Published : 05 Mar 2019 12:07 PM
Last Updated : 05 Mar 2019 12:07 PM
‘சமமாகச் சிந்திப்போம், புத்திசாலித்தனமாகக் கட்டமைப்போம், மாற்றத்துக்காகப் புதியன உருவாக்குவோம்’ என்பதே 2019-ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்துக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சமத்துவத்தைப் பற்றிப் பேசுவது என்பதே ஒருதலைப்பட்சமான பார்வை, பெண்களுக்கு மட்டுமே அனுகூலமானஅணுகுமுறை என்ற பொத்தாம்பொதுவான விமர்சனத்துக்கு இந்தக் கூற்று விளக்கம் அளிப்பதாக அமைந்திருக்கிறது.
ஏனென்றால், சமமாகச் சிந்திப்பது என்பது பாதிக்கப்பட்டவருக்கு நீதிபரிபாலனம் செய்யும் முயற்சி மட்டுமல்ல; அதுவே புத்திசாலித்தனமான பார்வையும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான முன்னெடுப்பும்கூட. ஆனாலும், இன்றும் கல்வி மேம்பாட்டிலும், சுகாதார அடிப்படையிலும், பொருளாதார வளர்ச்சியிலும், அரசியல் அதிகாரப்படுத்துதலிலும் பெண்களுக்குத் தொடுவானம் தொலை தூரத்தில்தான் உள்ளது.
இந்தியா, சீனா உட்பட அனைத்துத் தெற்காசிய நாடுகளிலும் 100 ஆண்களுக்கு 74 பெண்கள் என்ற விகிதாச்சாரத்தில் மட்டுமே தொடக்கப் பள்ளியில் பெண் குழந்தைகள் சேர்க்கப்படுவது 1990-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்தது.
22 ஆண்டுகள் கழித்து அதே ஆய்வு நடத்தப்பட்டபோதும் பழைய விகிதாச்சாரத்தில் எத்தகைய மாற்றமும் இல்லை. பள்ளிக்குச் செல்ல வேண்டிய பருவத்திலும் நேரத்திலும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பெண்களும் பெண் குழந்தைகளும் கால் கடுக்க நெடுந்தொலைவு நடந்து் சென்று தங்களுடைய வீடுகளுக்காக வீதிகளில் நின்று நீர் இறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
வளர்ச்சியில் ஒரு படி
கட்டாய இலவசக் கல்விச் சட்டத்தாலும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி கற்பித்தலின் முக்கியத்துவம் தொடர்ந்து வலியுறுத்தப்படுவதாலும் இந்தியாவில் இந்த நிலையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அரசியல், பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய நான்கு தளங்களிலும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் மிகப் பெரிய பாலின இடைவெளி்் நீடிக்கவே செய்கிறது.
குறிப்பாக, படித்து முடித்து நல்ல வேலை கிடைத்துப் பொருளாதாரத் தற்சார்ப்பு நிலையடைவது பெண் வளர்ச்சியில் முக்கிய அங்கமாகும். ஆனால், கல்வி பெறுவதற்கே பொருளாதாரப் பின்புலம் அவசியப்படுகிறதே! குறிப்பாக, உயர்கல்வி மேற்கொள்ள நிதி உதவி தேவை. இந்த அடிப்படையில் அரசும் தனியார் நிறுவனங்களும் பெண்களுக்காகப் பிரத்தியேகமாக வழங்கும் ஊக்கத்தொகை, உதவித்தொகைகளில் சில:
அறிவியலாளர் ஆகலாம்!
அறிவியல் துறையில் சாதிக்கத் துடிக்கும் மகளிருக்கு ஊக்கமும் உதவித்தொகையும் அளிக்கிறது, டாக்டர் ரெட்டீஸ் அறக்கட்டளையின் ‘சாஷக்த்’ உதவித்தொகைத் திட்டம். சமூக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய பெண்கள் இந்தியாவில் உள்ள தலைசிறந்த அறிவியல் கல்லூரிகளில் வருடத்துக்கு ரூ.80,000 என்ற ரீதியில் மூன்றாண்டுகளுக்கு ரூ. 2 லட்சத்து 40 ஆயிரம் உதவித்தொகை பெற்று உயர்கல்வி பெறலாம். பிளஸ் 2-வில் அறிவியல் பாடங்களில் உயர் மதிப்பெண், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகையுடன் நாட்டில் உள்ள 12 அறிவியல் கல்லூரிகளில் படிக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் உள்ள சென்னை கிறிஸ்தவக் கல்லூரி, ஸ்டெல்லா மேரி கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பயிலலாம்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 ஜூலை 2019
விண்ணப்பிக்க: http://www.sashaktscholarship.org/
தொடர்புக்கு: info@sashaktscholarship.org.
தடம் பதிக்கும் பத்திரிகையாளர்!
இளம் பெண் பத்திரிகையாளர் களை ஊக்கப்படுத்தும் விதமாக சன்ஸ்கிருதி அறக்கட்டளை ரூ.1 லட்சத்தை ‘பிரபா தத்’ உதவித் தொகைத் திட்டத்தில் அளிக்கிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அச்சு ஊடகத்தில் பத்திரிகையாளராகப் பணிபுரிய வேண்டும். வருடம் முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு 25-40 உட்பட்டவராக இருத்தல் அவசியம். சமகாலத்துக்குப் பொருத்தமான எந்தத் தலைப்பிலும் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். பணிவாழ்க்கை தொடர்பான விவரங்கள், ஆராய்ச்சிக்கான உத்தேசத் திட்டம், ஏற்கெனவே பிரசுரமான ஐந்து கட்டுரைகளின் நகல் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். தமிழ், இந்தி, உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலோ ஆங்கிலத்திலோ ஆராய்ச்சியை மேற்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க: fellowships@sanskritifoundation.org
கூடுதல் தகவலுக்கு: http://www.sanskritifoundation.org/prabha-dutt-fellowship.htm
முனைவருக்கும் மேலே போகலாம்!
முனைவர் பட்டம் பெற்ற பிறகும் திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல காரணங்களால் பெண்களால் மேற்கொண்டு தங்களுடைய துறையில் செல்ல முடியாமல் போய்விடுகிறது. இதை மனத்தில் கொண்டு சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் போஸ்ட் டாக்டரல் ஊக்கத்தொகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்ற இந்தியப் பெண்களுக்கு மாதத்துக்கு ரூ.35,000 ஊக்கத்தொகையாக வழங்கும் திட்டம் இது. இரண்டு முதல் ஆறு மாதம் வரை இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். வயது வரம்பு ஏதும் இல்லை. ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களையும் விண்ணப்பிக்கும் முறையும் தெரிந்துகொள்ள: https://www.iitm.ac.in/content/post-doctoral-fellowship-iit-madras
தொழில்நுட்பக் கில்‘லேடி’!
தொழில்நுட்பத் துறையில் பெண்கள் தடம் பதிக்க அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு ‘ பிரகதி உதவித்தொகை’ வழங்குகிறது. இதன் மூலம் தொழில்நுட்பம் சார்ந்த இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பை மேற்கொள்ள மொத்தம் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். இட ஒதுக்கீட்டின் முறைப்படி இந்த உதவித்தொகைக்குத் தகுதியான மாணவிகள் தேர்வுசெய்யப்படுவார்கள். இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் சேரும் மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 2019-ல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவிகள்தாம் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என்பதால் தற்போது பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவிகள் இதற்குக் குறிவைக்கலாம்.
தகவலுக்கு: www.aicte-india.org
விளிம்பில் இருந்து மய்யத்துக்கு!
சமூக அடுக்கில் பெண்கள் எப்போதுமே பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பது ஒரு புறம் இருக்கச் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை என்பதுதான் இன்னமும் வேதனையான உண்மை.இந்நிலையில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள்,பெளத்தர்கள், பார்சி இன மக்களில் மகளிரின் நலன் கருதிச் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம், ‘பேகம் மவுலானா ஆசாத்’ தேசிய உதவித்தொகைத் திட்டத்தை முன்னெடுத்துவருகிறது.ஒன்பதாம் வகுப்பு தொடங்கி முனைவர் பட்டம் மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவிகள்வரை பலதரப்பட்ட உதவித்தொகையும் ஊக்கத்தொகையும் இதன்கீழ் வழங்கப்படுகின்றன.
கடைசி நாள்: 15 அக்டோபர் 2019
முழு விவரம் அறிய:https://bit.ly/2Xzgnqn
பெண்களுக்கான உரிமைகளில், வாய்ப்புகளில், பலன்களில்,பொறுப்புகளில் சமத்துவம் எதிரொலிக்கும்போதுதான் பாலினச் சமத்துவம் சாத்தியப்படும். அதில் கல்வி என்ற களத்தில் அனைத்துத் தரப்பைச் சேர்ந்த பெண்களும் சாதிக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தில் தங்களுக்கு ஊக்கமும் உதவியும் அளிக்க நீளும் அத்தனை கரங்களையும் உற்சாகத்தோடு பற்றிக்கொண்டு ஒன்றிணைந்து நடைபோடலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT