Published : 26 Mar 2019 11:30 AM
Last Updated : 26 Mar 2019 11:30 AM
“ஐயா, இவன் மூக்குல குத்திட்டான்யா!” என்று அழுதபடியே கேட்டது ஒரு மாணவனின் அலறல்.
முகம் நிறைந்த கோபத்துடன் பக்கத்திலிருந்தவனைப் பார்த்து,
“ஏன் அடிச்சே? எத்தனை தடவை சொல்றது யாரும் யாரையும் அடிக்கக் கூடாதுன்னு!” என்று கத்தினேன்.
“என் முதுகில் குத்தினான்யா!” என்று பதில் சொன்னவனின் முகம் பாதி அழுகை காட்டியது.
“ஒருத்தன் வேணும்னே அடிச்சாகூட, “ஏன் அடிச்சே? எனக்கு வலிக்குது. உன்னை மன்னிச்சிடுறேன். இனிமேல் இப்படிச் செய்யாதேன்னு சொல்லுங்கன்னு சொல்லிக்கிட்டேதானே இருக்கேன்” என்றேன். இதைச் சொல்லும்போதே என் மனத்தில் பல்வேறு எண்ணங்கள்.
சொல்லும் செயலும்
ஆண்டு முழுவதும் தினசரி சொல்லிக்கொண்டே இருக்கிறேன். ஒரு பாட வேளைக்குள் எத்தனை சண்டைகள். இதற்கு என்னதான் தீர்வு?
ஆனால் ஒன்று!
“ஏன் அடித்தாய்?” என்று கேட்டபோது எனது முகத்தில் நிறையக் கோபம்தானே இருந்தது! அதை எவ்வளவு கடுமையான வார்த்தைகளில் காட்டினேன். அவன் குழந்தை. செயலில் காட்டிவிட்டான்.
பெரியவர்கள், குழந்தைகள் முன்பாக அன்பாக நடந்துகொண்டால் நம்மைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அப்படியான சூழல் பள்ளியிலும் வெளியிலும் இருக்கிறதா? குழந்தைகளிடம் அன்பைக் குறித்துப் பேச வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்லிலும் செயலிலும் அன்பைக் காட்டவேண்டும். அன்பே அனைத்தையும் மாற்றும் சக்தி. “மாணவர்களே! மூன்றாம் பருவத்தில் இரண்டு இயல்கள் இதைத்தான் அதிகம் சொல்லுகின்றன” என்று சொல்லியபடியே கரும்பலகையில் ‘அன்பு’ என்று எழுதினேன்.
விடாது குலைக்கும் நாய்!
“அன்பு என்ற வார்த்தையைக் கேட்டதும் உங்க மனத்தில் என்ன தோணுது? அதை நோட்டில் எழுதுங்க”.
பாசம், நேசம், நட்பு, கருணை, உண்மை, இன்பம், பணிவு, ஒழுக்கம், நன்மை, உறவு, மகிழ்ச்சி, கடமை, காதல், சொந்தம் என்று பல வார்த்தைகளை எழுதியிருந்தார்கள். அனைத்தையும் கரும்பலகையில் எழுதினேன். “அடுத்த பாடவேளையில் ஒரு படம் பார்க்கலாம்” என்றேன். வகுப்பறை மகிழ்ச்சியால் நிறைந்தது.
‘The Dog’ என்ற குறும்படத்தைத் திரையிட்டேன். அன்பாக மனிதர்களை நெருங்கித் துன்பம் செய்கிறது ஒரு தெரு நாய். பல்வேறு மனிதர்களுக்கு அதன் செயல்கள் துன்பத்தைத் தந்துகொண்டே இருக்கின்றன. இரவு நேரம் குலைத்துக்கொண்டே இருப்பதால் அருகிலுள்ள வீட்டுக்காரர் அந்த நாயைக் குறித்துப் புகார் அளிக்கிறார்.
தன்னைப் பிடிக்க வந்தவரிடமிருந்து நாய் தப்பிக்க முயல்கிறது. அதில் அவர் காயம் படுகிறார். கோபத்தில் நாயைச் சுட்டுவிடுகிறார். அதன் இருப்பிடமான பாதாளச் சாக்கடை மூடி மேல் படுத்தபடி அழுதுகொண்டே இறக்கிறது. நாயின் கண்ணீர்த் துளி பாதாளச் சாக்கடைக்குள் விழ, கதையின் முக்கியத் திருப்பம் நிகழ்கிறது.
படம் பார்த்ததும் அனைவரின் முகங்களும் இளகியிருந்தன. வகுப்பறைக்கு வந்தபின் கரும்பலகையில் ‘அன்பு’ என்று எழுதினேன்.
அவர்களாகவே சொல்லத் தொடங்கினார்கள். “கருணை, இரக்கம், மற்றவர்களுக்கு உதவுதல், நல்லது செய்தல், மற்றவர்களுக்காக கவலைப்படுதல், விட்டுக்கொடுத்தல்”. அனைத்தையும் எழுதினேன். கலந்துரையாடல் தொடர்ந்தது.
செயலில் அன்பை வெளிப்படுத்தும் சமூகத்தையே உருவாக்க வேண்டும். நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி குழந்தைகள். அவர்களிடம் தெரியும் வன்முறை நமது செயல்பாடுகளின் பிரதிபலிப்பே!
- கட்டுரையாளர், பள்ளி ஆசிரியர்,
தொடர்புக்கு: artsiva13@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT