Published : 09 Apr 2019 01:01 PM
Last Updated : 09 Apr 2019 01:01 PM
தேர்வின் அழுத்தத்தில் இருந்து மாணவர்களைத் தளர்த்த காணொலிக் காட்சி அறைக்கு அழைத்து வந்தேன். “ஐயா! எப்போதும் சின்னச் சின்ன படமா போடுறீங்க. பெரிய படமா பார்க்கலாமே!” என்றனர் மாணவர்கள்.
“சரி. இன்று ஒரு பெரிய படம் பார்க்கலாம். தமிழ்த் திரைப்பட உலகின் புகழ்பெற்ற எடிட்டரான வி.லெனின் எடுத்தது” என்று சொல்லி ‘மொட்டுக்கா’ படத்தைத் திரையிட்டேன்.
நான்காம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்குச் செல்லும் ஆறுமுகம் என்ற மாணவனைப் பற்றிய கதை. கூலி வேலை செய்யும் பெற்றோரின் ஒரே மகன் ஆறுமுகம். அவன் பரீட்சையில் பாசாகி ஐந்தாம் வகுப்பு போக வேண்டும் என்று அம்மா நேர்த்திக்கடன் வைக்கிறார்.
ஆறுமுகம் பாசாயிட்டான். குடும்பமே மகிழ்கிறது. ஆறுமுகத்துக்கு மகிழ்ச்சியைத் தாண்டி புதுப் பிரச்சினை தலை தூக்குகிறது. ஐந்தாம் வகுப்பு கணக்கு வாத்தியாரைப் பற்றி சக நண்பர்கள் சொன்ன கதைகள் அவன் நினைவுக்கு வந்து வயிற்றில் புளியைக் கரைக்கின்றன.
பட்டம் விடுறதில்லை
“பிச்சுப்புடுவேன் பிச்சு!” என்று ஆறுமுகத்தின் நினைவில் வந்து மிரட்டுகிறார் கணக்கு வாத்தியார். அடிகளைவிட அவரின் கொட்டுகள் குழந்தைகளுக்கு எமன். விடுமுறை விளையாட்டுகளில் ஈடுபடாமல் பயத்திலேயே இருக்கிறான் ஆறுமுகம். பள்ளி திறக்கும் காலம் நெருங்கும்போது உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.
ஆறுமுகத்தின் ஐந்தாம் வகுப்பு முதல்நாள் அனுபவத்தோடு படம் முடிந்தது. “ஐயா, நான் நினைச்சேன்! இப்படித்தான் முடிவு இருக்கும்னு!” என்று ஒரு மாணவன் உற்சாகமாகக் கத்தினான்.
“ஐயா, நாலாம் வகுப்பில் பாஸ் ஆகணும்னு ஆறுமுகம் அவ்வளவு ஆசைப்படுறானே, எட்டாம் வகுப்புவரை எல்லோரும் பாஸ் தானே!” என்று ஒரு கேள்வி எழுந்தது.
“கல்வி உரிமைச் சட்டம்தான் நமக்கு அந்த உரிமையைக் கொடுத்திருக்கு. தேர்வு முறைகள் மாறி, செயல்பாடுகளுக்கு மதிப்பெண்கள் என்று ஆகியிருக்கு. அதுக்கு முன்னாடி எல்லா வகுப்பிலும் ‘பெயில்’ போடுவாங்க. பலரோட படிப்பு அதோடு நின்றுவிடும்” என்றேன்.
“அப்போ புத்தகங்களை வாங்க மிகவும் சிரமப் பட்டிருக்காங்க. இப்போ இலவசமாகத் தர்றாங்க. அது நல்லது சார்” என்று ஒரு மாணவன் கூறினான்.
“ஆமா, இந்தப் படத்தில் அப்பப்போ நிறைய விளையாட்டுகள் விளையாடுறாங்க. நீங்க அதெல்லாம் விளையாடுவீங்களா?” என்று கேட்டேன்.
“எல்லா விளையாட்டும் இப்பவும் விளையாடுறோம். பட்டம் மட்டும் இப்போ இல்லை” என்று ஒரு குரல் எழுந்ததும் பலரும் ஆமோதித்தனர்.
தேர்வு இருக்கக் கூடாது!
“சரி, உங்க மனசுக்குப் பிடிச்ச பள்ளி எப்படி இருக்கணும்?” என்று கேட்டேன்.
பள்ளி வளாகத்தில் நிறைய மரங்கள் இருக்கணும். வகுப்பறை கண்ணாடியால் ஆனதாக இருக்கணும்.
முதல் பதிலே பலருக்கும் ஆர்வத்தைத் தூண்டியது. நிறைய ஆசைகளைப் பகிர்ந்துகொண்டார்கள். அவற்றுள்,
காலை உணவு தர வேண்டும்.
நீங்க ஒரு பாடத்தைச் சொல்லிக் கொடுக்குறீங்க. நாங்க ஐந்து பாடங்களைப் படிக்கிறோம். புத்தகமெல்லாம் பெரிசு பெரிசா இருக்கு. புத்தகங்களில் அதிகப் பாடங்கள் இருக்கக் கூடாது. தேர்வும் இருக்கக் கூடாது.
வாரத்துக்கு ஒரு நாள் கலர் டிரஸ் போட்டுட்டு வரலாம்னு சொல்லணும்.
சனி, ஞாயிறு என்று இரண்டு நாட்கள் தொடர்ந்து லீவு விடாமல் புதன்கிழமை ஒரு நாள், ஞாயிறு ஒருநாள் என்று லீவு விடணும்.
மாலை மூன்று மணியோடு பள்ளியை முடிச்சுட்டு விளையாட்டு சொல்லித் தரணும். நீச்சல் குளம் இருக்கணும். விளையாட்டில், போட்டிகளில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கணும்.
திட்டவே கூடாது. நாங்க தவறு செய்தா எடுத்துச்சொல்லுங்க.
என்பது போன்ற ஆசைகள் மிகவும் முக்கியமானவை. இந்த ஆசைகளுக்குள் கல்வியில் மாற்றங்களுக்கான நிறைய செய்திகள் ஒளிந்துள்ளன. பள்ளி நிகழ்வுகள், கற்பித்தல் செயல்பாடுகள் போன்றவை பெரும்பாலும் சடங்குகள் ஆகிவிட்டன.
பாத்திரத்தின் வடிவத்தை நீர் எடுத்துக்கொள்ளும் என்பதை நாம் மறந்துவிட்டோம். நமக்குப் பிடித்த பாத்திரமாக அதுவும் ஒரே மாதிரியான பாத்திரமாக மாணவர்களை வார்க்க முயல்கிறோம். மாணவர்களின் கனவுகளுக்குக் காது கொடுத்து, அவர்களுடன் கலந்துரையாடி மாற்றங்களைத் தொடங்காமல் நமக்குப் பிடித்தவற்றை அவர்கள் மீது திணித்துக்கொண்டிருக்கிறோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT