Published : 26 Mar 2019 12:00 PM
Last Updated : 26 Mar 2019 12:00 PM
இந்த வாட்ஸ்அப் உரையாடல் நிகழ்ந்து ஒரு மாதமாகியும் இன்று வரை தெலுங்கில் ‘content writing’ தெரிந்தவர்கள் கிடைத்தபாடில்லை. இதுபோன்று நூற்றுக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் இன்று நம்மைச் சுற்றி உருவாகி யிருக்கின்றன.
ஆனால், அவற்றைக் குறித்த விழிப்புணர்வோ அவற்றுக்கு ஏற்ற தகவமைப்போ நம்மிடம் இருக்கிறதா? ஒட்டுமொத்த இந்திய இளைஞர்களில் பெரும்பான்மை யினருக்குப் புதிய பணிச் சந்தை குறித்த பார்வை மங்கலாகத்தான் இருக்கிறது என்பதை அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆளில்லாப் பணிகள்
இணையதளம் வழியாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 14-21 வயதுக்கு இடைப்பட்ட இந்திய மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு இது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 93 சதவீதத்தினர் ஏழு விதமான பணிகளுக்கு மட்டுமே குறிவைப்பது இதில் தெரியவந்துள்ளது. மருத்துவம், பொறியியல், கணக்குப்பதிவியல்-நிதி, மேலாண்மை, வடிவமைப்பு, சட்டம், கணினிப் பயன்பாட்டியல்- தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏழு துறைகள் மட்டுமே அவர்களுடைய இலக்குப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.
இன்றைய தேதியில் இந்தியாவில் ‘எதிக்கல் ஹேக்கிங்’, கலை இயக்கம், ஒளிப்படக் கலை, பங்குச் சந்தை, நகை வடிவமைப்பு, ஆக்குபேஷனல் தெரபி உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள் உருவாகி உள்ளன. ஆனாலும், வேலைச்சந்தை 30 சதவீதம் தகுதியான பணியாளர் கிடைக்காமல் காலியாக உள்ளது.
குறைத்து மதிப்பிடுகிறோம்!
தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் புதிய பணிகள் குறித்தும் நம் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்வதைவிடவும் பெற்றோர் தரும் அழுத்தத்தை இதில் விவாதிக்க வேண்டியிருக்கிறது என்கிறார் டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுச் சென்னை வி.ஐ.டி. சட்டக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்துவரும் முனைவர் ஆனந்தக் கிருஷ்ணராஜ்.
“சட்டம் படித் தாலே வக்கீலாகி நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி வரும் என்ற எண்ணத்திலேயே, பல பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை இந்தத் துறைக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. ஆனால், சமீபகாலத்தில் சட்டம் படித்தவர்களுக்குப் பல புதிய பணி வாய்ப்புகள் பிரபலமாகி வருகின்றன.
இளநிலைச் சட்டம் படித்திருந்தாலே கார்ப்பரேட் நிறுவனங்களில் சட்ட ஆலோசகர் ஆகலாம். பி.பி.ஓ.க்களிலும் சட்டரீதியான சந்தேகங்களை நிவர்த்திசெய்யும் பணியில் அமர்த்தப்படலாம். இதேபோல மிகவும் குறைத்து மதிப்பிடப்படும் மற்றொன்று மொழித் துறை. பன்மொழிகளைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் சிலருக்கு இயல்பிலேயே இருக்கும். ஆனால், அதனால் என்ன பயன் என்று நினைக்கிறார்கள்.
உலகமயமாக்கத்தால் சர்வதேச மொழிகளை அறிந்தவர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானிய மொழி போன்ற ஐரோப்பிய மொழி வித்தகர்களுக்கு மட்டுமல்ல கொரியன், ஜப்பானிய மொழி, சீன மொழி உள்ளிட்ட ஆசிய மொழி வல்லுநர்களுக்கும் மவுசு அதிகம் உள்ளது.
சர்வதேச மொழிகளில் சான்றிதழ் படிப்போ பட்டப் படிப்போ முடித்திருந்தால் பன்னாட்டு நிறுவனங்களில் மொழிபெயர்ப்பாளர், பிராந்திய வர்த்தக மேலாளர், மின்னஞ்சல்-ஆவணங்கள் வரைவாளர், மொழி ஆராய்ச்சித் துறைகளில் ஆசிரியர் உள்ளிட்ட பல பணிகள் காத்திருக்கின்றன.
ஹைதராபாத் English and Foreign Language பல்கலைக்கழகம், ஜெ.என்.யூ., சர்வதேச மொழிகளைப் பயிற்றுவிப்பதில் பிரசித்திபெற்றவை. குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயத்தைப் பெற்றோர் அறிவுபூர்வமாக அணுகத் தொடங்கினாலே புதிய வாய்ப்புகள் கண் முன்னே விரியும்” என்கிறார் ஆனந்தக் கிருஷ்ணராஜ்.
மூன்றில் ஒரு பங்கு செலவு
லட்சங்களில் செலவழித்து மேற்படிப்பு படித்தால் மட்டுமே கை நிறையச் சம்பாதிக்கக்கூடிய பணிவாழ்க்கை அமையும் என்னும் பொதுப்புத்தியும் இதற்குப் பின்னால் இருக்கும் மற்றொரு சிக்கல் எனலாம்.
“தகவல் யுகத்தில் தகவலே மூலதனம். ஆகையால், இன்றைய தேதியில் உயர் சம்பளம் பெறுபவர்களில் ‘டேட்டா அனலிஸ்ட்’ வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். இந்தப் பணிக்கு பி.இ. படித்தவர்களைக்காட்டிலும் பி.ஸ்டாட். (Bachelor of Statistics) படித்தவர்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.
அதிலும் இந்தப் படிப்பை கொல்கத்தாவில் உள்ள இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட் போன்ற உயர்தரக் கல்வி நிறுவனத்தில் படித்தால் ஊக்கத்தொகையுடன் கல்வி பெறலாம். படித்தவுடன் வேலையும் நிச்சயம்.பொறியியல் படிக்க ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்குதான் இதற்கு ஆகும். உலக நாடுகளின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் பெரும்சக்தி பொருளாதாரமாக இருந்தாலும், மற்ற கலைப் படிப்புகளைப் போலவே பொருளியலும் உதாசீனப்படுத்தப்படுவது நம் மாணவர்களுக்குப் பின்னடைவே.
‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்’-ல் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் பொருளியல் பட்டம் மிகப் பெரிய திறவுகோல். அதேபோல, பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேசக் கவலையால், எம்.ஏ. பருவநிலை மாற்றம் பட்டப்படிப்புக்கு மதிப்புக் கூடியிருக்கிறது. நிதித் துறையில் மியூச்சுவல் ஃபண்ட், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிபுணர்களுக்குத் தேவை அதிகரித்துவருகிறது. ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ பட்டதாரிகளுக்கு உயர் சம்பளத்துடன் இந்த வேலை நிச்சயம்.
இன்னும் நூற்றுக்கணக்கான பணிப் பிரிவுகள் இன்று தோன்றியுள்ளன. அவற்றை உற்றுக் கவனித்து நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் கட்டமாக வெளி மாநிலங்களுக்குச் சென்று, விடுதியில் தங்கிப் படிப்பது தொடர்பான தயக்கத்தை நம்முடைய மாணவர்களும் பெற்றோரும் உதறித்தள்ள வேண்டும்”என்கிறார் வங்கியியல்-நிதியியல்-ரிஸ்க் மேனேஜ்மென்ட்டில் 14 வருட அனுபவம் பெற்ற மதுரை அம்பிகா கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப் பாளரான பேராசிரியர் ஜெயந்தன்.
ஏற்கெனவே நடந்து பழகிய பாதையில் பயணம் செல்வதே பாதுகாப்பு என்ற எண்ணம் நம்மிடம் காலங்காலமாக ஊறிப்போய் இருக்கிறது. என்ன படிக்கலாம், எங்கே பணிபுரியலாம் என்பதையும் இந்த எண்ணமே பேரளவில் தீர்மானிக்கிறது. ஆனால், சமூகத்தால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பணிவாழ்க்கையை மட்டுமே பெரும்பாலோர் நாடிச் செல்வதால் தங்களுடைய தனித்திறமைகளுக்கு இடமளிக்கும் பணிச்சூழலைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பலரும் ஒருபுறம் நழுவவிடுகிறார்கள். மறுபுறம் ஒரு சில வேலைகளுக்கு மட்டும் பலர் முட்டிமோதுவதால் வேலையில்லாத் திண்டாட்டமும் தீராது.
புதிய பாதையை வகுக்கத் துணிந்தால் நம் லட்சியத்துக்குப் பின்னால் லட்சங்கள் ஓடிவரும்.
தொடர்புக்கு: susithra.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT