Published : 21 May 2019 05:11 PM
Last Updated : 21 May 2019 05:11 PM

கரும்பலகைக்கு அப்பால்... 20 - தூங்கும் சிறுவனைப் பார்த்துச் சிரித்தேன்!

பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே யாருக்காவது தூக்கம் வந்தால் எழுந்து ஓரமாகக் கொஞ்ச நேரம் நின்றால் தூக்கம் போய்விடும். தவிர்க்க இயலாவிட்டால் தூங்கிவிடலாம். பாடவேளையின்போது தூங்குபவர்களை யாரும் எழுப்பக் கூடாது என்று ஆண்டின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுவேன். அவ்வப்போது யாரேனும் தூங்குவதுண்டு.

ஒன்பதாம் வகுப்பில் ஒருநாள் கலந்துரையாடலின்போது ஒரு மாணவன் தூங்கிக்கொண்டு இருந்தான். சில நாட்களாகத் தினமும் அவன் தூங்குவது வழக்கமாக இருந்தது.

இடைவேளையின்போது அவனிடம் பேசினேன். குடும்பம் குறித்துச் சில செய்திகளைக் கேட்ட பிறகு “வீட்டுக்குப் போனபின் என்னவெல்லாம் செய்வாய்?” என்றேன்.

“சார், சாயந்திரத்திலிருந்து ராத்திரிவரை பருத்திப்பால் கடையில் வேலைபார்ப்பேன். காலையில் பால் பாக்கெட் போட்டுட்டு, பேப்பர் போட்டுட்டு பள்ளிக்கூடம் கிளம்புவேன்” என்றான்.

இரவு பத்து மணியையும் தாண்டி நீளும் வேலை. அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து பால், பேப்பர் எனத் தினமும் தொடர்கிறது அச்சிறுவனின் உழைப்பு.

பள்ளிக்கு வெளியே வேலை

பள்ளிக்கு வெளியே உள்ள உலகம் பெரும்பாலான குழந்தைகளுக்கு மென்மையானதாக இல்லை. அந்தக் கொடூரத்தின் பிடியிலிருந்து பகல்பொழுதைக் காப்பாற்றும் இடங்களாக பள்ளிகளே இருக்கின்றன. அதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

மறுநாள் வகுப்பறையில் கலந்துரையாடலைத் தொடங்கினேன்.

“தம்பிகளா, கடைசி இயல் முழுவதும் தொழில், வியாபாரம் குறித்த செய்திகள் இருக்கு. அதைத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசுவோம். உங்க வீட்டில் என்னென்ன வேலைகளை நீங்க செய்றீங்க?”

மாட்டுத் தொழுவத்தைத் தூய்மை செய்தல், மாடுகளைக் கவனித்தல், தோட்டத்தில் வேலை, கடைக்குப் போய் ஏதாவது வாங்கி வருதல், விளையாட்டு, கடையைக் கவனித்தல், சொந்த உணவகத்தில் வேலை… என்று பல வேலைகளைச் சொன்னார்கள்.

“வீட்டு வேலைகள், உங்க கடை, வயலில் வேலைகள் தவிர வெளியே என்ன வேலைகளுக்குப் போறீங்க?” என்று கேட்டேன்.

தினசரி வேலைகளுக்குச் செல்பவர்கள் குறைவு என்றாலும் வார இறுதியில் தண்ணீர் லாரியில் உதவியாளர், பெயிண்டிங், கட்டட வேலை எனப் பலரும் செல்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர் சட்டம் குறித்து ஓரளவேணும் அறிந்திருக்கின்றனர்.

“தம்பிகளா, குழந்தைத் தொழிலாளர் பற்றிப் பலவிதமா சொல்றாங்க. ஆனாலும் சட்டப்படி 14 வயது முதல் 18 வயது வரை கடுமையான வேலைகளில் அமர்த்தக் கூடாது என்று சட்டம் சொல்லுது” என்று கூறினேன்.

பல்வேறு கருத்துகள் பேசப்பட்டாலும் குழந்தைத் தொழிலாளர்களைப் பேரளவு குறைக்கச் செயல்பாடுகள் பெரிதும் இல்லை. வறுமை பிடித்தாட்டும் குடும்பங்கள்தாம் இங்கு அதிகம். கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் பல ஆண்களின் வருமானம் மதுக்கடைகளில் செலவாகிறது.

 பெண்களும் குழந்தைகளுமே பெரும்பாலான குடும்பங்களின் தூண்களாக இருக்கின்றனர். பள்ளிக்கு வெளியே குழந்தைகள் சந்திக்கும் உலகம் குறித்த உரையாடல்களும் குழந்தைகளைக் காக்கும் செயல்பாடுகளும் அவசியம் என்று தோன்றுகிறது.

எங்கப்பாவும் தினமும் குடிப்பாரு!

மறுநாள், Ambani the investor என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். தெலுங்குப் படம் என்றாலும் மொழி தடையாக இல்லை. தினமும் வீட்டுக்கே வாங்கிவந்து குடிக்கும் அப்பாவைப் பார்த்துக் கவலைப்படுகிறான் இளம்பருவச் சிறுவன். அப்பா குடித்துவிட்டு வைத்திருந்த காலி மதுப்புட்டிகளுடன் காலையில் அவனது பயணம் தொடங்குகிறது.

பழைய பொருட்கள் வாங்கும் கடையில் கிடைத்த சிறுதொகையுடன் பால் பாக்கெட் போடுதல், தேநீர் விற்றல் என ஒன்றிலிருந்து அடுத்த வேலைகளைத் தொடர்கிறான். தனக்கான சைக்கிளை வாங்குவதற்கான திட்டத்துடன் அவனது வேலைகளும் சேமிப்பும் படிப்பும் தொடர்கின்றன. படம் முடிந்ததும் ‘எங்கப்பாவும் தினமும் குடிப்பாரு!’ என்று ஆர்வ மிகுதியால் ஆங்காங்கே எழுந்த குரல்கள் முழுமையாகாமலே வருந்தித் தேய்ந்தன.

வேலை, உழைப்பு, சேமிப்பு குறித்த புரிதலுக்காகவே இப்படத்தைத் திரையிட்டாலும் குடி குறித்து எழுந்த குரல்கள் அது குறித்த உரையாடலைத் தொடங்கலாமா என்ற எண்ணத்தை உருவாக்கின. அவர்கள் பேசுவார்கள் என்றாலும் வகுப்பறையில் அனைவருக்கும் முன்னால் பேசுவது அவர்களது மனவேதனையை அதிகப்படுத்தும். அவர்களது வேதனை சகநண்பனுக்குக் கேலியாகவும் மாறலாம் என மனம் எச்சரித்தது.

“தம்பிகளா, இந்தப் படம் என்ன சொல்லுது எல்லோருக்கும் தெளிவா புரிஞ்சிருக்கும். இது குறித்து என்ன தோணுச்சு என்பதைப் பாடத்துக்குப் பிறகு கலந்துரையாடலாம். இப்போது வகுப்புக்குச் செல்வோம்” என்று சொல்லிக்கொண்டே வகுப்பறையில் தூங்கும் சிறுவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனும் சிரித்தான்.

 

‘Ambani the Investor’ காண இணையச் சுட்டி:

 https://bit.ly/18J9F6J

 

- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,

தொடர்புக்கு: artsiva13@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x