Published : 07 May 2019 11:23 AM
Last Updated : 07 May 2019 11:23 AM
சென்ற ஆண்டு எங்கள் பள்ளியில் ஒரு கணிப்பொறி நிறுவனம் சார்பில் பொது அறிவுப் போட்டி நடத்தப்பட்டது. அதில் மாணவரோடு பெற்றோர் அல்லது ஆசிரியர் ஒருவரும் சேர்ந்த அணியாகப் பங்குபெறலாம்.
பெற்றோர் வராததால் ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் என்னை அழைத்தான். நானும் கலந்துகொண்டேன். ஒன்றிரண்டு தவிர இதுதான் பதிலாக இருக்கும் என்று ஊகித்துப் பதில்களைக் குறித்தோம். முதல் சுற்றில் வென்று இறுதிச் சுற்றுக்குத் தகுதியானோம்.
மாணவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “சார், நாமதான் ஜெயிக்கணும்” என்று சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்குப் பதற்றம் தொற்றிக்கொண்டது. இறுதிச் சுற்றில் ஆறு அணிகள். அவற்றுள் நான்கில் ஆசிரியர்கள் இருந்தார்கள்.
போட்டி தொடங்கியதும் எனது இதயத்துடிப்பு மேலும் அதிகரித்தது. “நாமதான் சார் ஃபர்ஸ்ட் வருவோம்” என்று அவன் சொல்லச்சொல்ல எனக்கு நடுக்கமே வந்துவிட்டது. இறுதிச்சுற்றில் ஊகித்துப் பதில்களைச் சொல்லி எப்படியோ இரண்டாம் இடத்தைப் பிடித்தோம்.
எதெற்கெடுத்தாலும் போட்டி!
எனது அணி மாணவன் அழுவது போலாகிவிட்டான். “நமக்காவது இரண்டாம் பரிசு. பரிசு கிடைக்காதவங்களை நினைச்சுப்பாரு!” என்பதுபோல என்னென்னவோ சொல்லியும் அவனை இயல்பாக்க முடியவில்லை.
இது போட்டி நிறைந்த உலகம் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். வென்றவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி வசப்படும் என்று சொல்லியே குழந்தைகளை அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறோம்.
போட்டி என்று எதைச் சொல்லுகிறோம்? வெல்பவருக்கு என்ன கிடைக்கிறது? அதிகச் சம்பளம் தரும் வேலை கிடைத்துவிட்டால் வாழ்வு மகிழ்ச்சியாக ஆகிவிடுமா?
வாழ்வின் மெல்லிய உணர்வுகளையும் மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டாட்டங்களையும் தொலைத்துவிட்டுக் கற்பனையான போட்டிக்குள் குழந்தைகளை இழுத்துக்கொண்டு நாமும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
எப்போதாவது ஓய்வு கிடைத்தால் நமது குழந்தைப் பருவத்தில் அனுபவித்த சின்னச்சின்ன மகிழ்ச்சியை நினைத்து ஏங்கிப் பெருமூச்சு விடுகிறோம். ஆனால், நம் குழந்தைகளிடத்தில் குறை கண்டுபிடித்து அறிவுரைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.
விழுந்தா என்ன?
இந்த விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்ததால், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘பார் சைக்கிள்’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். சிறார்களுக்கு இடையில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவனின் கதை. போட்டியில் அவன் வெற்றி பெறவில்லை என்றாலும் முடிவு அருமையானது.
படம் முடிந்ததும் மாணவர்கள் ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கினார்கள்.
“தாத்தா சைக்கிள் கொடுத்தது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு!”
“அவன் போட்டியில் ஜெயிக்கணும்னு நினைக்கல. சைக்கிள் ஓட்டினா போதும்ணு நினைச்சான்.”
“அடிக்கடி விழுகுறான்.”
“விழுந்தா என்ன? திரும்ப எந்திரிச்சு ஓட்டிப் பழகிடுறான்ல!”
“கீழே விழுந்தா யாராவது தூக்கிவிட வருவாங்கன்னு நினைக்காம நாமே எழுந்திரிக்கணும்.”
விளையாட்டு, சின்னச்சின்ன ஆசைகள், கனவுகள் என்று குழந்தைகளுக்கான உலகம் அவர்களுக்குள் இருந்துகொண்டே இருக்கிறது. வாழ்க்கையைப் போட்டியாக்கி, குழந்தைகளைத் தனியாக்கி நமது கற்பனை உலகுக்குள் திணிக்கிறோம்.
நமது பயங்களைச் சுமந்துகொண்டு நாம் செலுத்தும் திசையில் குழந்தைகள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். பழியைச் சுலபமாகச் சமூகத்தின் மீது போடுகிறோம். நாமும் சேர்ந்ததுதானே சமூகம்!
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com
‘பார் சைக்கிள்’ காண இணையச் சுட்டி: |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT