Published : 30 Apr 2019 11:55 AM
Last Updated : 30 Apr 2019 11:55 AM
கோவையில் ஆறு வயது சிறுமி பாலியல் கொடுமையால் மரணமடைந்த செய்தி மனதில் கடுங்கோபத்தைத் தேக்கியது. பொள்ளாச்சி சம்பவம் குறித்த பல்வேறு செய்திகளுக்கிடையே இதுவும் மனத்தில் வருத்தத்தை ஏற்படுத்தியது.
பொள்ளாச்சி சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற போராட்டங்கள் மாநிலமெங்கும் நடைபெற்றன. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வலம்வந்தன. சட்டங்கள் கடுமையாக வேண்டும். மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது போன்ற சமூகக் கோபத்துக்கு மத்தியில் சில பதிவுகள் கவனிக்க வைத்தன.
பெண் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? உனக்கு எங்கே போச்சு அறிவு!, பொள்ளாச்சியில் பெண் எடுக்காதே என்பது போன்ற கிண்டல் மீம்ஸ்கள், பொள்ளாச்சி வீடியோ என்ற தேடலே அதிகமாக இருந்தது என்ற செய்திகள், வாட்ஸ்அப்பில் வலம்வந்த படங்களைப் போன்ற பல்வேறு செய்திகளில்தான் இச்சமூகத்தின் வேறு முகமும் ஒளிந்திருக்கிறதோ என்ற எண்ணம் மனத்தில் தோன்றியது.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களிடையே பொள்ளாச்சி சம்பவம் குறித்துப் பேசத் தொடங்கினேன். மூன்று மாணவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசிச் சிரித்தனர். அதைப் பார்த்ததும் கோபம் வந்தது.
“தம்பிகளா! பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. ஏன் இப்படியான பாலியல் வன்முறைகள் நடக்குது என்று பலரும் பல்வேறு கருத்துகளைச் சொல்றாங்க. ஏற்கெனவே நமது வகுப்பில் உரையாடியிருக்கிறோம்.
பெண்கள் எப்படி இருக்கவேண்டும் என்று அவரவர் கருத்துகளை எழுதியிருக்கிறோம். அதிலிருந்து பெண் குறித்த சமூகத்தின் பொதுப்பார்வையில் இருந்து நாம் மாற்றி யோசிக்க முயன்றிருக்கிறோம். இப்போ இந்த நிகழ்வு நாட்டை உலுக்கியிருக்கு. கோவையில் ஆறு வயதுச் சிறுமி பாலியல் கொடுமையால் கொல்லப்பட்டிருக்கிறாள்.
இதுபோன்ற பல்வேறு கொடுமைகள் நடந்துக்கிட்டே இருக்கு. இவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்று யோசிங்க. இப்போ ஒரு படம் பார்க்கலாம். பிறகு கலந்துரையாடுவோம்” என்று சொல்லிவிட்டு ‘செங்காந்தாள்’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன்.
பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். குடும்பம் நிலை குலைந்து நிற்கிறது. ஊரெங்கும் பல்வேறு பேச்சுகள், அறிவுரைகள், கேலிகள். சிறுமியின் அப்பா அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முயல்கிறார். அவள் படிக்க விரும்புகிறாள்.
அவளுடைய அத்தையோ, பெண் குழந்தைகளை எவ்வாறு வளர்க்க வேண்டும், இனி என்ன செய்ய வேண்டும் என்று அவளுடைய அம்மாவுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட சிறுமி கோபத்துடன் அத்தையிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்கிறாள். திருமணம் பேசிவிட்டு வந்த அப்பாவிடம் தனது முடிவைச் சொல்கிறாள்.
படம் முடிந்ததும், “சொந்தக்காரங்க, சுற்றியிருப்பவங்க ஏதாவது சொல்லியே கொன்னுடுவாங்க. அந்தப் பொண்ணு எடுத்த முடிவு சரிதான். இப்படித்தான் எங்க ஊரில் நடந்துச்சி. கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா அந்தப்பொண்ணு செத்துட்டா” என்று பல நிகழ்வுகளை மாணவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
தம்பிகளா, எல்லாருமே அறிவுரை சொல்றாங்க. அந்தச் சிறுமி அவளோட அத்தையிடம் கேட்ட கேள்விகள் ரொம்ப முக்கியமானவை. அந்த அக்கா என்ன கேட்டாங்க என்றேன். அனைவரும் சொன்னார்கள். இதிலிருந்து நாம் தொடங்கலாம். இதுபோன்ற பாலியல் கொடுமைகளுக்குப் பெண் குறித்த ஆணின் பார்வைதான் காரணமாக இருக்கிறது. ஓர் ஆண் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாளை நாட்குறிப்பில் எழுதி வாருங்கள் என்றேன்.
பெண்ணை மதிக்க வேண்டும்; சகோதரியாக நினைக்க வேண்டும்; ஆண், பெண் இருவருக்கும் தனித்தனியான பேருந்துகள் இருக்க வேண்டும்; தவறு செய்தால் கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்; வயதுக்கு மீறியவர்களிடம் பழகக் கூடாது; அசிங்கமாகப் பேசக் கூடாது எனப் பல்வேறு எண்ணங்களைப் பகிர்ந்திருந்தனர். எல்லோரும் எழுதியிருந்த ஒன்று, செல்போனில் தேவையில்லாத படங்களைப் பார்க்கக் கூடாது என்பது. அதில் ஒரு முக்கிய செய்தி ஒளிந்திருப்பதாகத் தோன்றியது.
சமூகமும் பெரும்பான்மையான திரைப்படங்களும் பெண்ணை உடலாகவும் ஆணின் உடைமையாகவுமே சித்தரிக்கின்றன. குழந்தைப் பருவம் முதலே ஆண் உயர்ந்தவன் என்ற எண்ணம் கட்டமைக்கப்படுகிறது. இப்போது செல்பேசி வழியே திறந்திருக்கும் கதவுகள் ஆபத்தானவை. கட்டுப்படுத்த இயலாதவை. அவை ஆண் மனத்தில் ஏற்படுத்திவரும் விளைவுகளையும் கவனிக்க வேண்டும்.
தண்டனைகள், அறிவுரைகளைத் தாண்டி பெண் ஆணின் சக பயணி. அவர்களை உணர்வுடன் மதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் பழக்கங்களை குழந்தைப் பருவத்திலிருந்தே உருவாக்க வேண்டும். அத்தகைய செயல்பாடுகளை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே பாலியல் கல்வியாக இருக்கும் என்று தோன்றுகிறது.
‘செங்காந்தாள்’ படத்தை காண
இணையச் சுட்டி: http://bit.ly/2Vvlh9F
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT