Published : 12 Feb 2019 11:42 AM
Last Updated : 12 Feb 2019 11:42 AM
தேசிய அளவில் கல்வியில் நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலங்களில் ஒன்று தமிழகம். ஆனாலும், பெருவாரியான தமிழக மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைக் கற்கும் பிரகாசமான வாய்ப்பை வருடாவருடம் நழுவவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன் தமிழக மாணவர்கள் பலரும் வட இந்தியாவின் பழமையான மத்தியப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கல்வி பயிலும் நிலை இருந்தது. ஆனால், தனியார் உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 1980-களில் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் பிறகு வட மாநிலங்களைத் தேடி படிக்கச் செல்லும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை பெருகினால் தமிழக மாணவர்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும்.
அடுத்த கட்டப் பாய்ச்சல்
ஏனெனில், மத்தியப் பல்கலைக் கழகங்களில் நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அயல்நாட்டு மாணவர்களும் தங்கிப் பயில்கின்றனர். இப்படிப் பலதரப்பட்ட மாணவர்களுடன் இணைந்து படித்து அவர்களுடன் பழகும்போது, தொடர்பாற்றல் திறன் முதற்கொண்டு பல்வேறு ஆளுமைத் திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இப்படியான சூழலில் கல்வி பயிலும்போது ஒரு மாணவருக்கு வேலைவாய்ப்புக்கு அடிப்படையாகச் சொல்லப்படும் மென்திறன்கள் லாகவமாக வந்துசேரும்.
அதேபோல அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசியத் திறனாய்வு தேர்வுகள் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இங்கே படிப்பவர் களில் அநேகர் உயர்கல்விக்கான சேர்க்கை பெற்றுக் குடிமைப் பணிக்கான யூ.பி.எஸ்.சி. உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்வதும் வழக்கம். இதற்கு ஏற்றவகையில், வட மாநிலங்களின் மத்தியப் பல்கலைக் கழகங்களில் வரலாறு, சமூகவியல் பாடப் பிரிவுகள் அதிக முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன. உலக நாடுகளில் பணியாற்றும் இந்தப் பல்கலைக்கழகங்களின் முன்னாள் மாணவர்களின் உதவிகளும் எளிதாகக் கிடைத்து விடுகின்றன.
தமிழ் இலக்கியமும் படிக்கலாம்
வட இந்தியாவின் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கல்விக்கட்டணம் மிகவும் குறைவு. தமிழகத்தின் தனியார் பள்ளிகளின் நர்சரி வகுப்புகளின் கட்டணத்தைவிடக் குறைவு. இத்துடன், சிறந்த மாணவர்களுக்குப் பல்வகை உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட வையும் அளிக்கப்படுகின்றன.
பெரும்பாலான மத்தியப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் கல்லூரிகளும், தமிழுக்கான பாடப் பிரிவுகளும் உண்டு. உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் தமிழ்ப் பாடப் பிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இளநிலை தொடங்கி முதுநிலை, எம்.பில்., முனைவர் பட்டம்வரை இங்கே தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.
இங்கே தமிழ் பயிலும் மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் அயல் நாட்டு மொழிகளையும் பிற இந்திய மொழிகளையும் கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதனால், இங்கே தமிழில் பட்டம் பெற்றவர்களுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகம். இதுபோல, சமீப காலமாகத் தமிழுடன் சேர்த்துப் பிற மொழி கற்றவர்கள் பலரும் ஆசியாவின் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தி கட்டாயம் இல்லை!
வட மாநிலங்களில் கல்வி பயில இந்தி மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. மத்தியப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஆங்கில மொழியில் கல்வி போதிக்கப்படுவதால், இந்திக்கான அவசியம் இல்லை. எனினும், அந்தப் பகுதிகளில் வழக்காடு மொழியாக இந்தி உள்ளதால் சில மாதங்களில் கற்று எளிதாகச் சமாளிக்கலாம். ஆங்கிலம் அறிந்தவர்களும் நடைமுறையில் பயன்படுத்தலாம். தட்பவெப்ப நிலையைப் பொறுத்தவரை கடுமையான வெயிலும் குளிரும் நிலவுவது உண்டு. எனினும், இவை சமாளிக்கும் வகையில்தான் இருக்கும்.
குறைந்த செலவில் தங்கிப் படிக்கலாம்
மத்திய பல்கலைக்கழகங்களில் பெரும்பாலானவை தங்கிப் பயிலும் வசதி படைத்தவை. இவற்றில் சேரும் 90 சதவீத மாணவர்களுக்கு விடுதி வசதி கிடைத்துவிடுகிறது. விடுதி, உணவு இரண்டுக்குமான கட்டணம் உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாதம் சுமார் 1,500 ரூபாய் மட்டுமே. இது டெல்லியில் சுமார் ரூ.500 கூடும். கல்லூரிகளில் விடுதி வசதி இல்லை. இதனால், வெளியில் மற்ற மாணவர்களுடன் இணைந்து தங்குபவர்களுக்கு மாதம் 3000 ரூபாய்வரை செலவாகிறது. கல்விக் கட்டணமும் வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.8,000 மட்டுமே.
விரைந்து விண்ணப்பியுங்கள்!
மத்தியப் பல்கலைக்கழகங்களில் சேரத் தமிழகக் கல்வி நிறுவனங்களைவிட ஓரிரு மாதங்கள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். பிப்ரவரியில் தொடங்கி மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பிக்கும் தேதி முடிந்துவிடும். இதற்காக அந்தப் பல்கலைக்கழகங்களின் இணையதளங்களில் கவனத்தைச் செலுத்த வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பித்தபின் நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடைபெறும்.
சில பாடப் பிரிவுகளுக்கு நேர்முகத் தேர்வும் உண்டு. இதற்கான பாடத்திட்டம் குறித்த விளக்கம் இணையதளங்களில் உள்ளது. மத்திய அரசின் விதிமுறைகளின்படி அனைத்து இட ஒதுக்கீடுகளும் உண்டு. இதில், சில பல்கலைக்கழகங்களில் தொலைதூர மாநிலங்களில் இருந்து கல்வி பயில வருபவர்களுக்காகக் குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடும் அளிக்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளதால் அந்தப் பலனைப் பெற விண்ணப்பங்களில் தவறாமல் குறிப்பிட வேண்டும்.
இனியும் தமிழக மாணவர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடலாமா!
தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT