புதுமைத் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
அதென்னன புதுமைத் திட்டம்? “எங்களுடைய மையத்தில் தங்கிப் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க விரும்புகிறவர்கள் உணவு, உறைவிடத்துக்கு மட்டும் மாதந்தோறும் ரூ. 2,000 கட்டணம் செலுத்த வேண்டும். மற்றபடி தினந்தோறும் பயிற்சிகளை நானும் உடன் இருக்கும் ஆசிரியர்களும் இலவசமாகவே வழங்குகிறோம். கூடுதலாக ஒன்றரை லட்சம் புத்தகங்கள் கொண்ட நூலகத்தையும் இங்கு அமைத்திருக்கிறோம். இந்த வசதிகளை மாணவர்கள் முழுக்க முழுக்க இலவசமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் உணவு, உறைவிடத்துக்கான குறைந்தபட்ச கட்டணத்தையும் செலுத்த முடியாதவர்களுக்கு இங்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறோம். ஒன்று இயற்கை வேளாண்மை செய்ய வேண்டும் அல்லது சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்.
விவசாயத்தைத் தினந்தோறும் காலை இரண்டு மணி நேரம் செய்ய வேண்டும், சிறப்பு வகுப்புகள் தினந்தோறும் மாலை இரண்டு மணி நேரம் நடத்த வேண்டும். மீதமுள்ள நேரம் முழுவதும் இலவசப் பயிற்சிகள் அளித்து, மாதிரித் தேர்வுகள் நடத்தித் தயார்படுத்துவோம். இதன் மூலம் எங்களிடம் வரும் இளைஞர்களை அலுவலக ஊழியர்களாக மட்டுமல்லாமல் உழவர்களாகவும் சமூக அக்கறை படைத்தவர்களாகவும் மாற்ற முயல்கிறோம்” என்கிறார் குணசேகரன்.
இங்கே பணித் தேர்வுக்கான பயிற்சிகளை அளிப்பது குணசேகரன் என்றால் வேளாண்மை கற்றுத்தருவது அவருடைய தம்பி ராஜவேந்தன். 2010-ம் ஆண்டு முதல் வானகத்தில் நம்மாழ்வாரோடு உடனிருந்து இயற்கை வேளாண்மை செய்தவர் இவர். “‘கரும்பலகையில் எழுதிப் பாடம் நடத்தினால் சில நாட்களுக்குத்தான் நினைவில் நிற்கும். அதே, களப்பணியாக மாறும்போது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருந்து அகலாது’ என்று எங்களுக்கு விவசாயம் காற்றுத்தரும்போது ஐயா அடிக்கடி சொல்வார்.
இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் அதனால் இயற்கை விவசாயத்தைப் பின்பற்றினால் மட்டுமே மனிதனுக்கும் பூமிக்கும் எதிர்காலம் என்பார். அவருடைய வழியில் வந்ததால் நானும் அண்ணனும் சேர்ந்து ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்போடு இருந்தோம். அண்ணனுடைய பலம் படிப்பு, என்னுடையது விவசாயம். இரண்டையும் வாய்ப்பு மறுக்கப்படும் பல இளைஞர்களுக்குக் கொண்டுசேர்ப்பதே எங்கள் திட்டம்” என்கிறார் ராஜவேந்தன்.
இவர்களுடைய கூட்டணியில் நாற்று நட்டு ஏற்றம் காணும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எதிர்காலம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
தொடர்புக்கு: 7010836885
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT