Published : 02 Apr 2019 11:31 AM
Last Updated : 02 Apr 2019 11:31 AM
ஏப்ரல் 1 - கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாள்
கல்வி உரிமைச் சட்டம் 2010 ஏப்ரல் 1 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. பத்தாம் ஆண்டை நோக்கிச் செல்லும் கல்வி உரிமைச் சட்டத்தின் நிலை குறித்தும், தமிழகக் கல்வி நிலை குறித்தும் கல்வியாளர்கள் அலசுகிறார்கள்.
பள்ளிகளா, கூண்டுகளா?
“நாடு முழுவதும் 10 சதவீதம் பள்ளிகளில்தான், கல்வி உரிமைச் சட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடங்கள் பொருளாதார வசதி குறைந்த வர்களுக்கு வழங்கப்படுகின்றனவா என்பது முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை.
சிறிய, சிறிய கூண்டுகளில் தனியார் பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விளையாட்டு மைதானம், காற்றோட்டமான வகுப்பறைகள், விசாலமான அறைகள் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், ஏராளமான தனியார் பள்ளிகள் தமிழகத்தில் மூடப்படும்.
விளையாட்டு மைதானம் இல்லாமல் எப்படி ஒரு பள்ளி, பள்ளியாக இருக்கும்? 8-ம் வகுப்புவரை உள்ள பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டும். அதில் 20 பேர் இருக்க வேண்டும். இதில் 75 சதவீதத்தினர் குழந்தைகளின் பெற்றோர். அதில் 50 சதவீதத்தினர் பெண்களாக இருக்க வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கல்வி ஆர்வலர்கள் எனக் கலந்து இருக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு அதிகாரம் மிக்க ஓர் அமைப்பு. ஆனால், அது பெயரளவில்தான் உள்ளது”
- வே. வசந்திதேவி, தலைவர், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்.
வலுவிழக்கும் அரசுப் பள்ளிகள்
எழுத்து, இலக்கணம், பாடநூல், பாட ஆசிரியர் என அனைத்தும் தாய்மொழியில் உள்ளன. ஆனால், சட்டம் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தவில்லை.
அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பில் ஆங்கிலவழிக் கல்வி வந்த நிலையில், இன்றைக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளும் ஆங்கிலவழிக்குள் கொண்டுவரப்பட்டு விட்டன. தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்துவது, அரசுப் பள்ளிகளைப் பலவீனப்படுத்துவது போன்ற செயல்களைத்தான் இந்தச் சட்டம் செய்கிறது. அரசு முதன்மைச் செயலரின் குழந்தைகளும் பேரன் பேத்திகளும் எங்கே படிக்கிறார்கள்? இவர்கள் அரசுப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்காதபோது,மக்கள் மட்டும் எப்படிச் சேர்ப்பார்கள்?
6-14 வயதுள்ள குழந்தைகளை அரசு அல்லது தனியார் பள்ளிகளில் சேர்த்தால் மட்டும் போதும், என்பதாகக் கல்வி உரிமைச் சட்டம் நீர்த்துப்போய்விட்டதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் 25 சதவீதத்தினரைத் தனியார் பள்ளிகளில் கொண்டுபோய்ச் சேர்ப்பதற்கு வழிவகுத்து, அதன்மூலமாக அரசுப் பள்ளிகளை மெல்ல வலுவிழக்கச் செய்து, மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குத்தான், இந்தச் சட்டம் வழிவகுத்துள்ளது. இவ்வாறான ஒரு சட்டத்தைக் கல்வி உரிமைச் சட்டம் என அங்கீகரிக்க முடியுமா?
- பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை.
முன்மாதிரிகளைவளர்த் தெடுக்கலாம்!
“உலகில் பல நாடுகள், ஒரு நூறாண்டுக்கு முன்பே கல்வி ஓர் அடிப்படை உரிமை என்ற சட்டத்தை இயற்றிவிட்டன. ஆனால், விடுதலை பெற்று அறுபதாண்டுகளுக்குப் பிறகுதான் நாம் இயற்றினோம்.
சட்டம் இயற்றப்பட்ட பிறகும் 6 முதல் 14 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி கிடைக்கவில்லை. கறுப்புப் பணம் உருவா கும் முதன்மையான துறைகளில் ஒன்றாகக் கல்வித் துறையும் உள்ளது. கல்வித் துறைக்குத் துணைத்தீர்வை வசூலிக்கப்படும் நிலையில் தரமான, சமமான கல்வியைக் கட்டணமில்லாமல் கிடைக்கச் சட்டம் வழிவகை செய்யவில்லை.
கட்டணமில்லாக் கல்வி வழங்கும் அரசுப் பள்ளிகளில் வகுப்புக்கு ஒரு ஆசிரியர், பாடத்துக்கு ஒரு ஆசிரியர், உடற்கல்வி, கலைக் கல்வி, தொழிற்கல்வி போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளுக்குத் தனித்தனி ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
இதைச் செய்யாமல், எட்டாம் வகுப்புவரை கட்டாயத் தேர்ச்சியை மட்டும் மறுப்பதன் மூலம் கல்வித் தரத்தை நிலைநாட்டிவிட முடியும் என்பது கபட நாடகம். தனியார் நிர்வகிக்கும் அரசு உதவிப் பள்ளிகள், கல்லூரிகள் ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன.
அவை இலவசக் கல்வி வழங்கும் பொதுக் கல்வி நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. இவற்றை முன்மாதிரியாகக்கொண்டு அனைத்துத் தனியார் சுயநிதிப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பொதுப் பள்ளிகளாக மாற்றும் வகையில் கல்வி உரிமைச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.
அருகமைப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் வகையில் சேர்க்கைக்கு வரையறை வேண்டும். கல்வி உரிமைச் சட்டம் 25 சதவீத ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கும் ஏற்பாட்டுக்காக, தனியார் சுயநிதிப் பள்ளிகளுக்கு நிதி அளிக்க வகை செய்கிறது. இதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் ஏற்கெனவே நிறுவப்பட்டிருக்கும் தனியார் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளைப் போலத் தனியார் சுயநிதிப் பள்ளிகளை மாற்றினால் மட்டுமே அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி கிடைக்கும்.”
- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு.
கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு பள்ளிப் பருவத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயமாகக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற இலக்கு ஓரளவு எட்டப்பட்டிருக்கிறது. என்றாலும், தரமான கல்வி இலவசமாக ஏழை மாணவர்களைச் சென்றடையும் நாள் தொலைதூரத்தில் இருப்பதே கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களின் கவலையாக நீடிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT